பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

பா.சத்தியமோகன்



2424.

சம்பந்தர் மொழிந்து அருள் செய்ததும்

பெரிய தவவேந்தரான திருநாவுக்கரசரும்

“நல்லது

நீவீர் அருள் செய்தபடியே செய்வேன்”

என அருள் செய்தார்

விரும்பிய அந்நாள் முதற்கொண்டு

பிள்ளையாருடன் செல்லும் நாட்களெல்லாம்

அதே இயல்பினில் செல்பவரானார்

செய்தவக் கூட்டமான தொண்டர்களோடும் முன்செல்ல

திருவம்பம் எனும் நகர் அடைந்தார்.

2425.

சண்பை மன்னரான பிள்ளையாரும்

இறைவன் அருள் வழியே ஒழுகுவதை மேற்கொண்டு போவாராகி

சிவப்பண்பினால் மேம்படும் குளிர்ந்த கதிர்களை உடைய

முத்துச்சிவிகையில் பணிந்து ஏறிக்கொண்டார்

வண்மையும் பெருமையும் கொண்ட திருப்புகலூர் கடந்து போனார்

“தவமுனிவரான திருநாவுக்கரசு

பரிசனத்தோடு எங்கு சென்றனர்?” எனக் கேட்டுக் கொண்டு

அவர் சேர்ந்த திருவம்பர் நகரம் அடைந்தார்.

2426.

அம்பர் மாநகர் அணைந்தார்

மாகாளத்தில் (கோயிலில்)

அண்ணலார் சிவபெருமான் விரும்பி அமர்கின்ற

செம்பொன்னால் ஆன

மாமதிக் கோயிலை வலம் வந்தார்

திருமுன்பு பணிந்தேத்தினார்

மணமுடைய மலர்களைத் தூவினார்

விதிப்படி வழிபட்டார்

வண்மையுடைய தமிழிசை மாலை பாடித் துதித்தார்

தேவர்கள் வாழ நஞ்சுண்டவர் தமைப் பணிந்து

உள்ளம் உருகிய அன்போடு

நிலத்தில் விழுந்து வணங்கினார்.

2427.

சீகாழியினர் வாழ்வு அடைய வந்தருளிய

மறைத்தலைவரான பிள்ளையார்

திருநாவுக்கரசு நாயனாருடன்

தம்பிரான் கோவில் முன் வெளியே வந்து

தம்மைச் சூழ்ந்த தொண்டர்களுடன்

அப்பதியில் விரும்பித் தங்கினார்

கங்கை தாங்கிய சடையுடைய சிவபெருமானை

பெருங்காலங்கள் தோறும் விரும்பினார் –

கும்பிட்டு பெருவாழ்வு வாழ.

2428.

ஒப்பிலாத சொற்களையுடைய

“புல்கு பொன்நிறம்” எனும் தொடக்கம் கொண்ட

பதிகம் முதலானவற்றால் போற்றித் துதித்து

சைவ மெய்த்திருவால் நிறைவுடைய கோச்செங்கட்சோழர்

அந்தத் திருவம்பர் நகரத்தில் செய்த கோவிலை அடைந்தனர்

வாய்மையுடைய வண்மையான தமிழ்மாலையில்

அச்சோழனைச் சிறப்பாக கூறி

பெருகும் காதலினால்ப் பணிந்து

பேணிக்கொண்ட உணர்வோடும்

திருமுன்பு துதித்தார்

(இங்கு பாடிய பதிகங்கள் “புல்கு பொன்னிறம்,” “அடையார்” ,

“படியுளார்”, “எரிதர” என்ற தொடக்கம் உடையவை)

2429.

இவ்விதம்

சொல்மாலைகளால் துதித்தனர் இறைஞ்சினர்

அந்நாளில்

பகைவரால் அழிக்கப்படாத பெருமதில் சூழ்ந்த

திருக்கடவூரினைத் தொழுவதற்கு மிக விருப்பம் கொண்டு

வழியில் உள்ள பிற கோவில்களில் இறைவரை வணங்கி

வாக்கின் மன்னவரோடும் திருக்கடவூர் அடையும்போது

குங்கிலியக் கலய நாயனாருடன்

அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.

2430.

பிற அழகிய தலங்களும் அடைந்து

திருவீரட்டத்தில் அமர்ந்த

இளமையுடைய காளையுடைய இறைவரின்

திருக்கோவில் சுற்று மாளிகை வலம் வந்து

இயமனை உதைத்து உருட்டிய

செம்பொன் சிலம்பு அணிந்த

திருவடித் தாமரைகளை தொழுது துதித்து உயர்ந்து

திருமுன்பு நின்றார்

“பற்றறுப்பவர் சடையுடையான்” எனத் தொடங்கும்

இனிய இசை திருப்பதிகம் பாடி-

2431.

வணங்கினார் துதித்தார்

அங்கிருந்து அரிதாக வெளியே வந்து

உலகம் போற்றும் திருநாவுக்கரசோடு

பொருந்திய நட்புடைய குங்கிலியக் கலய நாயனார் இல்லம் சென்றனர்.

கரையிலாத காதலுடன்

அவர் அமைத்து அருளிய விருந்தினை உண்டு பிள்ளையார்

திருக்கடவூர் திருமயானமும் பணிந்தார்

சிறப்பு எய்தித் தங்கியிருந்தார்.

2432.

சிறப்புடைய அந்தப்பதியில்

சிலநாட்கள் விரும்பித் தங்கினார்

வலிய பெரிய யானையை உரித்த சிவபெருமானின்

பிற கோவில்களையும் விருப்போடு தொழச் சென்றார்

வேதங்கள் பயின்ற

பெரிய சைவ மெய்வடிவுடைய

குங்கிலியக் கலய நாயனாரும் உடன்பட்டார்

வணங்குவதால் பெருமகிழ்வு தோன்ற

அறத்தின் பெரும்பயன் போன்ற

அத்தொண்டரோடு திருவாக்கூர் சென்றடைந்தார்.

2433.

தகுந்த அந்தணர் வாழும் அந்தப்பதியினில்

தான் தோன்றி மாடக்கோவிலில்

சிவந்த

நீண்ட சடையுடைய இறைவரைப் பணிந்து

இசையுடைய செந்தமிழ்ப்பதிகம் பாடி

மிக்க

மற்ற கோயில்களும் தொழுது சென்று

திருமீயச்சூர் எனும் தலம் பணிந்து தொழுதார்

பூதகணங்கள் பக்கங்களில் துதித்து நின்றாடும்

திருப்பாம்புரம் நகரம் சேர்ந்தார்.

(அக்கிருந்த எனும் பதிகம் திருஆக்கூரில் காயச்செல்வி எனும்

பதிகம் திருமீயச்சூரிலும் அருளினார்)

2434.

திருப்பாம்புரத்துறை பரமரைப் பணிந்தார்

நற்பதிக இன்னிசை பாடினார்

தாவும் அலையுடைய கங்கை ஆற்றைச் சூடிய முடியுடைய இறைவர்

மகிழ்ந்து எழுந்தருளிய மற்ற பதிகளும் துதித்தார்

மூங்கில் போல் விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த

வயல் இடங்களைக் கடந்து

தேன் சோலைகள் சூழ்ந்த

திருவீழிமலையின் அருகினில் செல்லத் தொடங்கினார்.

2435

அவ்வாறு

பிள்ளையார் செல்லும்போது

திருநாவுக்கரசரை எதிர் கொண்டனர்–

மெய்ப் பெருமை மிக்க அந்தணர்கள்

சீகாழித் தலைவர்

பின்னர் வரப்போகும் பெருமைச்செய்தியைக் கேட்டனர்

எல்லாவகையிலும் ஒன்று கூடி வந்து எதிர்கொண்டனர்

2436.

நிறைகுடம், தீபம் என இவற்றைத் தொடர்ந்து

தேன் பொருந்திய புதியமலர்களையும்

பொன் சுண்ணமும் மணமுடைய பொரியும் தூவினர்

மறை ஒலி மிகுந்து வானத்தில் நிறைந்தது

மாமுரசு ஒலித்தது ஆர்த்தது

இவ்வாறாக

இறைவரின் திருமைந்தர் சம்பந்தரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

2437.

திருவீழிமலை எனும்பதியில் உள்ள

மறைகளில் வல்ல அந்தணர்களால் துதிக்கப்பெற்ற பிள்ளையார் தாமும்

மணிகளுள் சிறந்த முத்துகளால் ஆன

புகழத்தக்க

அழகிய மணிச்சிவிகையிலிருந்து இறங்கி வணங்கி

உய்வு பெற்ற மறையோருடன்

அந்நகரத்துள் புகுவாராகினார்.

2438.

அப்போது

“அரையார் விரிகோவண ஆடை” எனத்தொடங்கும்

ஒப்புமை கூற முடியாத திருப்பதிகத்தில்

ஓங்கும் இசை பாடி அருளி

கைம்மலர்களை தலை மீது குவித்து

உண்மை ஞானத்தால் பூசிக்கும் தத்துவம் முப்பத்தாறாலும் அமைந்த

இதயத்தாமரையில் விரும்பி வீற்றிருக்கும்

இறைவரின் திருக்கோயில் சென்றார்.

2439.

நாவின் தனிமன்னரான ஒப்பற்ற நாவுக்கரசரும்

தம்முடன் பொருந்தியிருக்க

விண்ணுலகிலிருந்து இம்மண் உலகில் இறங்கிய

விராடபுருடனின்

மெய்யின் உருவமான

அந்த விமானத்தைக் கண்டு

உள்ளத்தில் வியப்பை அடைந்தார்

ஆளுடைய பிள்ளையார்

2440.

அப்பிள்ளையார் வலமாக வந்தார்

கோவிலுள் புகுந்தார்

வானகங்கை நீர்ச்சடையுடைய ஒப்பில்லாத முழுமுதலான

தனி முதலான இறைவரைத் தாழ்ந்தார்

திருமேனி முழுதும் நிலத்தில் பொருந்த வீழ்ந்து வணங்கி

நீண்ட பெருங்காதலுடன்

அன்பு வெள்ளம் சிந்தை முழுதும் பொங்கி

இசையாய்

மேலே பொழிவார் ஆனார்.

2441.

இறைவனைப் போற்றினார்

“சடையார் புனலுடையான்” எனத் தொடங்கி

பெருமானின் புகழ் சாற்றி

பதிகமான தமிழ்மாலையை சந்த இசையுடன்

திருநீற்று அழகரான இறைவரின் திருவடிக்கீழ் நின்று

அதன் கரை காணாத வெள்ளத்தில் நீடியிருந்தார்.

2442.

நீடிய பேரன்பால் உருகினார்

மனதுள் யாவும் அலையச் செய்ய

திருமுன்பு நேர் நின்றார்

பாடினார்

எதிரிலே ஆடினார்

பரவினார் பணிந்தெழுந்தார்

அருட்பெருங்கூத்தாடிய சேவடிகளை ஆர்வமுற மனதுள் கொண்டு

திருக்கோயிலின் வெளியே

பக்கத்தில்

அரிதாய் வந்து

சம்பந்தரும் நாவுக்கரசரும் வந்து சேர்ந்தனர்.

2443.

அங்கணம்

வந்து சேர்ந்தார் வாழ்வைப் பெற்றார்

திருமதில்புறத்தில் உள்ள ஓர் பெரியமடத்தில்

செந்தமிழ் சொல்வேந்தரான நாவுக்கரசரும்

தவமுடைய திருத்தொண்டர்களும் சேர்ந்து வந்தனர்

அழகிய மணி உடைய கோபுரத்தின் வடபகுதியில்

சீகாழியில் தோன்றிய அந்தணப்பெருமானாகிய சம்பந்தர்

அங்கு ஒரு திருமடத்தில் எழுந்தருளினார்.

2444.

சம்பந்தர் அங்கு விரும்பி எழுந்தருளினார்

சிவபெருமான் திருவடியின் கீழ்

பொருந்தித் தங்கிய காதலுடன் வழிபட்டுக்

காலங்கள் தப்பாமல்

பொங்கும் புகழுடைய திருநாவுக்கரசரும்

கூடிச்சென்று போற்றி இசைத்தார்

எங்கும் துன்பம் தீர்ப்பவராகி இன்புற்று விரும்பித் தங்கியிருந்தனர்.

2445.

பெருகும் நீர்வளம் கொண்ட

திருப்பேணுப்பெருந்துறை உள்ளிட்ட

இடங்கள் பலவும் பணிந்தார்

திலதைப்பதி மதி முத்தம் சென்று பணிந்தர்

பெருகும் ஒலியுடன் நீர் சூழ்ந்த

திருவீழிமலைதனில் மீண்டும் சென்றார்

அங்கு

இனிதாய்க் கும்பிட்டு விருப்புடன் இருந்து வரும் நாளில் —

2446.

வான்வரை உயர்ந்த மாடங்களை உடைய சீகாழியில்

வாழ்கின்ற மறையோரெல்லாம்

திருஞானசம்பந்தப் பிள்ளையாரைக் காணும் விருப்பத்தால்

பெருகும் ஆசையுடன்

காதல் கரை கடந்த மனதுடன்

திருத்தோணிபுரம் வீற்றிருக்கும் இறைவரின்

மலரடி வணங்கி விடைபெற்று

சீகாழி அகன்று

திருவீழிமலை அடைந்தனர்.

2447.

ஊழிக்காலத்தின் முடிவில்

பெருகும் வெள்ளத்தில்

மூழ்காமல் மிதந்த சீகாழி எனும் உயர்ந்த பதியில்

வாழும் அந்தணர்கள்

யாவரும் கூடி

“சம்பந்தர் பக்கத்தில் வந்துள்ளார்” என

திருவீழிமலையில் வாழும் அந்தணர்கள் செவியுற்று

மெய்ஞானம் உண்ட சம்பந்தரை மனதுள் கொண்டு

ஏழிசை சூழும் மறைகளில் வல்ல

அந்த சீகாழி மறையவர்பால் சேர்ந்தனர்

எதிர்கொண்டு வரவேற்றனர்

நகரினுள் அழைத்துக் கொண்டு புகுந்தனர்.

2448.

சண்பைநகர் (சீகாழி) சேர்ந்த மறையோர்களெல்லாம்

கோவிலுள் சென்று

இறைவரைப் பணிந்து போற்றினர்

நட்பால் பெருகிய காதல் கூர்ந்து

ஞானசம்பந்தர் திருமடம் எய்தினார்

நற்பண்பினால் பெருகும் சீகாழிக்கு உரிய

சம்பந்தரின் திருவடிகளைப்

பாதம் பணிந்து தலைமீது கொண்டு

“மேன்மையுடைய திருத்தோணிபுரத்தில்

எங்களோடு எழுந்து அருளும் பேறு யாங்கள் பெறவேண்டும்” என்றார்கள்.

2449.

என அவர்கள் விண்ணப்பம் செய்ததும்

எல்லையிலா சிவஞானம் பெற்ற சம்பந்தரும்

“மிகவும் நன்று

ஆனால் திருத்தோணியில் எழுந்தருளிய

இறைவரின் திருவடிகளை நாம் வணங்க

இன்று கழித்து

திருவீழிமலை இறைவர் அருள் பெற்று

நாளை போகலாம் நாம்” என

சீகாழி மறையவர்களுக்கு பதில் அளித்தார்.

2450.

மேன்மையுடைய திருவீழிமலை அந்தணர்கள்

சீகாழி நகர் அந்தணர்களுக்கு விருந்தை அளிக்க

அவர்கள்

அன்பு கொண்ட சிந்தையினராகி மகிழ்ந்தனர்

மகிழ்ந்து இறைவரை வழிபட்டுத் துதிக்கும்

சீர்பொருந்திய கால எல்லை

இனிதாய்க் கழிய

திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர்

மேகம் போன்ற

வண்மையுடைய கவுணியரான சம்பந்தருக்கு

கனவில்

தாமே தோன்றி அருள் செய்தார்.

2451.

“அந்த சீகாழியில்

தோணியில்

நாம் இருந்த காட்சியை

தூய வேதவடிவாகிய திருவீழிமலையில்

உயர்ந்த விண்ணிலிருந்து இறங்கிய

இந்த

சிறப்புடைய விமானத்திடம் காட்டுகிறோம்

கண்டு வழிபடும் வகையால் அறிக”

எனக்கூறி மறைந்து போனது

பெரும் தவங்கள் புரிந்து

சீகாழிப்பதியினர் பெற்ற திருஞானசம்பந்தர் பெருமான்

தம் உடலில் தோன்றிய புளகமுடன்

துயில் கலைந்து இதனை உணர்ந்தார்.

2452.

அறிவுற்ற சிந்தையுடன் எழுந்தார் அதிசயித்தார்

தலை மேல் அழகிய கைகள் கூப்பினார் தொழுதார்

மணம் பொருந்திய

கொன்றைமலர் சூடிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும்

விண் இழி விமானம் உடைய

கோவிலுள் புகுந்தார்

மான் ஏந்திய கையரை

இறைவரை

திருத்தோணியின் மேல்

முன்பு வணங்கிய அதே வண்ணம் அங்கு கண்டார் வாழ்ந்தார்

அக்குறி நிலையின்

பெருமை காட்டும் திருப்பதிகத்தை

பொருந்திய கொள்கையால் பாடத் துவங்கினர்.

2453.

“மைம்மரு பூங்குழல்” எனத்தொடங்கி

ஒப்பில்லாத பெருந்திருத்தோணி மீது

இளம் கொங்கையுடைய பெரியநாயகி அம்மையுடன்

கூட நீடும் திருக்கோலம் குலாவும் திருவீழிமலையில்

செம்மை தருகின்ற விண்ணிழந்த விமானத்தில்

விளங்க இருந்த வண்ணம் இது என்று

மெய்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தார்

வேதவாயினரான ஞானசம்பந்தர்.

2454.

செஞ்சொற்கள் மலர்ந்த திருப்பதிகம் பாடி

கடைக்காப்பும் சாத்தினார்

அஞ்சலி கூப்பினார் விழுந்தெழுந்தார்

ஆனந்த வெள்ளம் அவரை அலைக்க வெளியே வந்தார்

மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த

புகலியிலிருந்து வந்த மாமறையோர் தம்மை நோக்கினார்

வாய்மை வடிவாய்

நெஞ்சில் நிறைந்த திருவருள் குறிப்பால் உணர்த்தப்பெற்ற

அருள் இயல்பை அருளிச் செய்யத் துவங்கினார்.

இறையருளால் தொடரும்

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்