பெரியபுராணம்- 100 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

பா.சத்தியமோகன்


2827.

மறையவரின் சூளாமணி போன்றவராகிய ஞானசம்பந்தரும்

திருப்பூந்துருத்திக்கு அண்மையில் வந்தருள்கிறார் என்ற

பெருவார்த்தையை வாகீசர் கேட்டருளினார்

உடனே மகிழ்ந்தார்

நம்மை ஆளுடைய பிள்ளையாரை

நாம் எதிர் சென்று இறைஞ்சுவது

முற்பிறவியில் செய்த நல்வினைப்பயன் என்று எண்ணினார்

முகம் மலர்ந்தது அகம் மலர்ந்தது.

2828.

‘’எதிரே சென்று பணிவேன்’’ என எழுகின்ற பெரிய விருப்பமுடன்

கங்கை நதிதங்குகிற சடைமுடியாரின் நல்ல திருவடிகள் தொழுதார்

அந்தத் தலத்திலிருந்தும் புறப்பட்டார் அப்பர்

பரசமயங்களின் கேட்டினை சிதைத்து வென்ற பிள்ளையாரிடம் கூடிய

முதிரும் பெரிய தவம்கொண்ட அடியார்களுடன்

பொருந்துமாறு சென்று சேர்ந்தார்.

2829.

நான்கு திக்குகளிலிருந்தும் வந்த அன்பர்கள்

முத்துச்சின்னம் முழங்கக் கேட்டு

பெருகும் ஆர்வத்தால் ஞானசம்பந்தரை சூழ்ந்தனர்

கூட்ட நெருக்கத்தில்

ஞான சம்பந்தர் காணாதபடி

நிலத்தில் விழுந்து பணிந்தார் அப்பர்பெருமான்

உள்ளத்தை உருக்கி எழும் மனம் ஓங்க

திருத்தொண்டர் கூட்டத்துடன் சேர்ந்திருந்தார்.

2830.

அவ்விதம் வந்து சேர்ந்த

வாக்குக்கு ஈசரான வாகீசராகிய நாவுக்கரசர்

சீகாழியினர் வாழ்வதற்காகத் தோன்றி அருளும் சம்பந்தரை

அழகிய முத்துச்சிவிகையை தாங்குகிறவர்களில் ஒருவராகி

சிந்தை களிப்புற சுமந்து

உள்ளக்களிப்புடன் வந்தார்

திருஞானசம்பந்தர் உள்ளத்தில் வேறொன்று நிகழ்ந்திட

அதை

இவ்வாறு சொல்கின்றார்

2831.

“அப்பர் (திருநாவுக்கரசர்) இப்பொழுது

எங்கு எழுந்தருளினார்?” என்று வினவி அருள

செப்புதற்கும் அரிய புகழுடைய திருநாவுக்கரசர் —

“நிகரில்லாத தவத்தைச் செய்தேன் ஆதலால்

உம் திருவடிகள் தாங்கும் பெரும்பேறு பெற்று உய்ந்தேன் யான்” என்றார்.

2832.

அப்பரின் திருமொழிகள் கேட்டு அஞ்சி

சிவிகையிலிருந்து ஞானசம்பந்தர் இறங்கி அருளி

“இப்படி தாங்கள் செய்தருளினால் என்ன ஆவது!”

என இறைஞ்சினார் பதைபதைத்தார் ஞானசம்பந்தர்

செம்மையே மொழிகின்ற நாவு உடைய அப்பர்–

திருஞானசம்பந்தரை நோக்கி

“வேறு எவ்வாறு செய்தல் தகுந்தது?” என்று கூறி இறைஞ்சினார்.

2833.

சூழ்ந்து நெருங்கி அருகில் இருந்த தொண்டரெல்லாம்

அதனைக் கண்டு

தாழ்ந்து நிலத்தில் பொருந்த வணங்கினர் எழுந்தனர்

தலை மீது கைகளைக் குவித்து வாழ்ந்து

மனம் களிப்புற்று

“இவரை வணங்கப் பெற்றதால்

நாம் ஆழ்ந்துள்ள பிறவிக்கடலிலிருந்து உய்வுற்றோம்”

என அண்டமெல்லாம் கேட்க ஆரவாரம் செய்தனர்.

2834.

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பெருமானை

பெருகும் ஆர்வத்துடன் அணைந்து தழுவிக்கொண்டார்

மணம் கமழும் மலர் போன்ற பிள்ளையாரின் திருவடிகளை வணங்கி

அலைகள் மோதும் புனல் சடையுள்ள இறைவர் வீற்றிருக்கும்

திருப்பூந்துருத்திக்கு

திருநாவுக்கரசர் தானும் உடன் வந்தார்

2835.

அடியார் குழாத்துடன் செல்பவரான ஞானசம்பந்தர்

காளைக்கொடி உடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் கோவில் முன்பு

பணிந்து திருக்கோயில் அருகில் சென்றார்

கோபுரத்தை இறைஞ்சினார்

துன்பமிலாத திருத்தொண்டருடன் தொழத வண்ணம்

எலும்பு உருகுமாறு கோவிலுள் வலம் வந்தார்

பணிந்து வணங்கித் துதித்தார்.

2836.

திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும்

பொய்யிலி அப்பரைப் பணிந்து போற்றிய பிறகு

முற்றத்தில் சேர்ந்த ஞனசம்பந்தரை

சிவந்த சடையுடைய இறைவரின் கோயில் வாயில் முன்பாக

குற்றமற்ற சிறப்புடைய தொண்டர்குழாம் சூழ்ந்தது.

உலகம் உய்யும் பொருட்டு வருகின்ற நாயன்மார்கள் இருவரும்

அடியார்கள் சூழ மகிழ்ந்து

அவர்களுடன் அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருந்தனர்.

2837.

வாக்கின் தனிமன்னர் திருநாவுக்கரசர்

வளமையுடைய புகலி வேந்தரான ஞானசம்பந்தரை

பாண்டி நாட்டுக்கு சென்றதையும் அங்கிருந்து வந்ததுமாகிய

வரலாறுகளை வினவினார்

அங்கு நிகழ்ந்ததெல்லாம்

தமிழ்ப்பாட்டின் தலைவரான சம்பந்தர்

கூற இயலாத அரிய ஞானமறைகளைத்தேக்குகின்ற

தம் திருவாயால் செப்பி அருள் செய்தார்.

2838.

சீகாழியில் தோன்றிய

கவுணியர் குலத்தின் போர் செய்யும் சிங்கம் போன்ற ஞானசம்பந்தரை

கடல்மீது கல்லினையே மிதப்பாகக் கொண்டு

வந்தருளிய நாவுக்கரசர் வணங்கினார்

“வாழ்வை அளிக்கும் திருத்தொண்டெனும் வான்பயிர் ஓங்கிட

சூழ்கின்ற பெரிய வேலி நீவீர் ஆயினீர்” எனக் கூறித் தொழுதார்.

2839.

ஞானசம்பந்தப் பிள்ளையார்

தாமும்

நாவுக்கரசர் முன்பு பேரன்பால் தொழுதார்

வெள்ளம் போன்ற புகழையுடைய

மங்கையர்க்கரசியாரின் மேன்மையையும்

பெருமை உடைய குலச்சிறையாரின் திருத்தொண்டினையும்

அதன் சிறப்பான தன்மை யாவும் கூறி மகிழ்ந்திருந்தார்.

2840.

தென்னவனாகிய பாண்டிய மன்னனுக்கு உயிர் அளித்து

திருநீறும் அளித்து

செங்கமல மலரில் வீற்றிருக்கும்

அன்னப்பறவை போன்ற மங்கையர்க்கரசி அம்மையாருக்கும்

அமைச்சர் குலச்சிறையாருக்கும் அன்பை அருள்வித்து

தூய வைதீகச் சைவநெறி காட்டிய நெறி செய்துபுகழ் பெற்ற

சம்பந்தரின் வரலாற்றை

திருநாவுக்கரசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்.

2841.

சொல்லின் பெருவேந்தரான திருநாவுக்கரசர்

திருத்தொண்டை வளநாடு சென்று

மிக்க புகழுடைய காஞ்சிபுரத்தில்

வீற்றிருக்கும் செல்வரான ஏகாம்பரநாதரின் கழல் பணிந்து

சென்று வந்ததெல்லாம் செப்பினார்

பொருந்திய நூலுடைய மார்பரான பிள்ளையாரும்

அங்கு போய் வணங்க திருவுள்ளம் பற்றினார்.

2842.

ஞானசம்பந்தர் இறைவரைப் போற்றி எழுந்து

ஆளுடைய அரசர் விரும்பி எழுந்தருளிய

அன்பு பொங்கும் திருமடம் போய் சேர்ந்து

அங்கு விரும்பி வீற்றிருக்கும்

திங்களின் பிளவு போன்ற பிறை சூடிய தலை உடைய

இறைவரின் சேவடியின் கீழ்தங்கும் திருவுள்ளத்துடன்

தாமும் துதித்து எழுந்தருளியிருந்த காலத்தில் —

2843.

வாகீச மாமுனிவரான திருநாவுக்கரசருக்கு

நிலை பெற்ற திருவாலவாயில் எழுந்தருளி வீற்றிருக்கின்ற

நாகத்தை இடுப்பில் கட்டிய இறைவரின் திருவடிகளை

வணங்கச் செல்லும் பெருவிருப்பம் மேலும் மேலும் பொங்கியது

சீகாழியில் போய்ச்சேரும் பெரும்காதல்

ஞானசம்பந்தர் கொண்டார்.

2844.

திருப்பூந்துருத்தி மேவும் புனிதரான இறைவரை

திருக்கோயிலுள் புகுந்து இறைஞ்சினார் வணங்கினார்

வாயில் பக்கம் அடைந்தார்

திருநாவுக்கரசரின் திரு உள்ளம் பொருந்த

அவரிடம் விடைபெற்று

பெருமையுடைய பிள்ளையார் அளவிலாத தொண்டர்களுடன் சென்றார்.

2845.

பக்கத்திலுள்ள காவிரியில் இறங்கிப்போய்

ஆற்றின் வடகரையில் நிலைபெற்றிருக்கும்திருநெய்தானத்தையும்

திருவையாற்றையும் சேர்ந்து வணங்கித்துதித்தார்

பெருமையுள்ள தமிழ்மாலைகள் சாத்தினார் பாடிப்பரவினார்

ஆடல் புரிந்தார் பிறகு திருப்பழனம் சென்று அணைந்தார்

2846.

செங்கண்ணையுடைய காளையை உடைய இறைவரின்

திருப்பழனம் சேர்ந்து வணங்கி இறைஞ்சினார்

பொங்கிய காதலுடன்

முன் போற்றும் தலங்கள் பலவும் தங்கிச்சென்று

ஒப்பிலாத பொன்மலைவல்லியான அம்மையாரின்

திருமுலைப்பால் உண்டருளிய வள்ளலாரான ஞானசம்பந்தர்

சீகாழிப்பகுதியினைச் சார்ந்தார்

2847.

தென்னாடாகிய பாண்டிய நாட்டில்

சமணம் என்ற மாசினை அறுத்து

திருநீற்றினை அந்நாடு முழுதும் அணியும்படிச்செய்த ஞானசம்பந்தர்

வருகின்ற சொல்லைக்கேட்டதும்

“அவரை எந்நாளில் பணிவோம்” என ஆர்வம் கொண்டிருந்த
மறையவர்கள்

வேதங்கள் முழங்க அவரை எதிர்கொண்டனர்

2848.

ஞானம் மிக்க மாமறையவர்கள்

தம்மை எதிர்கொண்டு வரவேற்க

புகலியின் காவலரான சம்பந்தரும்

குளிர் முத்துக்கள் அணிந்த சிவிகையிலிருந்து இறங்கி

அவர்களின் எதிரே சென்றார்

திருத்தோணிநாதர் கோவில் முன் தோன்றியது

நகைக்கும் தாமரைமலர் போன்ற கரம் குவித்துஇறைஞ்சிப்போய்

ஊழிவெள்ளத்தில் மேலே மிதந்த அக்கோவிலின்

மணிக்கோபுரம் சென்றார்

2849.

பூமிஎனும் மாநிலத்தில்

எட்டு உறுப்புகளும் பொருந்த வணங்கி

கைகள் அஞ்சலியாய் திருமுடிமீது ஏற

பொங்கும் காதலுடன் வணங்கினார்

திருக்கோவிலை வலமாக வந்து

பெரிய நீண்ட பெருந்தோணியான கோவிலை

அருளால் தொழுதார்

மலைமீது ஏறி அம்மையுடன் எழுந்தருளிய இறைவரின்

தாமரை போன்ற திருவடிகளை வணங்கினார்

2850.

அவர் திருமேனி முழுதும் புளகங்கள் முகிழ்த்து எழுந்தது

காணும் கண்கள் களிப்பை முகந்து கொண்டன

பற்றிக்கொண்ட திருஉள்ளத்தின் உள்ளே

ஆனந்தம் அலைந்தெழுந்து பொங்கி வழிந்தது

பணிந்தேத்தி

“உற்றுமை சேர்வது” எனத்தொடங்கும் திருவியகத் திருப்பதிகத்தை

மகிழ்வுடன் எடுத்துப்போற்றினார்

வெற்றிஆகும்படி பாண்டியன் சபையிலும் —

நீர் எதிர்த்துச்செல்ல வைகை ஆற்றிலும் —

திருவருள் செயல் கொண்டவர் என இறைவரைப் போற்றினார்.

2851.

சீர் நிறைந்த திருப்பதிகத்தினில் திருக்கடைகாப்பு சார்த்தி

கச்சணிந்த அழகிய முலையாளுடன் நிலைபெற்ற தோணியப்பரை வணங்கினார்

நிறைந்த இனிய அருள் பெற்று மீண்டும் சேர்ந்து

அழகிய கைகள் கூப்பித் தொழுது துதித்து

அழகிய திருக்கோவிலை முன்னால் வணங்கிப் போய்

திருவாயில் அடைந்தார் தொழுதார்

2852.

அவரது தந்தையார் சிவபாத இருதயரும் பணிந்து உடன்வந்தார்

சீகாழிப்பதியினரின் சிங்கம் போன்ற சம்பந்தர்

பழமையான திருமதிலைத் தொழுது சென்றார்

மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மங்கையர்கள் வாழ்த்துரை

இருபுறமும் எழுந்தது

அழகிய வீதியிடையே சென்று

அன்புடன் வந்தவர்க்கு அருள்செய்தார்

பிறகு

திருமாளிகை சார்ந்தார்.

2853.

தேன்மலர்கள் பொருந்திய புகலியை அடைந்த திருஞான சம்பந்தர்

பாடினியாருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு அருள்முகம்அளித்தார்

அவர்களது திருமாளிகைக்கு செல்லும்படி விடை தந்தார்

திரும்பும்போது

கரியமணல்போன்ற கூந்தலுடைய பெண்கள்

அழகிய விளக்குகள் ஏந்தி வரவேற்றனர்

உள்ளே சென்றார்

2854.

அங்கு சேர்ந்ததும்

மறையவர் குலத்தில் வந்த தாயான பகவதியார் அடிவணங்கினார்

நீண்ட

பெரியதிருத்தோணியில்எழுந்தருளிய

பெரியநாயகியின் திருவடிகளை மனதில்கொண்டு

திருஞான சம்பந்தரும் தொழுதார்

காதலுடன் அங்கே தங்கியிருந்து அருளும் நாட்களில்

தம் இறைவன் திருவடிகளைத் துதித்து

பெருகும் இனிய இசையுடைய

பல திருப்பதிகங்களையும் புகழ்ந்து பாடினார்

2855.

நீல நிறமான மிகப்பெரிய நஞ்சை திருக்கழுத்தில் அடக்கிய

குற்றமற்றவரான தோணியப்பரை

அனைத்து காலங்களிலும் பணிந்து அன்பர்களுடன் கலந்து

பல நாட்கள் அந்த சீகாழிப்பகுதியில் தங்கினார்

காமாட்சி அம்மையார் தழுவியதும்

திருமேனி குழைந்து காட்டிய ஏகம்பநாதரின் திருக்கோலத்தை

நிறைவுபெறக் கும்பிடவேண்டும் எனும் ஆசையெழுந்தது

உள்ளக் குறிப்புகொண்டார்

2856.

“தண்டகத்திருநாடு” என அழைக்கப்படும் தொண்டைநாட்டைச்சேர்ந்து

நம் இறைவர் வீற்றிருக்கும் கோவில்களைக் கண்டு துதித்து

வணங்கிவரலாம் எனஅடியார்களிடம் அருளினார்

தக்க காலத்தில் தோன்றி

தேவர்களுக்கும் கிட்டாத

பெரிய திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவனிடம்விடைபெற்றார்

தொண்டர்களுடன் தாமும் புறப்படத் தயாரான தந்தையாருக்கு

இவ்வாறு உரை செய்தார்:

2857.

“அப்பரே! இனி நீங்கள் எம்முடன் வருவதை விடுக

இங்கு

அருமுறை விதிப்படி தீ வளர்த்து வேள்வி செய்துகொண்டு

அன்புடன்

பவளம் போன்ற சடையுடைய இறைவரை துதித்து இருப்பீராக”

எனச்சொன்னார்

மெய்த்தொண்டர்களுள்

தம்முடன் வராமல் தங்கிவிட்டவர்கெல்லாம் விடைதந்தார்

தமக்கு ஒப்பிலாத இறைவரை வழியில் வணங்கிக்கொண்டு

உருகும் அன்புடன் மேலே செல்வராகி –

— இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்