கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 46 in the series 20060217_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பொழுது புலர்ந்தது!
புள்ளினம் சேர்ந்து பாடின!
காலைக் கடல் மெளனம் கலைத்துக்
பறவைக் கானங்கள் அலையலையாய்
மேவி எழுந்தன!
பூவினம் யாவும் பாதை அருகில்
பூத்தன புன்னகை!
பொன்மயக் களஞ்சியம்
மேகக் கூட்டத்தின் ஊடே
சிதறிக் கிடந்தது!
நடந்து போனோம் கவலை யற்று,
கடற்கரை வழியே!
பூரிப்புடன் பாடல் முணங்காது
ஊர்ப்புறம் சென்றோம்!
வார்த்தை வரவில்லை வாயில்!
யாரும் சிரிக்க வில்லை!
நேரம் செல்லச் செல்ல
வேகமாய்ப் போனோம்,
வெளியில் நிற்காது!
வான மையத்தே பரிதி எரித்தது!
புறாக்கள் கூக்கூவென,
மரக்கிளை நிழலில் பதுங்கின!
நரைத்து உதிரும் இலைகள்,
நடனமாடி
வீசிப் பட்டன
நடுப்பகல் வெய்யிலில்!

ஆலமரத்தடி நிழலில் ஆட்டிடையன்,
கண்ணயர்ந்து கிடந்தான்
கனவுலகில்!
கரையோரம் தலைவைத்து
மெல்லச் சாய்ந்து,
புல்வெளியில் கால்நீட்டிக்
கீழே படுத்தேன்!
தோழர் யாவரும் என்னைக்
கேலி செய்தார்!
எங்குமே தங்காது,
சிரம் நிமிர்த்தி அனைவரும்,
விரைந்தேகி மறைந்து போனார்,
திரும்பிப் பாராது!
குன்றையும் வயலையும் தாண்டி,
அன்னிய தேசம் நோக்கி
அநேகர் புலம் பெயர்ந்தார்!
மதிப்பளிப்பேன் உனக்கு, என்னரும்
அதிபதியே!
ஏளனமும், இகழ்ச்சியும்
என்னை எழுப்பிட விட்டன எனினும்,
பின்னும் சும்மா விருந்தேன்!
அவமதிப்பாகித் தாழ்ச்சியின் வீழ்ச்சியில்
அறிவு வந்த தெனக்கு!

பரிதி ஒளிக்கரை அச்சடிக்கும்
பச்சையத்தின் துயர்
மெல்ல மெல்ல
உள்ளத்தில் படர்ந்தது!
பயணம் துவங்கிய காரணம் ஏனோ
மறந்து போன தெனக்கு!
தொல்லை யின்றி உள்ளத்தை முழுதாய்,
கானத்தில் மூழ்க்கி
அர்ப்பணம் செய்தேன் என்னை,
குழம்பிய நிலையில்!
கடைசியில் உறக்கம் தெளிந்து
கண்களைத் திறந்தேன்!
என்னெதிரே நின்றாய் நீ,
புன்னகை முகத்துடன்
கண்வெட்டும் பேரொளியாய்!
இன்னிசைக் கானம் பாடி,
உன்னைத் தேடிக் கொண்டு
போராடிச் செல்லும்,
தூரக் கடும் பாதையில்
வேர்த்துப் போனேன்!
நெருங்கி உன்னிடம் போவது,
எத்தகையக்
கடினப் போராட்ட மென்று,
நடுங்கினேன் தெரியுமா!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 13, 2006)]

Series Navigation