எனது எனச் சொல்லப்படுகின்ற….

This entry is part of 23 in the series 20050609_Issue

சாரங்கா தயாநந்தன்


,Cambridge

எனது எனச் சொல்லப்படுகின்ற
உனது வாழ்வை வாழ
பயணப்படுகின்றேன்.
நேற்றென் தாயளைந்த
நீள்நெடுங் கூந்தல்
நானாடிய ஊஞ்சல்
என் நாவிலுலவிய மொழி
சேர்ந்தென்னோடு பாடிய குயில்
சிரிப்புக்கள் சிந்திய வெளி
சகலமும் துறந்து…
நீயென்னைப் பிடுங்கிய பின்னரும்
வேர்களில் ஒட்டியுள்ளது
என் தாய்மண்.
உலர்கையில் உதிருமோ ?
வண்ணத்துப் பூச்சி இறகுகளாய்
வழியெல்லாம் உதிர்கின்றன
என் தங்கக் கனவுகள்.
பாதையெங்கணும் பரம்பியுள்ள,
எவரும் கண்திருப்பாத
அக்கனவுகள் நல்கும் ஒளியுறு எழிலை
என் இதயப் பேழையில்
இரகசியமாய்ச் சேமித்துள்ளேன்
கால உளிச் செதுக்கலோசை
காதுகளை அறைவதில்
நியதியுற்ற பயணங்களை
நிகழ்த்தியாகவேண்டியுளது.
இதோ…உன் கால்தடம் பற்றி
படியும் என்பாதங்கள்
பயணத்தின் சுவடேயற்று….

nanthasaranga@gmail.com

Series Navigation