பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

பா. சத்தியமோகன்


2641

தென்னவனாகிய பாண்டியனின் மனைவியாரும்

அழகிய மணிகளையுடைய சிவிகையில் அமர்ந்து

பின்னால் வர –

அமைச்சரான குலச்சிறையார்

தொண்டர் கூட்டத்துடன் கலந்து செல்ல —

பொன் அணிகளையுடைய மாடவீதி வழியாய்

எழுந்தருளிச் சென்றார் —

சீகாழி நாடுடைய பிள்ளையார்

கன்னி நாட்டரசான பாண்டியனின் அரண்மனைக்குள் புகுந்தார்.

2642.

பாண்டியனிடம் முன்னால் வந்த குலச்சிறையார்

பொன்னால் ஆன மதில் சூழ்ந்த சண்பைப் புரவலரின்

வருகையைக் கூறினார்

முன்பு உண்டான துயரம்

சிறிது நீங்கி

“முழுதும் மணிகள் அணிந்த பொன்பீடத்தைத்

தன் தலைப்பக்கம் இடுவீராக” எனச்

சொல்வதற்கு உரிய வல்ல

ஆற்றல் கொண்டவன் ஆனான் அப்போது!

2643.

மந்தியாரைச் சென்று

ஞானசம்பந்தரை அழைத்து வர ஏவினான்

சிந்தையுள் மகிழ்ந்தார் சென்றார்

அருகனது சமயத்தில் உள்ள சமணர்கள்

வெப்பமலை அணிந்த மார்புடைய

பாண்டிய மன்னனின் தன்மை பார்த்து

நம் ஒப்பற்ற சமயத்தைப்

பண்பாய் நாட்டும் வழி இதுதானோ!” என்று கூறி

மேலும் கூறினர்:-

2644.

“உமது அறநெறியான சமயத்தை

நீயே காத்து அருளச் செய்ய இயலுமானால்

அவரை இங்கே வரும்படி அழை

அவரும் நாங்களும்

முன்பே ஒன்று கூடி நிற்போம்

இந்நோய் அவரால் தீர்ந்தால்

“நாங்களும் தீர்த்தோம்” எனக் கூற

நீ உடன்பட வேண்டும் என்றனர்.

2645.

பொய்யினையே தவமாகக் கொண்ட

புன்மையான தலையை உடைய சமணர் கூறியதும்

“முன்பு செய்த தவம் பயனளிக்கும் காலம் பொருந்தினால்

உங்கள் தெய்வங்களின் சார்பினால்

இரு பக்கத்தவரும் தீருங்கள்!

நான் நடுவுநிலை தவறி

வஞ்சம் பேசமாட்டேன்!”

என்று பாண்டிய மன்னன் கூறினான்.

2646.

என

அந்தப் பாண்டியன் உரைத்ததும்

எண்ணம் கெட்டிருந்த அமணர்கள்

கருத்து குலைந்து போயினர்

தெந்தமிழ் நாடான

பாண்டிய நாடு செய்த

தவத்தின்கொழுந்து போன்ற ஞானசம்பந்தர்

வலிய

ஒப்பில்லாத அரண்மனை முன் உள்ள

வாயிலை அடைந்தார்

செல்வமும் பொன்னும் திகழும்

முத்துக்களுடைய பல்லக்கிலிருந்து

இறங்கி உள்ளே சென்றார்.

2647.

குலச்சிறையார்

ஞானசம்பந்தர் திருஉருவம் முன்பு எய்தினார்

பாண்டிமாதேவியும் சிவிகையிலிருந்து இறங்கிச் சென்றார்

தண்மையுள்ள தமிழ்நாட்டு மன்னன் பாண்டியன்

வானிலிருந்து

நீண்ட இருள் நீங்குவதற்காக

நிலத்தில் தோன்றிய செழித்த கலை நிலவு போல

கவுணியர் பெருமானான பிள்ளையாரைக் கண்டான்.

2648.

பார்த்த அப்பொழுதே

வேந்தன்

கைகளைத் தூக்கி வழிபடும் பண்புடன் நோக்கினான்

மலர்களுடைய தன்முடியின் பக்கத்தில்

இடப்பட்ட பீடத்தில்

வண்மையான தமிழுடைய வல்லுநர் சம்பந்தர்

அப்பீடத்தில் அமர்ந்தார்

மாயங்களைக் கொண்ட அமணர்கள் யாவரும்

தம் மனதுள் எழுந்த குறிப்பால்

அச்சம் கொண்டனர்.

2649.

செழியனும்

ஞானசம்பந்தரின் திருமேனி காண

விழி பொருந்த நோக்கினான்

வெப்புநோய் மேலும் சிறிது நீங்கப்பெற்றது

ஒரு நிலையில் நில்லாமல்

மனம் உறுவதும் அழிவதுமாக இருந்தது

ஒரு வகையாக நேரே நிற்கும் மனதைப் பெற்று

“வாழ்வு பெற்ற உமது ஊர் யாது”என

விருப்புடன் வினவிய போது

2650.

காவிரி ஆறு பாய்ந்து வளம் தரும் சோழநாட்டில்

நீர்நிறைந்த வயல்கள் உடைய

மருதநிலம் சூழ்ந்த

காலத்தால் அழியாத மதிலால் சூழ்ந்த

திருக்கழுமலம் (சீகாழி) என்பது எனது ஊர் என

சிறப்புடைய பணிரென்டு பெயர்களையும் புகழும் திருப்பதிகத்தைப்

பாடி அருளினார் ஞானசம்பந்தர்

அம்மன்னனின் முன்பு.

(இங்கு பாடியது பிரமனூர் எனும் பதிகம்)

2651.

ஞானசம்பந்தர்

செம்பொன் மணிபீடத்தில் அமர்ந்திருந்தபோது

]உள்ளத்தில் நிறைந்திருந்த பொறாமையால்

பக்கத்தில் இருந்த கரிய நிறமுடைய சமணர்

தம் மனத்திடை கொண்ட அச்சத்தை மறைத்து

முகத்தில் கோபத்தீ துள்ளி எழுவது போல

கண்கள் சிவந்து

பலவகையால்சொல்லத் தொடங்கியது யாதெனில் —

2652.

காலையில் தோன்றும் கதிரவனைச் சூழ்ந்த

கருமையான முகில் கூட்டத்தைப் போல்

மயில் இறகை ஏந்திய சமணக் கூட்டத்தவர்

ஞான சம்பந்தப் பிள்ளையாரைச் சூழ்ந்தனர்

பொருந்தும்படி வாதில் வெல்ல எண்ணம் கொண்டனர்

தாங்கள் போற்றும் ஆருகத நூலில் கண்ட பொருளை

பிள்ளையாரிடம் எடுத்து ஓதினர்

தலைகள் அசைத்துக் குரைத்தார்கள்.

2653.

“ஞானசம்மந்தர் அது கேட்டு

உங்கள் கொள்கையின் படி உள்ள

பொருள் முடிவுகளை உள்ளபடி கூறுங்கள்” என அருள

ஊத்தை வாயும் பறித்த தலையும் உடைய சமணர் துள்ளினர்

பலராக எழுந்தனர்

பிள்ளையாரைச் சூழ்ந்து பதறினர் கதறினர்

ஒளியுடைய அணிகளை அணிந்த மங்கையர்கரசியார்

அதனைக் கண்டு பொறுக்கமுடியாமல் உள்ளம் நடுங்கி –

2654.

தென்னவன் (பாண்டியன்)நோக்கி-

“இனிய அருளுடைய இப்பிள்ளையார் சிறுவர்;

ஆனால் சமணர்களாகிய இவர்கள் எண்ணிலாதவர்கள் மன்னா!

உன் வெப்புநோய் எங்கள் வள்ளலார் ஒழியச் செய்வார்

அதன்பின் இந்த அமணர் வாதம் செய்ய வல்லவரானால் வாதிடட்டும்”

எனக் கூறினார்.

2655.

பாண்டியனும் மங்கையர்க்கரசி நோக்கி

“நீ வருந்தாதே “என்று கூறிய பிறகு

“பிற வாதம் என்ன வேண்டும்?

அருகர்களாகிய நீங்களும்

கங்கை அணிந்த சடையினார்க்கு அன்பரான இவரும்

என் மீதுள்ள வெப்பு நோயை ஒழியச் செய்துகாட்டுங்கள்

நீங்கள் அவரவர் தெளிந்த தெய்வங்களின்

உண்மைத் த்ன்மையை என்னிடத்தில் விளக்குங்கள் ” என்றான்.

2656.

ஞான அமுதம் உண்ட ஞானசம்பந்தர்

நல்தவச் செல்வியான மங்கையர்கரசியை நோக்கி

“மானின் நேர் விழியாய்! கேள்

என்னைச் சிறுவன் எண்ணி அஞ்ச வேண்டாம்

நிலையில்லாத சமணர்களுக்கு

நான் எளியேன் அல்லேன் எனும் கருத்துடன் எழுகின்ற

திருப்பதிகம் பாடி-

2657.

திருவருளைப் பற்றிய தன்மையால்

அவ்வாறு திருப்பதிகம் பாடி அருளினார் பிள்ளையார்

தம் முன்பு சூழ்ந்துநின்று

குரைப்பதைக் கைவிடாத சமணர்களுக்கும்

ஒன்று போலவே மன்னன் உரைத்தார் இவ்வாறு:-

“இன்று என்னை அடைந்த

இந்த வெப்பு நோயை

நீவீர் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து

போட்டி வைத்து ஓட்டித் தீருங்கள்

தெளிவுபெறத் தீர்த்தவர்களே வென்றவர் ஆவர்”

2658.

பாண்டிய மன்னனின் சொல்லைக் கேட்டு

தமது வடிவத்தைப் போல

மனதிலும் மாசுடைய அமணர்கள்

தென்னவ மன்னனை நோக்கி

நாங்கள் உன் உடம்பில் ஒரு பாகத்தில்

இடப்பாகத்தில்

வெப்பு நோயை மந்திரித்து

தெய்வ முயற்சியால் நீக்குவோம்” என்றனர்.

2659.

எந்த உண்மையையும் அறியும் அறிவில்லாதவர்

இருளைப் போல

மன்னவனை நெருங்கிச் சென்று

வாதத்தின் பொருட்டு

மன்னவனின் இடப்பாகத்து நோயைத் தீர்க்கத் தொடங்கினர்

அவனது உடலின் மீது

தம் மயில் பீலிக் கற்றை கொண்டு

மந்திரித்துத் தடவிடத்துவங்கியதும்

மேலும் மேலும் வெப்புநோய் அதிகரித்து தீமை செய்தது

அதைத் தாங்க மாட்டாதவனாகிய மன்னன்

சிரபுரத்தவராகிய சீகாழித் தலைவரை

குறிப்பால் நோக்கினான்.

2660.

தென்னவன் (பாண்டியனின்) நோக்கம் கண்டு

திருக்கழுமலத்தார் ஞானசம்பந்தர்

அவனது வலப்பக்க நோயை

“திருஆலவாய் திருநீறே நிலையான மந்திரமும் மருந்துமாகி தீர்ப்பதாகும்”

எனக்கூறிய வேதங்களின் கருத்தைப் பகரும்

“மந்த்¢ரமாவது நீறு” எனும் திருப்பதிகம் பாடி-

2661.

திருவளரும் திருநீறு கொண்டு

ஞானசம்பந்தர் தனது திருக்கையால் வலப்பக்கம் தடவ

தென்னவனின் ஒப்பில்லாத வெப்பு நீங்கியது

அந்த இடம்

தண்ணீர்ப் பொய்கைப் போல் குளிர்ந்தது

பொருந்திய இடப்பக்கமோ

மிகுந்த அனலின் தன்மை எழுந்தது

இரு பக்க வெப்பமும் கூடி

செறிந்த தீயென

இடம் கொள்ளாமல் பெருகியது.

2662.

உறியை கையில் கொண்டவரும்

பாய் உடுத்தியவரும் ஆகிய சமணர்கள்

நடுக்கம் எய்தி

செறிந்த மயில்பீலி தீய்ந்து போக

மன்னனின் வெப்புநோய் தம்மையும் தாக்குதலால்

உடல் மேலும் கருகியதால்

மன்னனை விட்டு அகன்று நின்றனர் —

அறிவில்லா நெறியில் நிற்பவராயினும்

அறிவுடைய நெறியினரைப் போல.

2663.

பலர் தொழும் புகலி மன்னர்

அரசரின் ஒரு பக்கத்து வெப்பத்தைப் போக்கினர்

மலர்தல் உடைய அறிவில் மிகுந்தவர்

அதிசயித்தனர் சூழ்ந்தனர்

வேல் ஏந்தும் தென்னவனின் மேனி

வலப்பக்கத்தின் வெம்மை இடப்பக்கத்திலும் கூடிப்போனது

தீண்டியது

உலகின் குளிர்ச்சியும் வெம்மையும் ஒன்றாகச் சேர்ந்து

ஒதுங்கியது பொல இருந்தது.

2664.

மன்னவன் இவ்வாறு மொழிந்தான்:-

“என்னே வியப்பு இக்காலம்!

என் ஒரே உடலிலேயே

கொடிய நரகம் ஒருபுறம் ;

முக்தி இன்பம் மறுபுறம்

துன்ப நஞ்சின் நுகர்ச்சி ஒருபுறம்;

சுவை அமுத நுகர்ச்சி ஒருபுறம்

அடையப் பெற்றேன்!”

2665.

“கொடிய தொழிலுடைய அருகர்களே! தோற்றீர்!

என்னை விட்டு அகலுங்கள்

இங்கு வந்து

என்னை உய்யுமாறு ஆட்கொண்ட

அந்தணர்குல வள்ளலாரே!

இந்த வெப்புநோய் முழுதும் நீங்க

எனக்கு அருள் புரிவீர்”என்று

சிந்தையால் தொழுது சொன்னான் —

நற்கதிக்கு நெருங்கிவிட்ட பாண்டிய மன்னன்.

2666.

திருமுகம் கருணை வெளிப்படுத்த

திருக்கைகள் திருநீறு காட்ட

பெரிய வேதங்கள் துதிக்கும் முறையுடன்

ஞானசம்பந்தர் துதித்தார்

பிறகு

ஒரு முறை பாண்டியன் உடலில் தடவினார்

வெப்பு நோய் அப்போதே ஒழிந்து

இடப்பக்கத்தில் தீப்போல எரிந்த வெப்பு நோயும்

முழுதும் நீங்கியது

பாண்டியன் முழுநோயும் நீங்கி உய்வு அடைந்தான்.

( “மந்திரமாவது நீறு” ஞானசம்பந்தர் பாடிய பதிகம்)

2667.

பாண்டியனின் மனைவியாரும்

குலச்சிறையாரும்

தீமை அழித்த ஞானசம்பந்தரின்

தாமரை மலர் திருவடிகளை

தம் முடி மீது சேர்த்து வணங்கி

“நாங்கள் பெருமை பெற்றோம்

இன்றுதான் உறுதியாய் பிறந்தோம்

மன்னன் இனி

பிறவியில்லாத மேன்மை அடைந்தான்” என்று கூறி

உள்ளம் களித்து மிகவும் மகிழ்ந்தனர்.

2668.

மீன்கொடி ஏந்தும் நாட்டின் தலைவன் பாண்டியன்

தன் மீதுள்ள வெப்பமெல்லாம் உடனே மாற

ஆகப்பெரிய இன்பம் எய்தி

தலை உச்சி மீது கைகளைக் கூப்பி

மானம் என ஒன்றில்லாதவர்கள் முன்பு

வலிமையான நோய் நீங்குமாறு

வந்தருளிய ஞானசம்பந்தரின் திருவடி சேர்ந்து

“நான் உய்ந்தேன்” என்றான்.

2669.

கட்டுத்தறியைத்தாண்டி

சீறிவரும் மதயானை போல

பாண்டியனின் கருத்தினைக்கேட்டுக்கொண்டனர்

தன்னை விட்டு நீங்குமாறும் நேர்பட

உண்மைநிலை கூறினான்

உடனே

அழுக்கு படிந்த உடலை உடைய நீசர்களான சமணர்கள்

தாம்

முன்னாளில் கைகண்ட மந்திரவித்தை

வலிமையில்லாமல் ஒழியக்கண்டு அஞ்சினர்

சிந்தித்தனர்

இனி எவ்வாறு வெற்றி அடையலாம் என ஆராய்ந்தனர்.

2670.

சைவ மைந்தர் ஞானசம்பந்தருடைய சொற்களின்

வெற்றிச் சிறப்பை

அவரது

சந்த இன்சொல் மாலையால் (பதிகம்)

பாண்டியனின் வெப்புநோய் முழுதும் ஒழிந்தது

அறிந்து கொண்டோம்

ஆதலால்-

உண்மை தெரிந்த தர்க்க வாதத்தில்

இவரை வெற்றி பெறுவது இயலக்கூடியதல்ல

பொருந்திய தீயினும் நீரிலும் வெல்ல முயலுவோம்

எனத் தமக்குள் எண்ணினர்.

2671.

ஞானசம்பந்தப் பிள்ளையார்

சமணர்களைப் பார்த்து

“உங்கள் சமய உண்மையினைப் பேசுங்கள்” என்றதும்

தள்ளப்படும் இயல்புடைய சமணர்கள் சொல்லியது:-

“வேறு தர்க்க உருவமான விடைகளால் வரும் வெற்றி தவிர

அவரவர் கொண்ட கொள்கைகளின்

உண்மைத் தன்மையை உள்ளவாறு

கண்முன் நிறுத்திக் காட்டுவதே இப்போது செய்யத்தக்கது” என

சபதம் கூறினார்.

— இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்