கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நெஞ்சு தளர்ந்து போய்
துஞ்சிய வண்ணம் உள்ளன,
உன் விழிகள்!
மிஞ்சிய பகட்டில்
உன்னத ஒப்பனையில் ஓங்கி
முள்ளின் ஊடேயும்,
துள்ளி ஆளு கின்றன,
பூவிதழ்கள் என்று
நாவில் வரும் வார்த்தை தனைக்
கேள்விப்பட் டுள்ளாயா ?
விழித்திருப்பவனே,
எழுந்து வா!
கடந்திட வேண்டாம்,
காலம் வீணாக!
தனிமைக் கன்னிக் கண்டத்தில்
குந்தி யிருப்பான்,
என்னரும் துணைவன்!
ஏமாற்றி விடாதே,
ஏகாந்த நண்பனை!

விழித்திருப்பவனே
எழுந்து வா!
நட்ட நடுப்பகலில்
சுட்டிடும் வெப்பத் தகைப்பில்
பெருமூச்சு விட்டு,
வான மண்டலம் நடுங்கிப் போய்
மோனம் தளர்ந்தால் என்ன ?
எரிமணல் தூசி கிளப்பி
வேட்கைத் திரையை
விரித்தால் தான் என்ன ?
இதயத்தின் அடி ஆழத்தில்
உவகை பூத்து,
உதய மாக வில்லையா ?
பாதை மீது நீ
அடியெடுத்து வைக்கும் வேளை,
ஒவ்வோர் எட்டு நடையிலும்
உன்னரும் பாதம்
இசைக் கருவியாய் எழுப்பும்
கான இன்னிசை
வலியுடன்
ஒலிக்க வில்லையா
உனக்கு ?

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 8, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா