நாங்கள் புதுக்கவிஞர்கள்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

அமானுஷ்ய புத்ரன்


புற்றீசல்களாய்
புறப்பட்ட
புதுக்கவிஞர்கள் கூட்டம்
நாங்கள்.
அந்துப்பூச்சிகளாய்
வெள்ளைக்காகிதங்களை
அரித்து தின்னுவதை விட
வேறு என்ன வேலை.
“எமக்குத் தொழில் கவிதை”
என்று மீசை
முறுக்கிக்கொண்டு
கவிஅரங்கங்கள் தோறும்
காவடி எடுப்பதும்
எங்கள் வேலைதான்.
இமயமலை கட்டுவதாய்
எண்ணிக்கொண்டு
வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டே போவோம்.
இறந்த உடலுக்கு
வெட்டியான் அடுக்கும்
வரட்டிகளில் கூட
உயிர் தூவிக்கிடக்கும்.
நாங்கள் அடுக்கும்
சொற்கூட்டங்களிலோ
மன விரிசல்கள்
வாய் பிளந்து கிடக்கும்.
எருக்கம் பூக்களில்
மல்லிகைகளின் முகவரிகளை
தேடிக்கொண்டிருப்போம்.
ஒரு தென்னை மரத்தின்
நிழல்…
ஒரு மைனாக்குருவியின்
கீச்சுக்குரல்கள்….
நீர்க்குமிழிகளில்
எங்களுக்கு மட்டுமே
தெரியும் சில
நீல நயனங்கள்…
என்றெல்லாம்
பேனாக்களில்
கூடு கட்டிக்கிடப்போம்.
ஒன்றுமே இல்லாத
மௌனத்தை
உருட்டிப்பிசைந்து
ஒரு பேய் வீடு கட்டி
குடியிருப்போம்.

தொன்மை தோய்ந்த
வரலாறுகள் செறிந்த
சதைப்பிடிப்பான
மொழியைக்கூட
தாய்மொழி என்ற
ஒரே காரணத்திற்காக
தள்ளிவைத்துவிட்டு
சிந்தனை வறண்ட
எலும்புக்கூடுகளின்
சித்திரத்தை
சமைத்துவைத்து
அவார்டுக்காக
அருந்தவம் கிடப்போம்.

ஒவ்வொரு புதுக்கவிதை
படைக்கும் போதும்
எங்கள் தோள்களில்
வர்ணப்பிரதேசங்களாய்
பட்டாம்பூச்சிகள்
மொய்த்திருக்கும்.
ஏனெனில்
கனவுகளின்
கனபரிமாணங்கள் நாங்கள்.
காதலைச் சொல்லும்போது
மெல்லிய மயிலிறகுகளில்
தேர்வலம் வருவோம்.
ஆனால் அதே காதல் தான்
மூழ்கிக்கொண்டிருக்கும்
இளைய யுகத்தின் கழுத்தில்
கட்டப்பட்ட பாறாங்கல்
என்று
எங்களுக்கும் தெரியும்
ஆனாலும்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
வாழ்க்கையை
சாவு என்று
அர்த்தப்படுத்திக்கொள்வோம்.
மரணத்தை
இனிமையான
ஜனனம்
என்று கவிதை
படைத்திடுவோம்.
நீங்கள் அழுது காட்டுவதை
நாங்கள்
எழுதிக்காட்டுவோம்.
கண்ணீரின் விழுதுகளில்
பிரம்மனின் தொப்பூள் கொடி
ஊஞ்சல் கட்டி
வைத்திருப்பதாய்
மூளியான வரிகளில்
மூண்டெழுந்த கற்பனையை
தோரணம் கட்டி வைப்போம்.
ஏனெனில் நாங்கள்
புதுக்கவிஞர்கள்.

தாய் மொழி…தமிழ் மொழி..
என்றெல்லாம்
பிதற்றிக்கொண்டிருக்க
மாட்டோம்.
தாய்மொழியின் பேச்சை விட
வேற்று மொழிக்கூச்சல்களே
சூடாக இங்கு வியாபாரம்
ஆகிறது.
“யாதுமாகி நின்றாய்” என்று
இறைவனைப்பாடினால்
இவர்களுக்கு புரிந்து போய்
விடுகிறது.
“பூதேஸ்வரா” என்று
இரைச்சல் எழுப்பினால் தான்
இவர்களுக்கு புரியாமலேயே
இருக்கிறது.
புரியாமலேயே இருக்கிற
போதையே
இவர்களுக்கு “சாமி”.
“தாமரைச்செல்வன்”
என்று ஆண்டவனை
அசிங்கமாகவெல்லாம்
அழைக்க மாட்டோம்.
“புண்டரிக நாதன்”
என்று அழகாய்
குரல் கொடுப்போம்.
நீங்கள் புரிந்து
கொள்வதற்காக
நாங்கள் புதுக்கவிதைகள்
எழுதவில்லை.
புரியாமை என்னும்
புதைமணலில்
நீங்கள்
புதைந்து கொண்டே
இருப்பதற்கே
நாங்கள் புதுக்கவிதைகள்
எழுதுகிறோம்.

மயிரை சிலுப்பிக்கொண்டு
நரம்பு புடைத்துக்கொண்டு
ஏதோ ஒரு
நட்சத்திரத்தைப்பிடுங்கி
தலையணை அருகே
நட்டு வைத்துக்கொண்டு…..
தூக்கம் வராத
மண்டையோட்டுக்குள்
மத்தாப்பு
கொளுத்திக்கொள்ளும்
மந்திர வாக்கியங்களில்
மண்டிக்கிடந்து….
சூன்யத்துள் சூளைவத்து
எங்களைச்
சுட்டெரித்துக்கொண்டு
அந்த சாம்பலிலிருந்து
நாளையே
பீனிக்ஸாய் பறப்போம் என்று
பீலா விட்டுக்கொண்டு….
பிய்ந்து கிடப்போம்.
ஏனெனில் நாங்கள்
புதுக்கவிஞர்கள்.

எங்கள் சொல்லாடல்களில்
புகைமூட்டம்
கவ்விக்கிடக்கும்.
காதல் பற்றி
எழுதும்போது மட்டுமே
எங்கள்பேனக்களில்
மின்சாரம் பாயும்.
காதல் இல்லாவிட்டால்
இந்த சமுதாயம் கூட
எங்களுக்கு
ஒரு சவக்கிடங்கு தான்.

காதல் பரவசம்
காய்ந்து போன
முதியோர்களின்
முனுமுணுப்புகளை
நாங்கள்
செவிசாய்ப்பதில்லை.

காதலின் ஆவேசம் புரியாமல்
இளம்புயலாய் சீறும்
புதிய தலைமுறைகளோடு
மோத முடியாமல்
ஒதுங்கிப்போகும்
கடல் நுரைகளே.
நரைத்துப்போன சிந்தனைகளே
சிதறிப்போங்கள்.
கிழச்சருகுகளே
நாங்கள் மின்னலின்
கீற்றுகள்
ஈசிச்சேரில்
அடைகாத்துகிடக்கும்
மரணப்பறவைகளே.
உங்கள் புலம்பல்களை
எங்கள் மீது
முட்டையிடவெண்டாம்.

எங்கள் கவிதைகள் காட்டாறு.
பழமைப்பித்து கொண்டு
எங்களை
கட்டிப்போடமுடியாது.
நாங்கள் எழுதுவது
யாருக்கும்
புரியத்தேவையில்லை.
வானத்தின்
அந்தப் புரத்தில்
நாங்கள் நின்று
கொண்டிருப்பது
உங்களுக்குத் தெரியாது.
நீங்கள் மண்னின்
இந்தப்புரத்தில்
புழுக்களாய்
மக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
புயலின் வாசனை
உங்களுக்கு தெரியுமா?

எங்களுக்கு
தெரிந்த விஞ்ஞானம் எல்லாம்
காதல் மட்டும் தான்.
அதன் துடிப்புகள் தான்
எலக்ட்ரான்கள்.
முத்தத்தின் சத்தங்கள்
எல்லாம்
பொக்ரான் அணுகுண்டு
வெடிக்கும்
சத்தங்கள்.
காதலியின் கன்னக்
குழிகளில்
“குவாண்டம் மெகானிக்ஸ்கள்”.
அவளைக்கண்டதும் ஏற்படும்
அதிர்வுக்குழைவுகளே
“ஸ்ட்ரிங்” கோட்பாடுகள்.
காதல் எனும் சவ்வுப்படலமே
“மெம்ப்ரேன்” எனப்படும்
“எம்” தியரி.
இந்த
பிரபஞ்சக்கோட்பாட்டில்
எங்கள் முகத்தோடு முகம்
உரசும் போது
ஏற்பட்ட முதல்
“பெருவெடிப்பே”
“பிக் பேங்க்” என்று பெயர்
பெற்றது.
அய்யோ
அபத்தக்களஞ்சியம் போதும்
என்று நீங்கள்
பல்லை நற நறத்த போதும்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
ஆம்.
நாங்கள் புதுக்கவிஞர்கள்.


அமானுஷ்ய புத்ரன்.

epsi_van@hotmail.com

Series Navigation

அமானுஷ்ய புத்ரன்

அமானுஷ்ய புத்ரன்