பா.சத்தியமோகன்
திருக்குறிப்புத்தொண்டர்புராணம் ( தொடர்ச்சி )
1109.
விரிகின்ற அலையுடைய நதிகளின் கரையில்
பல சிவாலயங்கள் அநேகம் பெற்று
பருத்த கையுடைய யானையை உரித்த சிவபெருமானார் வீற்றிருந்த
?திருப்பாசூர் ? எனும் ஊரைப் பெற்றதன்றோ மருதநிலம்!
அதன் மேன்மையை எடுத்துச் சொல்ல வேண்டியது யாது உளது ? இல்லை.
1110.
மலர்கள் மருவும் வயல்களம் குறித்து
மருதப்பண் பாடுகின்ற பொருநர்கள்
தம் அரிய சுற்றத்தாருடன் நீர்நிலைகளில் பூத்த மென்மலர்கள் சூடி
மாமரங்களின் அருகில் குளிர் நிழலிருந்த
மருதயாழ் ஒலிக்கின்ற வயல் நிலத்தின் புறத்தில்
கரிய கழிகளுடையது நெய்தல் நிலம்.
1111.
தூய வெண்மையான மணல்துறை கொண்ட
கடற்கரையில் வாழும் பரதவர் தொடுப்பவை மீன் வலைகள்
சிவந்த நீண்ட கண்கள் உடைய
பரத்தியர் தொடுப்பவை செருத்திய மலர் மாலைகள்
பெரிய உப்பளங்களில் அளக்கப்படுபவை உப்பு
மயில் ஒத்த சாயலும் அன்ன நடையும்
உடைய அளத்தியர்கள் அளப்பவை முத்துக்கள்.
1112.
கொடிய வினைத்தொழிலால் நுளையர்களால் தரப்படுபவை கொழு மீன்கள்
மணல்கரையில் நுளைச்சியர்கள் விற்பவை பவளங்கள்.
கடலைத்தொடும் சங்குகள் குளித்தெடுப்பார்கள் ஆண்கள்
மாவடு பிளந்தது போன்ற கண்களுடைய பெண்கள்
குளிப்பார்கள் மணற்கேணிகளில்.
1113.
சுழிகளுடன் கூடிய கடல் நீரால் சூழப்பட்ட பக்கத்தில் உள்ள
வழிக்கரையில் பொதிந்த பொன்போன்ற மகரந்தத்தைப்
புன்னைமரங்கள் கட்டவிழ்த்துத்தரும்
மலர்கின்ற நெய்தல் மலரில் தங்கிய வண்டுகள் உண்பதற்கு
உப்பங்கழியின் கரையில் நீண்ட மடல்களுடைய தாழை
பொதி சோற்றை அவிழ்த்துத்தரும்.
1114.
உப்பங்கழியின் கானல்களில் வளமையுடைய கரைகளில்
குற்றம் பொருந்திய சிறிய வழிகளை
முதிர்ந்த முட்கள் கொண்ட
குளிர்ந்த மணம் வீசும் செழித்த அரும்புகள் கொண்ட
முள்ளிச்செடிகள் அடைக்கும்
அங்குள்ள நுண் மணல் வெண்மையினில்
அன்னப்பறவைகள் தாவி விளையாடும்
முன்கரையின் சுற்றுப்புறம் சூழ்ந்து முளைத்த
ஞாழல் மலர்களில் பூந்தாதுக்கள் மறைக்கும்.
1115.
தாவுகின்ற பெரும் அலைகள் உள்ள இடத்தின் முன்
குடிகளின் இருப்பிடங்களில்
மூங்கில் போன்ற தோள்களுடைய
பரத்தியர் பரப்பிய கயல்மீன்களுள் கண்கள் என்ற கயல்மீன்கள் தவிர
பிற மீன்களை விற்கின்ற
இனிமை மிக்க சிறிய மழலை மொழிகளின் இனிமையை
அந்நிலத்திற்குரிய செவ்வழியாழ் பெற்றுள்ளது.
1116.
மயக்கத்தால் கொடுந்தொழில் செய்யும்
மாந்தாதா என்ற அரசன்
கோவிலுக்குரிய அறச்செயலை
?எல்லா கோவில்களிலும் குறைக்க ? என எழுதிய ஏட்டின் வரியை
சிவபெருமான் வரி பிளந்து
?திருவொற்றியூர் நீங்கலாக ? எனத்தொடங்கி எழுதிய
பெரிய கோவிலின் ஒரு பக்கத்தில் சூழ்ந்த பரப்பினை உடையது
அந்த நெய்தல் நிலத்தின் ஒரு பகுதி.
1117.
எலும்பை உடலாக ஆக்கும் புகழ் கொண்ட திருமயிலையும்
மணம் கமழ் மலர்கள் நெருங்கிய
குளிர் சோலைகள் சூழ்ந்த திருவான்மியூர் முதலாக
அந்நெய்தல் நிலத்தில் பல இடங்களை
படம் பொருந்திய பாம்பு அணிந்தவர்
வீற்றிருக்கும் இடங்களெனக் கொண்டார் எனில்
நெய்தல் நிலம் செய்த நிறைந்த தவம் சிறிதோ!
1118.
சங்குகள் கொண்டு எழும் திரைகடலில் படரும்
பவளக்கொடியின் மென் கொழுந்துகள்
அருகிலுள்ள சந்தனமரக் கிளைகளில் வளர்கின்றன
நீண்ட நெய்தலும் குறிஞ்சியும் சேர்ந்து
புணர்கின்ற நிலம் இவ்வாறு பலகொண்டு
அசையும் நீள் கொடி கொண்ட மாடங்கள் கொண்டு
மாமல்லபுரம் போன்று
பல நகரங்கள் உண்டு நெய்தல் நிலத்தில்.
1119.
மலைகள் கண்திறந்து விழிப்பது போலிருக்கிறது
வயல்களில் உள்ள சேல் மீன்கள் பாறைகளின் மீது பாய்ந்து புரள்வது!
வயல்களில் –
ஏரில் பூட்டப்பட்ட கரிய எருமைகள் செல்வது போலிருக்கிறது
கரிய கலைமான்கள் குதித்துச் செல்வது!
அலைகள் பொருந்திய வயல்கள் இவ்விதமாக
குறிஞ்சியோடு கூடிய இடங்கள் ஏராளம்.
1120.
பசுமந்தையுடைய முல்லைக்காட்டின் குறுமுயல்
மலையுச்சியில் உள்ள முழுமதியிடம் உள்ள முயல்கறை பார்த்து
தன் இனமென அங்கு செல்லும்
மணம் கமழும் முல்லை நிலத்தின் வரகு போர்களை
மலைகளை நீராட்டச் செல்லும் மேகங்கள் சேரும்
முல்லையும் குறிஞ்சியும் இவ்வாறு கலந்த நிலங்கள் பல.
1121.
தாம் பிடிக்கும் மீன்குவியல்களை பரதவர்கள்
இடையர்க்குத் தந்து அவர்களிடமிருந்து
கவுதாரியும் சிவலும் பண்டம் மாற்றிக் கொள்கின்றனர்
அவரைக்கும் தினைக்கும் ஈடாக
பவளமும் முத்தும் அளந்து தருகின்றனர்
நெய்தல் நிலமும் முல்லை நிலமும்
இப்படியாக ஒழுக்கத்தினால் கலந்துள்ளன.
1122.
ஒன்றைத் தந்து ஒன்று அடுத்திருக்கும்
மணம் வீசும் முல்லைக்காட்டில் வாழும்
இடைச்சியரின் அழகிய நடையும்
அகன்ற பெரிய வயல்களையுடைய
மருதநில உழத்தியரின் சாயலும் விரும்பி
அன்னப்பறவை மருதத்திலிருந்தும்
முல்லைநிலத்தின் மயிலும் எதிர் எதிர் பழகுவதால்
ஒன்றாகக் கூடுகின்ற பலநிலங்கள் அங்குள்ளன.
1123.
அலைகள் கரையில் புரள்வதால் கொழிக்கும் வெண்முத்துக்களும்
பாளைவிட்டு உதிரும் மலர்களும் கலக்கின்றன
பருத்த மூங்கில் தோளுடைய உழத்தியரும் பரத்தியரும்
அவற்றைத் தொடுக்கும்போது மாறுபட்டு விடுகின்ற
நீண்ட நெய்தலும் மருதமும் கலந்த நிலங்கள் அங்குள்ளன.
1124.
குறிஞ்சி முதலான நால்வகை நிலங்களிலும் அமைதியிலும்
தத்தமக்கு அடுத்துப் பொருந்திய செய்தொழிலால்
வேறு பல குலங்களால் விளங்கி
தீயவை என்பன கனவிலும் நினையாத சிந்தை கொண்ட
தூய மாந்தர் வாழும் தொண்டை நாட்டின் இயல்பு சொல்லில் அடங்குமோ ?
1125.
இத்தகு வளங்களுடைய தொண்டை நாட்டில்
என்றும் மெய்யான வளம் தருகின்ற சிறப்பால் உலகம் வியக்க
எவ்வுலகங்களிலும் அழியாதது என யாவரும் புகழ்ந்து
துதிக்கும் ஒழுக்கத்தால் விளங்கிய நிலை கொண்டது காஞ்சி மாநகரம்.
1126.
இத்தகு தொல்நகரம் காஞ்சி நகரம்
அம்பிகையான உமாதேவியார் தம் பெருமானை
பெருமையுடைய பூசையால் ஒரு கால்த்தில் வழிபட்டு
குற்றமற்ற பல அறங்களையும் நிலைபெற வைத்து
உலகம் உய்ய வைத்த மேன்மை பூண்ட அப்பெருமையை
அறிந்தவாறு சொல்லப்புகுந்தால் –
1127.
வெள்ளி மலையில் திருக்கயிலாயத்தில் வீற்றிருந்து அருளி
குதிகொள்ளும் கங்கை சூடிய சிவனார் அருள் செய்ய
அவரைத் தொழுது தெளிந்த வாய்மையைச் சொல்லும்
ஆகமங்களின் திறனை உள்ளது உள்ளபடி
கேட்டறிந்து அருளினார் உலகை ஆளும் உமாதேவியார்.
1128.
எண்ணிக்கையில் அடங்காத ஆகமம் இயம்பிய சிவனாகிய இறைவர்
?தாம் விரும்பும் உண்மையாவது வழிபாடே ? என உரைத்து அருள
அண்ணலாரை அர்ச்சனை புரிய விருப்பம் கொண்டார்
பெண்ணாகியவருள் நல்லவளான பெரும் தவக்கொழுந்து
1129.
நங்கை உமாதேவியாரின் காதலை நோக்கி
நாயகன் திரு உள்ளத்தில் மகிழ்ந்தார்
அவ்வாறு எய்திய புன்முறுவலுடன்
?உன் மனதில் பொருந்தியது யாது ? என வினவினார்
?தலைவ! நீ மொழிந்த ஆகமத்தின் முறைப்படி
உம்மை பூசிக்க என் ஆசை பொங்குகின்றது ?
என்றார் போகமார்ந்த பூண் முலையரான உமாதேவியார்.
1130.
தேவதேவனான சிவபெருமான்
உமை கூறியதை உள்ளத்தில் கொண்டு
?தென்திசை செய்த மிக்க தவத்தால்
யாவரும் தனை வந்து அடையத் தக்கதும்
மண்மேல் எக்காலமும் அழியாது நிலைபெற்றதும் காஞ்சி ஆகும்
அதனுள் –
மாமரத்தின் அடியில்
நாம் விரும்பி எழுந்த இருக்கை சேர்ந்து
நிலைத்த வழிபாட்டை மகிழ்ந்து செய்வாய் ? என ஏவ
எம்பெருமாட்டி பிரியா விடை கொண்டு எழுந்தருள சம்மதித்தாள்.
1131.
குற்றமிலாத பலவகையான யோனி பேதமான
எண்பத்து நான்கு நூறு ஆயிரம் வகையுள்
வைக்கப்பட்ட உயிர்களைக் காப்பாற்றி அருளும்
கருணை பிரான் சிவனார் மொழிந்த
ஆகம வழி பேண விரும்பித்
தொழுத வண்ணமாக உமையம்மையார் செல்ல
மலையரசனும் விருப்புடன் அத்தவம் புரிய ஏற்ற வளமும்
ஏவல் மகளிரும் அனுப்பி வைத்தான்.
1132.
நெருங்கிய பலவுயிர்களூம் தேவர்களும் முதலாய்
தம்மை சூழ்ந்து உடன்போக
அம்மையார் காஞ்சி அடைய
அவரை நோக்கி பதுமன் என்ற மாநாகம்
தன் தலைவியான
இறைவியின் திருவடிகளை தலையில் வைத்துக் கொண்டு
?அன்னையாய் உலகு அனைத்தும் ஈன்றாய்
அடியேன்வாழ்கின்ற பிலத்திடையே
நிலை பெற்று கோயில் கொண்டருள்வாய் ? என்றதும்
மலை மடந்தை அதற்கு அருள் புரிய இசைந்து-
(பிலம் = இது காஞ்சி காமகோட்டத்தில் உள்ளது)
1133.
மண்ணுலகத்தில் உயிர்கள் எல்லாம் தழைப்பதற்காக
அளவிலா இன்பமுடைய அருளையே கொண்டு
பிறைச்சந்திரன் தங்கிய
திரிசடை உடைய சிவனார்க்குத்
திருத்திய பூசனைகள் செய்ய விரும்பினாள்
அப்பெருமானை எங்கும் தேடினார்
ஒப்பிலாத திருவிளையாட்டால் எதிர்படாமல் மறைந்திருந்தார்
பொங்குமாதவம் செய்து சிவனாரைக் காண்பதற்கே
பரிவு கொண்டாள் பொன் மலை வல்லி யான உமை அம்மை.
1134.
உமை அம்மையின் நெஞ்சம் ஈசனைக் காண்பதே
எக்கணமும் விரும்பி நிரந்தரத் திருவாக்கில்
ஐந்தெழுத்தே நிகழ்ந்தது
அம்மையின் செம்மலர்க்கைகள் குவித்து வணங்கி
தஞ்சம் தேடி அருந்தவம் புரிந்தன.
அவள் தனிப்பெரும் கணவர் பொறுப்பாரோ!
குற்றமற்ற மாமரத்தின் மூலத்தில் லிங்கத்திருமேனியாக
வந்து தோன்றினார் மலைமகள் காண.
1135.
பெருந்தவப்பயனால் ஏகம்பம் மேவிய தம்பெருமானாகிய
இறைவரைக் கண்ட போதில்
கொவ்வைக் கனி போன்ற உதடு உடைய உமை நங்கை
வண்டுகள் மொய்க்கும் குழல் முன்னால் தாழ
வணங்குவதால் வந்தெழும் ஆசை முன்பொங்க
கொண்ட காதலின் விருப்பம் அளவிலாதது என ஆக
எண்ணிய பூசனைக் கொள்கையை மேற்கொண்டார்.
1136.
தேவர்களின் நாயகர் சிவனாரின் பூசனைக்கு
அவர்தாம் உரைத்த ஆகமத்தின் உண்மைப்படி நின்று
எம்பெருமாட்டியார் அர்ச்சனை புரிவதற்காக
இயல்பில் வாழும் திருத்தோழியர்களான
கொம்பைப் போன்ற பெண்கள் பூக்கூடையுடன் வர
தளிர் போன்ற அடிகளால் மெல்ல நடந்து
?அம்பிகாவனம் ? என்ற திருச்சோலையில்
சிவபெருமானுக்கு ஏற்ற நறுமலர் கொய்தாள்
1137.
கொய்த பலப்பல மலர்களும்
கம்பை மாநதியில் குலவி நீராட்டும் நீரும்
நிலவு மெய்ப்பூச்சும்
நெய் உடைய தூப தீபங்களும் வேண்ட
சிந்தை நிறைந்த நீடிய அன்புடன்
உமை அம்மைக்கு
பூசைக்குரிய சாதனங்களை தோழியர் கொண்டு தர
ஆகம விதிப்படி அனைத்தும் செய்தார்
உலகெலாம் பெற்ற எம்பெருமாட்டி.
1138.
உயிர்களுக்கு வரமளிக்கும் பேரரருளான மலையரசன் மகள்-
?கைகள் பெற்றதன் பயன் சிவபூசி செய்தலே ? என அறிந்து
திருஏகம்பம் மேவிய தேவர் நாயகன் சிவனாரை
பரந்த காதல் செய் உள்ளத்தால் ஆகி
மிக்க நன்மைகள் யாவும் பெருக
ஒப்பிலா வகையில் விரிந்தெழுந்த பேரன்பால்
தலையால் வணங்கி எழுந்து செய்யும் பூசை
இறைவரின் திருவுளம் பொருந்தப் பெருகியதே.
1139
பெருவிருப்போடு மகிழ்ந்து
உமையம்மை நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்க திருவிளையாட்டில்
?கனமான காதணி அணிந்த அவருக்கு அருள் புரிய வேண்டி
ஓதப்பெருக்குடைய மூன்று கடல்களும் ஒன்றாய்ப்பொங்கி
வானமும் உள் அடங்கும்படி மேலே உயர்ந்து போவது போல
கம்பை ஆற்றில் வெள்ளம் பெருகிவருமாறு திருவுள்ளம் செய்தார்.
(திருவருளால் தொடரும்)
sathiyamohan@sancharnet.in
cdl_lavi@sancharnet.in
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- ஒரு கடிதம்
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- உங்கள் மூதாதையர் யார் ?
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- புகழ்
- அமிழ்து
- கபடி கபடி
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- காதலுக்கு மூட்டுவலி
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திருவண்டம் – 3
- சிறைவாசம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- குளங்கள்
- ரோஜாப் பெண்
- அம்மா
- இசட் பிளஸ்