கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

கவிஞர் புகாரி


சிறகடித்துப்
பறக்குது மின்அஞ்சல்
அதன்…
சிறகசைவில்
துடிக்கிறதென் நெஞ்சம்

கருமுகிலின்
கூடுகளில் இல்லை
நிலா….
கணினிக்குள்
கொதிக்கிறது என்முன்

விரலெடுத்து
நடனமாடும் யாகம்
அதில்…
விரிவதுவோ
காதலெனும் வானம்

இரவுபகல்
விலகாத தாகம்
என்…
இணையக் கிளி
எழுதுகிறாள் நாளும்

கனிப்பாவை
கணினிக்குள் இருந்து
என்…
கனவுகளைக்
கேட்பதுவோர் விருந்து

இனிப்பான
கவிதைகளாய் விரிந்து
தினம்…
என்மனதைச்
சொல்லுவதோ மருந்து

தடதடக்கும்
தட்டச்சுப் பலகை
அதன்….
தாளலயம்
வெல்லுமிந்த உலகை

படபடக்கும்
நெஞ்சங்கள் பேசும்
அந்தப்….
பரவசத்தில்
நரம்புகளும் கூசும்

தூதுசெல்லக்
கடிதமேந்தும் பறவை
பல…
தூரதேசம்
பறந்துபோவ தில்லை

சேதிசொல்ல
வானமேறும் போது
ஒரு….
வேடனுக்கு
விருந்தாகக் கூடும்

மின்னலுக்கு
முன்சென்று கொஞ்சும்
மின்….
மடலாடும்
மகிழ்வோ நீர் மஞ்சம்

இன்னமுதக்
கன்னியவள் மடியில்
நான்….
இருந்தாடும்
சுகங்கூடும் நொடியில்

முகம்மூடி
முகந்தந்தாள் முதலில்
அம்….
முதல்மடலே
மோதிரம் என் மனதில்

அகந்தானே
அஞ்சல்வழி பூக்கும்
அது….
அகலாத
உறவுகளின் ஆக்கம்

முகங்கண்டு
வருங்காதல் மயக்கம்
அது….
முடிந்துவிடும்
மூன்றுநாள் பழக்கம்

அகங்கண்டு
இணைகின்ற உள்ளம்
அது….
அண்டவெளி
ஈர்ப்பினையும் வெல்லும்

நானிங்கே
உலகிலொரு முனையில்
அவள்….
நாணமுடன்
சிலிர்ப்பது மறு முனையில்

வானந்தான்
எல்லையிந்த உறவில்
அவள்….
வாசனையோ
இணையப் பெரு வெளியில்

கூடுவிட்டு
கூடுபாயும் வித்தை
அவள்….
கணினிக்குள்
விழுந்துவிட்ட தத்தை

தேடுபொருள்
கிடைப்பதில்லை வாழ்வில்
என்….
தேவதையைத்
தந்த வலை வாழ்க

(சரணமென்றேன் – காதல் கவிதைத் தொகுப்பிலிருந்து)

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி