பெரியபுராணம் – 114 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

பா.சத்தியமோகன்


3264.

நன்மை மிக்க மாலை அணிந்த சுந்தரர்

பொன் போன்ற திருவீதியை வணங்கி

புண்ணியத்தின் விளைவாய் ஓங்கி நிற்கும் வாசல் அடைந்தார்

வாசல் முன்பு நிலமுற விழுந்து வணங்கினார் உள்ளே புகுந்தார்

பசும்பொன் வேய்ந்த சுற்று மாளிகையைச் சூழ்ந்து வந்து தொழுதார்

கைகளைத் தலைமீது குவித்தார்.

3265.

ஆனந்தக்கூத்தன் ஆடுகின்ற திருமுன்பு உள்ள

அழகிய பொன் கோபுரத்தின் வழியே

உள்ளே புகுந்து சென்று வணங்கினார்

பெருகும் ஒளி வளர்கின்ற

பொன்னம்பலத்தில் ஆடும் திருவடிகள் சேர்ந்ததும்

உள்ளே நிறைந்து காணப்படுகின்ற

ஆனந்த வெள்ளமான கண்ணீர்

கண்களிலிருந்து இடைவிடாமல் வழிந்தது.

3266.

பாடித்துதிக்கும் வாய் குளறியது

தழுதழுத்தது

பெருவிருப்பத்துடன் திருக்களிற்றுப்படி வணங்கினார்

உடம்பின் ஐந்து உறுப்புகளுடன்

எட்டு உறுப்புகளாலும் வணங்கி

பெருகிய பேரன்பு வலுப்பட

உள்ளத்தில் நிறைந்து நீண்டது ஆனந்தக்கண்ணீர்

திருகண்களிலிருந்து விடாது பொழிந்தது.

3267.

“மடித்தாடும் அடிமைக்கண்” எனத்தொடங்கிய பதிகத்தில்

உயிர்களுக்கு அருளும் விதமாக

இறைவரை நெருங்கிச் செய்யும் சிவநெறியில் நின்றவர்கள்

தவறி

இயமன்கைப்பட்டு

நரகத்தில் சேராதபடி

தடுத்து ஆட்கொள்ளும் இறைவரைப்

பேரூரில் கண்ட நிலையைச் சிறப்பித்தார்.

“ஒப்பில்லாத தனிக்கூத்து ஆடுபவரை

மனமே நாம் பெற்றவாறுதான் என்னே!”

என்று களிப்பால் விரும்பிப்பாடி-

3268.

பிரியமுடியாத அளவு

அருள் பெற்று வெளியே வந்தார்

திருவீதி அடைந்து வணங்கினார்

அந்தணர்கள் போற்றும்படி தங்கியிருந்தார்

இறைவருக்கு ஆளான வன்தொண்டரான சுந்தரர்

பிறகு

ஒழியாத பேரன்பினால் அத்தலத்தை வணங்கினார்

இயமனை காலால் உதைத்து அருளிய இறைவரின்

கருப்பறியலூர் வணங்குவதற்குச்

சென்று சேர்ந்தார்.

3269.

கூற்றுவனை உதைத்த சிவபெருமானின்

திருக்கொகுடிக் கோயில் சேர்ந்தார்

கோபுரம் தொழுதார்

அன்பர்கள் சூழ

பொருந்திய காதலுடன்

எல்லையிலா மகிழ்ச்சி மனதில் அடைந்து

அந்தத் தலத்தில் இருந்த போது

புனிதராகிய சிவபெருமானின் நினைவால்

இன்பம் அடைந்தார்

“சிம்மாந்து” எனத்தொடங்கும்

தமிழ்மாலைப் பதிகம் புனைந்து சாற்றினார்

(கொகுடிக்கோயில் – கொகுடி முல்லை வடிவில் அமைந்த கோயில்)

3270.

நெற்றிக்கண் உடைய சிவபெருமான் விரும்பும்

கருப்பறியலூரை கைதொழுதார்

வணங்கி விடைபெற்றார்

கடல்மீன்கள் பாயும்படி நீர்வளமான

திருப்பழனம் எனும் தலம் அடைந்தார்

அங்கு

உமையொரு பாகரான இறைவரின்

திருவடி வணங்கிப் போற்றினார்

துதித்தார்

“முன்னவன்” எனத் தொடங்கும்

அளவற்ற புகழ் கொண்ட திருப்பதிகம் பாடித் துதித்தார்

பிறகு

திருவாழ்கொளிபுத்தூர் செல்லாமல்

புண்ணியரான நம்பிகள் போகும்போது நினைந்து

மீண்டும் புகுந்தார்

“தலைக்கண்” எனத் தொடங்கி போற்றத் துவங்கினார்.

3271.

திருப்பதிகம் பாடியபடியே அங்கு சென்றார்

அடைந்தார்.

தேவர் பெருமானாகிய சிவபெருமானின் கோயில் வாசலில்

உடம்பில் மயிர்க்கூச்செறிய விழுந்து வணங்கினார்.

உள்ளே புகுந்து பணிந்து துதித்தார்

உருகும் அன்புடன் பணிந்து

மலையரசன் மகளான உமையை

இடப்பாகம் கொண்ட இறைவரைத் துதித்தார்

வெளியே வந்தார் தங்கியிருந்தார்

அழகிய மென்மையான

கரும்புகளையுடைய

திருவாழ்கொளிப்புத்தூர் நீங்கினார்

“திருக்கானாட்டு முள்ளூர்” சென்று அடைந்தார் கலந்தார்.

3272.

கானாட்டு முள்ளூரைச் சேரும்போது

கண்நூதலார் சிவபெருமான் எதிர்தோன்றி

காட்சி கொடுக்கக் கண்டு

கொன்றைமலர் தரித்த சடையாரின்

சிவந்த பொற்பாதமலர் கண்டு

தொழுதேன் என வணங்கி

“வள்வாய்” எனத்தொடங்கும் வளமை உடைய தமிழின்

திருப்பதிகம் மலருமாறு போற்றிப்பாடினார்

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த

பூஞ்சோலைகள் கொண்ட

“திருஎதிர்கொள்பாடி” அடைவதற்கும் புறப்பட்டார்.

3273.

எல்லாத்திசைகளும் தொழுது வணங்கும்படி

“மத்தயானை” எனத் தொடங்கி

திருஎதிர்கொள்பாடியை அடைவோம் என்கிற

சித்தநிலைத் திருப்பதிகத்தை பாடி வந்தார்

அருள் செல்வம் மிகுந்த செழுமையான கோவிலை இறைஞ்சினார்

அங்கு

அத்தராகிய சிவபெருமானின் திருவடி வணங்கி

தங்கியிருந்த பிறகு

திருவேள்விக்குடி சேர்ந்தார்

முக்தி தரும் இறைவரை வணங்க

திருத்துருத்தி எனும் தலத்தையும் இணைத்து

“மூப்பதிலை” எனும் திருப்பதிகம் மொழிந்தார் வாழ்ந்தார்.

3274.

இறைவர் காட்டிய திருமணவேள்விக் கோலம்

நம்பி ஆரூரர் கழுத்தில் பொருந்தியது

வணங்கினார்

காதல் நாட்டிய உள்ளத்தோடு

ஊன்றிய உள்ளத்தோடு

பலகாலம் தவம் செய்த தொண்டர்கள் சூழ

அங்கிருந்து புறப்பட்டு

அன்பால் பூட்டி

தம்மை ஆட்கொண்ட இறைவர் வீற்றிருக்கும்

தலங்கள் பலவும் வணங்கினார் இறைஞ்சினார்.

3275.

எந்நாளும் குறைவிலாத பேரன்புடன்

திருத்தொண்டர்கள் அவருடன் வந்தனர்

நஞ்சின் கறை கொண்ட

கரிய கழுத்துடைய சிவபெருமானின்

தலங்கள்பலவும் நயமுடன் வணங்கினார்

மேகங்கள் இளைப்பாறும் சோலைகள் சூழ்ந்த

மலர்த்தடங்கள் நிரம்பிச் சூழ்ந்த

செந்நெல்வயல்கள் மிகுந்த திருவாரூர் சென்றடைந்தார்.

3276.

அருள் செல்வம் நிறைந்த திருவாரூரில்

தேவர்களுடன் முனிவர்களும் நெருங்கிய

கோபுரத்தை வணங்கி

உள்ளே புகுந்தார்

அங்கு

அளவில்லாத காதல் மிகுதியால்

தலை மீது கைகள் குவித்து

மிகுந்த திருத்தொண்டர்களுடன் கூடி

பரமர் திரூருவம் முன்பு சென்றார்

சேர்ந்தார்.

3277.

எந்நாளும் மூப்பிலாத

முதலும் நடுவும் ஆகி

முடிவிலாத

காளைக்கொடியுடன் கூடிய இறைவரை

திரு மூலத்தானத்தில்

தீராத பெருங்காதலுடன் வணங்கினார் இறைஞ்சினார்

வெளியில் வந்து

தாழ்விலாத புகழ் உடைய

பரவையாரின் திருமாளிகை அடைந்தார்.

3278.

பொங்குகின்ற பெரும் விருப்பத்தோடு

கூந்தல் புரிந்த தோழிகள் பலரும் போற்றுமாறு

கண்களும்

சிவந்த கனி போன்ற வாயும் உடைய பரவையார்

நம்பி ஆரூரரின் திருவடி வணங்கி

“எங்களையும் நினைந்து எழுந்து அருளினீரே” என இயம்ப

அவருக்கு இனிய சொற்கள் அளித்தார்

அங்கை நல்லாரான அவருடன்

மகிழ்ந்து தங்கியிருந்த நாட்களில் —

3279.

“திருமுதுக்குன்றத்தில்

சிவபெருமான் நமக்கு அளித்த

நல்ல நிதியாகிய பொன்னை

தூய மணிமுத்தாற்றில் விட்டோம்

அதனைத்

துணைவரான சிவபெருமானின்

திருக்கோயில் மாளிகையின்

மேற்குத் திசையிலுள்ள

கமலாலயம் என்ற குளத்தில்

அவரது அருளாலே

போய் எடுத்துக் கொண்டு வர

என்னுடன் வருக”

எனப் புகன்றார் நம்பி ஆரூரர்.

3280.

மின்னல் போன்ற இடை உடைய பரவையார்

“என்ன அதிசயம் இது!

அதை நீங்கள் சொன்னவிதம்தான் என்னே!”

என புன்முறுவலுடன் விளம்பினார்

மெய் உணர்ந்த நம்பி ஆரூரர்

“நல்ல நெற்றியுடையவளே

என் நாயகனின் அருளால்

குளத்திலிருந்து

பொன் முழுவதும் எடுத்து

உனக்குத் தருவது பொய்க்காது” எனக்கூறினார்.

3281.

அங்கு

அவருடன் பரவையாரும் உடன் வர

அளவு கடந்த விருப்பத்துடன்

பூங்கோயிலுள் மகிழ்ந்து வீற்றிருக்கும்

புராதனரான இறைவரை வணங்கினார்

ஓங்கிய திருமாளிகையை வலம் வந்தார்

அங்கிருந்து

மேற்குபக்கம் உள்ள கமலாலயக் குளம் அடைந்தார்

3282.

மற்றும்

அந்தக் குளத்தின்

வடகிழக்குப் பக்கமுள்ள

கரைக்கு வந்தார் நம்பி ஆரூரர்

பரவையாரை நிறுத்தினார்

கற்றைச் சடை உடைய இறைவரைக் கையால் தொழுதார்

குளத்தில் இறங்கினார்

அன்றைய தினமே இட்டு

அன்றைய நாளே எடுப்பவர் போல

அங்கு தடவினார்

3283.

திருநீற்று அழகராகிய

நம்பி ஆரூரரின் பாட்டினை விரும்பி

திருவிளையாட்டு செய்ய எண்ணி

மாற்று உயர்ந்த செம்பொன்னைக்

குளத்தில் வருவிக்காமல் இருந்தார் இறைவர்

“ஆற்றில் இட்டு குளத்தில் தேடுகிறவரே

உமக்கு

இறைவனின் அருள் புரிந்த விதம் இதுதானோ ! கூறுவீர்? ”

என கொடி போன்ற பரவையார் மொழிந்ததும்

தனித் தொண்டர் ஆருரர் —

3284.

“திருமுதுக்குன்றத்தில் (விருதாசலத்தில்)

முன்பு அருள் செய்தபடியே

பொன்னைத் தந்து அருள்வீர்

மணம் கவிழும் மலர் சூடிய பரவையாரின் சிவந்த வாயில்

நகை (புன்னகை) தோன்றவதன் முன்

பொன்னைத் தந்து அருள்வீர்”

எனும் கருத்துடன் விளங்கும்

“பொன்னால் செய்த மேனியினீர்” எனும் திருப்பதிகம் தொடங்கினார்

மின்னால் செய்த பூணூல் அணிந்த மார்பினரான நம்பி ஆரூரர்.

3285.

தேவர்கள் யாவரும் அறியும்படி

“திருமுதுகுன்றத்தில் தந்த பொருளை

விரைவில் நான் பெறாமல் தளர்கிறேன்

தளர்ச்சியால் வந்த செயலற்ற நிலையை

பரவையாரின் எதிரில் தீர்த்து அருள்க”

எனும் கருத்துடைய பாட்டை வெளியிட்டதும்

இறைவர்

பொன்னை வருவித்தார்

நம்பி ஆரூரர் மேலும் துதித்தார்.

3286.

“எப்போதும் துதிக்காமல் இருந்து அறியேன்”

எனும் கருத்தினை உடைய திருப்பாட்டினை

எல்லா உலகினையும் காத்து அருள்கின்ற

நெற்றிக்கண்ணரான இறைவரை

“அருட்கூத்தனே !

இந்த

கோமளமான பரவையார் முன் பொன் தந்தருள்க” என

நீத்தார்களாகிய துறவியாராலும் தொடர முடியாத

நெறி உடைய நம்பி ஆரூரர் துதித்ததும் —

3287.

கொத்து கொத்தாய் மலர்கின்ற

கொன்றைப் பூக்களை அணிந்த

கூத்தப்பெருமானின் திருவருளால்

வந்து தோன்றியது பொற்குவியல் திரள்

எடுத்து

முறைப்படி நம்பி ஆரூரர் கரையேறினார்

தேவர் உலகத்திலிருந்து மலர்மாரி பொழிந்து

“என்னே அதிசயம் ! யாரால் பெறமுடியும் ! என வியந்து

தொழுதனர் உலகத்திலுள்ளவர்கள்.

(மாரி – மழை)

3288.

உலகம் விரும்பியபடி வந்தது

பொன்னினை

நடுவிலிருந்து எடுத்தார்

மூலமாக

முன்பு

மச்சம் எடுத்துத் தந்த பொன்னுடன் ஒப்பிட்டார்

உரைத்துப் பார்த்தார்

திருநீலகண்டரான இறைவரின் திருவருளால்

தங்கத்தின் மாற்று தாழ்ந்திருந்தது

திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிய திருவடிகளை

வாழ்த்தித் துதித்தார் வன்தொண்டர்

3289.

மீண்டும் நம்பி ஆரூரர் துதித்தார்

மெய்யான அன்பரான அவரது அன்பில்

ஊற்றெடுத்து வந்தது பாடல்

மாற்று உயர்ந்த செம்பொன்னை

ஒரு மாப்பொன்தன்மையும் குறையாமல் காட்டினார்

கூத்தாடும் பெருமான்

மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு

கரையேறினார் நம்பி ஆரூரர்.

3290.

கரையேறினார்

பொன்னையெல்லாம்

வரிசைப்பட ஆண்களின் மேல் ஏற்றுவித்து

நெடிய மாளிகைக்கு பரவையாருடன் அனுப்பினார்

அலை வீசும் கங்கை தாங்கிய

திருமூலத்தானேசுவரரின்

மலர்த்திருவடிகளை வணங்கினார்

அதன்பின் சுந்தரர் திருவீதி வந்தார்.

3291.

வந்தார்

மாளிகையின் உட்புகுந்தார்

அளவிலாத பேர்கள் எல்லையிலாத வகையினில்

மங்கல வாழ்த்துடன்

ஒலி விளங்க ஒலித்தனர்

சிந்தை நிறைவாடும் மகிழ்ச்சியுடன்

பரவையாருடன்

நாவலர் அங்கு தங்கியிருந்தார்.

–இறையருளால் தொடரும்


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்