கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part of 31 in the series 20050707_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


ஆழ்ந்த உறக்கத்தில்
மூழ்கி யுள்ள நேரத்தில்
என்னருகே அவன் அமர்ந்தாலும்,
நித்திரை யிலிருந்து
ஏனோ நான்
விழித்தெழ வில்லை!
என்னே
எந்தன் சாபக் கேடானத் தூக்கம் ?
அந்தோ
நொந்து போகும் நெஞ்சு!
நெருங்கி வந்த
தருணம்,
நள்ளிரவு அப்பிய நேரம்!
கரங்களில்
யாழினை ஏந்திய வண்ணம்,
விரல்கள் மீட்டிய
இன்னிசைக் கானங்களில் ஒன்றி
பின்னிப் போயின
எந்தன் கனவுகள்!

எனது இரவுப் பொழுதுகள் எல்லாம்
ஏன் இவ்விதம்
கனவுப் பொழுதுகளாய்
ஏமாற்றம் அளித்து
வீணாய்க்
கழிந்து போகின்றன ?
ஆழ்ந்து உறங்கும் வேளையில்
என்னைச்
சூழ்ந்து வரும் அவனது
இன்னிசை மூச்சு,
என் கனவைத்
தொட்ட போதும் இருக்கை
உணராமல்,
கனவிலே அவனைக் கண்டும்
காணாமல்,
இப்படி எப்போதும்
வாய்ப்பை
இழப்பதுவும் அதற்காக
நானேங்கி வருந்துவதும்
எதற்காக ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 3, 2005)]

Series Navigation