கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னுள்ளத்தின் ஆழத்தில்
அப்பெண்மணி
எப்போதும் தங்கி யிருப்பாள்!
மங்கிடும்
அந்தி நேரத்திலும்
கணப் பொழுது மின்மினியாய்
காட்சி அளிப்பாள்!
காலை யிளம் ஒளியில்
மூடிய
முகத்திரை என்றும்
அகற்றாத பெண்ணவள்!
அப்பெண் மணியை
கடைசிக் கொடையாக
என்னிறுதிக் கானத்தில்
பின்னி எழுதி
உன்னிடம் கொடுப்பேன்
காணிக்கையாக,
என்னரும் இறைவா!

கன்னி அவளைக்
காளையர் காந்த மொழிகளும்
கவர முடியாமல் தோற்று
விட்டன!
கட்டாயப் படுத்தி ஆசைக்
கரங்கள் நீட்டி
எவரும் தொட முடியாத
எட்டா நிலையில்
கிட்டாம லிருந்தாள்!
நாடு விட்டு நாடாக
ஓடித் திரிந்த போதெல்லாம்,
என் நெஞ்சத்தில்
கூடவே குடியிருந்தவள்!
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில்
வளமை, வறுமைத் தேய்வுகளில்,
உழன்று பிழைத்த
பெண்ணவள்!
எண்ணத்திலும் எல்லாப் பணிகளிலும்
எனக்கு
உடனா யிருந்த
மடந்தை யவள்
என்னரும் இறைவா!

தூக்கத்திலும்
நீளும் கனவிலும் என்னை
ஆளும் பெண்ணவள்
ஆயினும்,
தனியாய் எவருடன் ஒட்டாமல்
வாழும்
வனிதை அவள்!
மனிதர் விரும்பி ஆசையுடன்
வீட்டுக் கதவைத் தட்டினும்,
வெறுப்புடன் வேண்டாது
மறுத்து விட்ட மங்கையவள்!
அப்பெண்ணை எப்போதும்,
நேருக்கு நேராக
நோக்கியவர்
யாருமில்லை உலகில்!
உந்தன் கவனம் பெற்றிடவே,
சோர்வுடன்
காத்துக் கிடந்தாள் அங்கே,
ஏகாந்த நிலையில்,
என்னரும் இறைவா!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 27, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா