பெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

பா.சத்தியமோகன்


2455.

பிரம்மபுரத்தில் (சீகாழி) அமர்ந்த

மூன்று கண்களுடைய பெரியபிரான்

தம்பெருமாட்டியுடன் பொருந்திய இடங்கள் எங்கும் சென்றார்

ஆங்காங்கே

அவர் விரும்பி மேற்கொண்ட கோலங்கள் பணிந்து

போற்றி வர

நாம் கொண்ட காதலைக் கண்ட இறைவர்

அங்கு திருத்தோணியில் வீற்றிருந்த வகையினை

இங்கு காணுமாறு அளித்தார்”

என்று உரைத்து அருள் செய்தார்

“நீங்கள் சிரபுரமாநகர் (சீகாழி) செல்க” என்றார்.

2456.

என்று கவுணிய குலத்தோன்றல் கூறியதும்

பணிந்து அந்த அருளை ஏற்றுக் கொண்டார்

பொருந்திய காதலுடன் உள்ளம் அங்கே ஒழிய

ஒருவாறாக அகன்று சென்றனர்

அம்பலக்கூத்தர்

மகிழ்ந்து நடம்புரிந்த தலம் பலவும் வணங்கிச் சென்றார்

நிலையான புகழ் உடைய தோணிமேல் வீற்றிருக்கும்

இறைவரைப் பணியும் நியதி உடையவரய் விளங்கினார்.

2457.

சிரபுரத்து அந்தணர்கள் சென்றதும்

திருவீழிமலை மேவிய இறைவரின் திருவடிகளை

பரவிப்பணிந்தார்

அடிமைப் பண்பிலிருந்து நீங்காமல் ஒழுகும் திருத்தொண்டர்கள் சூழ

சிறந்த தமிழால் தொகுக்கப்பட்ட திருப்பதிகம் சாத்தினார்

ஓங்கிய புகழுடைய திருநாவுக்கரசரோடு

பரவிப் பெருகிய நட்பு ஓங்க

இனிதாய் அந்தப் பதியில் உறைந்திருந்த நாளில்-

2458.

இம்மண்ணுலகில் வானமழை பொய்த்து

அதனால் நதிகள் வெள்ளம் பாயாமல் தவறியது

உலகத்து உயிர்கள் வருந்தி உணவின்றி நின்றதால்

தேவர்களுக்கும்

சிறப்புகளிலே வருகின்ற பூஜைகள் செய்யப்படாமல்

மிக்க பெரும் பசியின் கொடுமை

உலகில் பரவிய நிலை கண்டு

பண் பொருந்திய மொழி உடைய உமையம்மையின்

கொங்கையின் ஞானப்பால் நீங்காத வாயினரான சம்பந்தருடன்

திருநாவுக்கரசரும்-

“உலகில் நெற்றிக்கண்ணரான திருநீற்றுச் சார்புடைய

தொண்டர்களுக்கு கவலை வருமோ” எனவும் உள்ளத்தில் எண்ணினர்.

2459.

வானாகி மண்ணாகி தீயாகி காற்றாகி

சூரிய சந்திரர் எனும் இரு சுடர்களும் ஆகி

நீராகி ஊனாகி உயிராகி உணர்வுமாகி

உலகங்கள் அனைத்தும் ஆகி

அதற்கு அப்பாலும் கேடில்லாத வடிவாகி

நின்ற இறைவரின் சிவந்த திருவடிகளைத் துதித்து உறங்கும்போது

சுடுகாட்டில் ஆடும் கங்காளராய் (எலும்பு அணிந்தவராய்)

திருவீழிமலை எனும் முதிய ஊரினை

விரும்பி வீற்றிருக்கும் இறைவர்

அவர்களின் கனவில் தோன்றி அருள் செய்பவரானார்.

2460.

“இந்த உலக இயல்பு நிகழ்வினால்

வந்து சேர்ந்த தீமை பொருந்திய பசி நோய் உங்களை அடையாது எனினும்

உம்மைச் சேர்ந்த அடியார்களின் வருத்தம் நீங்குவதற்காக

நித்தமும் ஒவ்வொரு பொன்காசினை

கிழக்கிலும் மேற்கிலும் விளங்கும்

அழகிய பலிபீடங்களில் உமக்கு யாம் அளித்தோம்

அளவற்ற புகழுடையோரே

இந்தப் பஞ்சகாலம் தீர்ந்தால் அது நிறுத்தப்படும்”

என்று உரைத்தருளினார் திருவீழிமலை இறைவர்.

2461.

தம்பிரான் அருள் புரிந்து நீங்கினார் கனவினில்

இளைய ஏறு போன்ற சம்பந்தர்

துயில் கலைந்து தன்னை உணர்ந்து

“நம் இறைவரின் அருள் இத்தகையது !” என வியந்து

அவ்வாறே அருளப்பெற்று

துயிலுணர்ந்து

நாவுக்கரசருடன் சேர்ந்து

மணம்கமழும் கொன்றைமலர் சூடிய

திருவீழிநாதரின் மணிக்கோயிலை வலமாக வந்தபோது

உமையை ஒரு பாகம் கொண்ட இறைவர் அருளால்

கிழக்கு திசையில் உள்ள பலிபீடத்தின் மீது

பொற்காசு கண்டார்.

2462.

காதலோடும் தொழுது எடுத்துக் கொண்டனர்

நின்று கைகுவித்தார்

பெரும் மகிழ்ச்சி கலந்து பொங்க —

“இறைவர் விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு நாளும்

நல்ல விருந்தாக உண்பதற்கு வருக” என்று

தீமையில்லாத பறை அறிவித்தனர்

அவ்விதம் வந்த தொண்டர்களுக்கு

திரு அமுதும் கறிகளும் நெய்யும் பாலும் தயிரும்

என்று குறைவில்லாதபடி

இனிதாய் உண்பித்து

இருபக்கத்துப் பெருந்துறவியாரும் தங்கியிருந்த அந்நாட்களில்-

2463.

திருநாவுக்கரசர் திருமடத்தில்

உச்சிப் போதிற்கு முன் திரு அமுது செய்து முடிப்பதைக் கண்ட

காளையுடைய சிவனாரின் திரு அருள் பெற்ற சம்பந்தர் —

தமது திருமடத்தில் உணவுசமைப்போரை நோக்கி-

“தீய தொழிலுக்கு நீங்கள் என்றும் இடம் அளிக்க மாட்டீர் அல்லீரோ!

காலத்தால் உணவு சமைத்து

இங்கு வரும் அடியார்க்கு அளிக்காமல் விளைந்த காரணம்தான் என்ன?

விளம்புங்கள்'” என்றார்.

2464.

அந்தணர்களின் தலைவரான பிள்ளையார்

மேற்கண்ட வண்ணம் உரைத்ததும்

திருமடத்தில் சமைப்பவர்கள் செப்பினார்கள்:-

“இதை நாங்கள் ஒரு விதத்திலும் அறியோம்

உம் இறைவரிடம் பெற்ற படிக்காசு ஒன்றைக்

கொண்டு சென்று

சமைக்க வேண்டிய பொருள்கள் வாங்கச் சென்றால்

காசுக்கு வாசிதர வேண்டும் என்று உரைக்கின்றனர்

பெருமுனிவரான திருநாவுக்கரசர் பெற்ற காசினை

அவ்விதம் கூறாமல் விருப்புடன் பெறுகின்றனர்

இதுவே காலதாமதம் ஆகக் காரணம்” என்றனர்.

(வாசிபட-வட்டம் தந்து செலுத்தப்படல்)

2465

திருஞானசம்பந்தர் அதனைக் கேட்டு சிந்தித்தார்

சிவபெருமான் நமக்குத் தந்த

ஒரு காசு வாசிபட

மற்ற ஒரு காசு வாசிபடாமைக்குக் காரணம்

பெருவாய்மையுடைய திருநாவுக்கரசர் கைத்தொண்டால்

பெறும் காசாகும்

ஆதலால் இனிவரும் நாட்களில்

பெரியோனாகிய இறைவன் தன்னை வாசி தீர்வதற்காகப் பாடுவேன்”

என்று எண்ணினார்

மனதுள் கொண்டார்.

2466.

அடுத்தநாளில்

ஞானசம்பந்தர் –

தம்பிரானாகிய இறைவரின் கோயில் புகுந்தார்

“வாசி தீர்த்தருளும்” என வேண்டிப் பதிகம் பாடினார்

அதன் பயனாகப் பெற்ற படிக்காசினை பெற்றுக்கொண்டார்

பரிவாக

மக்கள்

கடைத்தெருவுக்குச் சென்று காட்டியதும்

“நல்தவம் புரிந்தோரே..இக்காசு மிக நல்லது ;

வேண்டும் பொருள்கள் யாம் தருவோம்”

எனத் தந்தனர்

அன்று முதல்-

நாள் பகுதியான முற்பகலில்

அடியவர்களுக்கு உணவு உண்ணும்படி செய்வித்து

அன்பு பெருக்கினர்.

2467.

அரிய விலை தந்தாலும்

பெற அரிய காசுகள் அவை என ஆகின

அமுது செய்வதற்குரிய தொண்டர்கள்

அளவிலாது மேலும் அதிகரித்தனர்

வருகின்ற அவர்கள் எல்லோருக்கும்

இனிய அடிசில்

குறைவின்றி இருக்குமாறு

திருமுடி மேல் சந்திரனும் கங்கையும் சூடுகின்ற சிவபெருமான்

அருள் செய்ய

சிறப்பால் மிக்க பெருமை மிக்க

சண்பைநகரின் வேந்தரும்

வாக்கின் அரசரான நாவுக்கரசரும்

பெருஞ்சோற்று மலைகளை

அமுதமாய்த் தந்தருளினார்.

2468.

பூமியில் மழை பொழிந்து உணவுப் பொருட்கள் பெருகியது

அனைத்து உயிர்களும் துயர் நீங்கின

அருளினாலே

உலகம் முழுதும் பொலிவு எய்தும் நற்காலம் வந்தது

சுருண்ட சடையுடைய சிவனாரின் திருவடிகளை

பலநாட்கள் போற்றி அங்கு எழுந்தருளியிருந்தார்

பிறகு-

தம்பிரான் அருள் பெற்று

உலகில் சிவனார் எழுந்தருளிய

பிற தலங்கள் பலவும் வணங்கப் போயினர்

அழகிய திருவாஞ்சியம் எனும் பழைய ஊர் சென்று அடைந்தனர்.

2469.

நிலைபெறும் திருவாஞ்சியத்தில் அமர்ந்த

முக்கண்களும் திருநீலகண்டமும் உடைய

அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றினர்

இறைவரைப் பாடி ஒலி எழுப்பும்

நீர்நிலை சூழ்ந்த

தலையாலங்காடு சென்றார்

அதன் பக்கமுள்ள

திருப்பெருவேளூர் பணிந்து பாடினார்

நாடுகின்ற புகழுடைய திருச்சாத்தங்குடி அடைந்தார்.

இறைவரின் திருக்கரவீரத்தை நயந்து பாடினார்

தேடும் மறைகளுக்கும் அரியவரான இறைவரை

திருவிளமரில் துதித்தார்

பிறகு

திருவாரூரைத் தொழுவதற்கு நினைந்து

அவர் நகரினுள் சென்று புகுந்தார்.

[ திருவாஞ்சியப்பதிகம்-“வன்னி கொன்றை” எனும் தொடக்கம் கொண்டது

பெருவேளூர்ப்பதிகம்-“அண்ணாவும்” எனத் தொடங்குவது ]

2470.

சிவபெருமான் மகிழும் திருவாரூர் வணங்கிப் போய்

நன்மை கொண்ட திருக்காறாயிலை எனும் ஊர் சேர்ந்தார்

வணங்கினார்

பசுமையான மென்வயல்கள் சூழ்ந்த

திருத்தேவூர் சென்றார் போற்றினார்

இறைவரின் திருநெல்லிக்காவினைப் பணிந்தார்

திருப்பதிகம் பாடினார்

தேவதேவரின் கைச்சின்னம் துதித்தார்

மிக்க புகழுடைய திருக்கொள்ளிக்காடு போற்றினார்

செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களுடைய

திருக்கோட்டூர் வணங்கி ஏத்தினார்

செல்வம் மலிகின்ற திருவெண்துறை தொழச் சென்றார்.

2471.

அந்தத் திருவெண்துறை நகரைத் தொழுதார்

மகிழ்ந்தார் பதிகம் பாடினார்

நான்முகன் திருமால் ஆகியோர்க்கு

அறிவதற்கு அரியவரான இறைவர்

வீற்றிருக்கும் தலங்கள் பலப்பலவும் சென்று பணிந்தேத்தினார் பாடினார்

பாடிப்பரவும் திருத்தொண்டர் குடிகள் பக்கம் வர

கற்றவர்கள் வாழும் திருத்தண்டலைநீள்நெறி முதலான தலமும்

பொன்மதில் உடைய திருக்களரும்

பகைவரின் வேள்வி அழித்த இறைவர் எழுந்தருளிய

மற்ற பதிகளும் போற்றிச் சென்று

“திருமறைக்காடு” எனும் தலத்தின் பக்கம் சேர்ந்தார்.

2472.

கரிய சமணர் எனும் கொடிய பாலை நிலத்தை

திருவருளால் கடந்த திருநாவுக்கரசரும்

கடலின் சார்புடைய சீகாழிப்பதியின் தலைவரான திருஞானசம்பந்தரும்

ஒன்று சேர்ந்து எழுந்தருளப் போகும்

பேறு கேள்விப்பட்டு

திருமறைக்காட்டு மக்கள் சிறப்பால் பொங்கினர்

ஊர் முழுதும் அலங்கரித்தனர்.

திருவிழா கொண்டாடும்படி எதிர்கொண்டனர்

உயர்ந்த பாக்கு மரங்களும் வாழைமரங்களும்

நிறைந்த நீர்க்குடங்களும் விளக்குகளும்

முரசும் முதலான மங்கல ஒலிகளும் பெருகி வரவேற்க

அடியார்களுடன் கூட மகிழ்ந்து வந்தனர்.

2473.

முன்னால் வந்த திருநாவுக்கரசர் தம்மை

முறைப்படி எதிர் கொண்டு களிப்பில் மூழ்கினர்

பின்னால் சேர வருகின்ற ஞானசம்பந்தரின்

பெருகிய காளம் முதலான சின்னங்களின் ஓசை கேட்டனர்

தலை மீது கைகள் குவித்து முன்பு சென்று

தொலைவில் நிலத்தின் மீது விழுந்து வணங்க

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும்

அழகிய முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி வணங்கினார்

அவர்களுடன் மகிழ்ச்சியுடன் சென்றார்.

2474.

திருநாவுக்கரசருடன் ஞானசம்பந்தரும்

தூய மணிகளுடைய நீர் சூழ்ந்த

திருமறைக்காடு எனும் பழம்பதியின் திருவீதியில் புகுந்தபோது

மாதவர்களும் அந்தணர்களும் மற்றுமுள்ளோரும்

எல்லையிலாத வகையில்

அரகர என முழங்கிய ஓசையானது

பெரிய வானத்தையும் எட்டுத்திக்குகளையும் நிறைத்தது

மேல் எழுந்தது

ஒலி பொருந்திய நீரையுடைய கடல் ஒலியையும்

விண்மேல் உள்ள உலகத்தின் அப்பாலும் அப்போதே சென்றது.

2475.

அடியார்களும் ஊர் மக்களும் பக்கம் வந்து போற்ற

அழகிய தெருக்கள் வழியே வந்து

பக்கத்தில் சூழ்ந்த

கொடிகள் திகழும் செழிப்பான திருமாளிகை முன் உள்ள

பெரிய கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சினார்

வணங்கி உள்ளே புகுந்தார்

முடிவிலாத தேவர்களும் முனிவர்களும் நெருங்கும் தன்மையுடைய

தெய்வத் தன்மையுடைய திருமுன்றிலை வலமாக வந்து

திருமுன்பு நேராக சென்றார்

முற்காலத்தில்

இம்மண்ணுலகில் வேதவழிபாடு செய்து திருகாப்பு செய்து வைத்த

பசுபொன் அணிந்த மணிகளுடைய வாசலின் பக்கத்தில் வந்தார்.

2476.

அரிய மறைகள் காப்பு செய்து

மூடி வைத்த அக்கதவைத் திறந்திட

அந்த மறைகள் ஓதும் பெருமையுடைய

அன்புடைய அடியார்கள் வந்து சேர்ந்து

யாரும் நீக்கவில்லை ஆதலால் அந்நாளிலிருந்து

வேறு ஒரு பக்கத்தில் வாசல் அமைத்து

தொழுது வருகிறார்கள் எனும் இயல்பைக் கேட்டு

உயர்வான சீகாழித் தலைவரான வேதத்தலைவர் சம்பந்தர்

வியப்பெய்தி நின்று

திருநாவுக்கரசருக்கு செப்பியதாவது;

2477.

“அப்பரே!

திருமறைக்காட்டின் இறைவரை

வேதவனத்து ஐயராகிய இறைவரை

நேர்முன் உள்ள திருவாசலைத் திறந்துபுகுந்து

எப்படியேனும் நாம் வணங்க வேண்டும்

இவ்வாசலின் திருக்காப்பு நீங்கும்படியாக

நீங்கள்

மெய்ப்பொருளில் அமைந்த வண்மையுடைய தமிழ்பாடுக” என்றார்

விளங்கும் சொல்லரசராகிய நாவுக்கரசரும்

அதைச் சம்மதித்து ஏற்றார்

“என்னை நீவீர் செய்யக் கூறி அருளினால்

அதனைச் செய்க்¢றேன்” எனக் கூறித்

திருப்பதிகம் தொடங்கிப் பாடினார்.

2478.

அந்தத் திருப்பதிகத்தின் பத்துபாடல்களும் பாடிய பின்னும்

பசும்பொன் அணிந்த திருவாசலின்

பெருமையுடைய பொன்கதவு நீங்காதிருந்தது

அச்செய்கையினால்

வாகீசர் சிந்தை நொந்தார்

அப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில்

அரிதாக வருந்தி வேண்டி நின்று பாடினார்

அப்போது திருவாசல் கதவு திறந்தது

அருள் திருக்கூத்து ஆடிய திருவடியுடைய

சிவனாரின் அடியார்களும்

விண்ணோர்களும் எழுப்பிய ‘அர’ஒலி

அகில அண்டங்கள் அனைத்தும் மூழ்கும்படி எழுந்தது.

2479.

இறைவர் திருகாப்பு நீங்கிய செயல் காட்டி

அதனைக் கண்டபோதே

வாக்கின் மன்னவரை நோக்கி

அழகிய புகலி மன்னர் சம்பந்தர் போற்றினார்

அவரும் போற்றினார்

அற்புத நிலையை இருவரும் அடைந்தனர்

அழகிய திருமறைக்காட்டினை ஆளும்

கொற்றவனாகிய இறைவரின் கோயில் முன்புள்ள

நேர் வழியில் உள்ளே சென்றனர்.

2480.

கோவிலுள் புகுந்த இருவரும்

உச்சிமீது குவித்த செங்கைகளோடும்

தாயினும் இனிமையான தங்கள் இறைவரைக்கண்டனர்

பாயும் நீர் அருவியாக கண்கள் பொழிந்தன

நிலத்தின் மீது பொருந்திய மேனியுடையராகி

உடல் விதிர்ப்புற்று

விரைவில் எழுந்து வணங்கினர்.

2481.

அன்புக்கு எல்லை காணாதவர் ஆகினர்

ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர்

எலும்பும் நெகிழ உருக நோக்கி இறைஞ்சி

இறைவரின் திருமுன்பு விழுந்து

நிற்கவும் இயலாதவர் ஆகினர்

மொழி தடுமாறும் நிலையில் துதித்தனர்

மின்னல் போல் விளங்கும் சடையுடைய இறைவரை

திருப்பதிகங்கள் கொண்டு துதித்து வெளியே வந்தனர்.

2482.

வெளியே வந்து சேர்ந்தபோது

புகலி காவலரான ஞானசம்பந்தரை நோக்கி

பொல்லா மறச்செயல்கள் செய்கின்ற

வஞ்சனைகளையெல்லாம் கடக்கவல்ல நாவுக்கரசர்

“பலநிறங்களையுடைய மணிகள் பதித்த கதவு

திறத்தலும் அடைத்தலுமாகிய செயல்கள்

எப்போதும் வழங்கும்படி

திறந்ததுபோல

அடைக்கவும் பாடி அருள்க” என்றார்.

2483.

அன்று

அப்படி நாவுக்கரசர் அருளியதும்

அரிய வேதத்தில் வல்ல ஞானசம்பந்தரும்

வெற்றியுடைய காளையை

ஊர்தியாய்க் கொண்ட இறைவரை

விரும்பி வேண்டி-

“சதுரம் மறை” எனத் தொடங்கும்

இனிமையான தமிழ்ப்பதிகத்தின் முதல் பாடல் இசைத்தார்

இரண்டு பக்கத்தும் திறந்து நின்ற கதவு

நிரம்பிட அடைத்தது.

2484.

அவ்வாறு அடைபடக் கண்டு

சீகாழி பெருந்தகையரான ஞானசம்பந்தரும்

அழகிய சொல்தொடை தமிழை ஆள்கின்ற தமிழாளியான நாவுக்கரசரும்

தொழுது நின்றனர்

தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்

பக்கங்களில் எங்கும் கற்பகமலர் மழை பெய்தது

புகலி வேந்தரான சம்பந்தரும்

நல்ல நடை உணர்த்தும் தமது தமிழ்த் திருப்பதிக மாலையை

மேல்பத்து பாடல்களும் நிரம்பிடப்

பாடி முடித்தார்.

2485.

அந்தத்திருவாசலில்

அன்றைய நாள் தொடங்கி

நேரே போய்

மெய்வடிவான வேதங்களைப் போல

உலகத்தவர்கள் புகுந்து துதிக்கும்படி வைத்து

எதிர்காலத்திலும் இவ்விதமே வழக்கம் செய்த

எல்லையிலாத பெருமையுடைய

அந்த இருபெருமக்களையும்

கைத்தலம் குவித்துத்தாழ்ந்து வாழ்ந்தது –

கடல் சூழ்ந்த உலகம்.

— இறையருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்