அலகிலா விளையாட்டு

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

சாரங்கா தயாநந்தன்


சின்னஞ் சிறு குழந்தையாய்
ஓடி விளையாடுகிறது கவிதை
என்னோடு.
அலகிலா விளையாட்டு
அதனதுவாக.
தாலாட்டிப் போகின்ற
தென்றலின் பின்னேயும்
தன் வாலாட்டி
துணைபின்னே பாய்கின்ற
அணிலோடும் சேர்ந்தோடி
சிறு புல்நுனிவிளிம்பில் அது
ஓய்வுற்றமருதல் கண்டேன்.
பின்னர்
கிட்டப் பறந்த கரியநிற
வண்ணத்துப் பூச்சி ஒன்றின்
சிறகில் தொற்றி
வான்விளிம்பில் வளைந்ததோர்
வானவில்லில்
தெறிக்கக் கண்டேன்.
ஒளியில் மகிழ்வாயும்
இருளில் துயராயும்
தன்முகம் மாற்றி மாற்றி
விளையாடியது அது.
சிந்தை கூர்ந்தபோது
ஒளியிலும் இருளிலும்
வெளியிலும் வழியிலும்
துளியிலும் தொடரருவியிலும்
திருப்தியிலும் அதிருப்தியிலுமென
எதிரிடைகள் கருதாது
எல்லாவற்றிலும்
அது வாழ்தல் கண்டேன்.
இவ்வாறாக….
இருப்பிலும் இல்லாமையிலும்
ஆகத்தக்க அக்கவிதை
மெளனமானது
அழகிய பாடலாய் இசைந்த
ஒரு நள்ளிரவில்
நான் எழுத எடுத்த
தாளில் எஞ்சிக் கிடந்தது
வெறுமையாய்.
—-
nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்