எம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை

This entry is part of 42 in the series 20050408_Issue

எம்.எச்.ஏ. கரீம்


ஒரு
குஞ்சுக் கோழியின்
தலையைத் திருகி எறிந்தாற்போல
நானும்
சில மனங்களும்.

நீங்கள்
உங்களினத்திற்காகவும்
அவர்கள்
அவர்களினத்திற்காகவும்
போராடும் தேசத்துள்
மனித இனத்திற்காக ?

சிங்களவரை
தமிழரை
முஸ்லீம்களைக் காப்பாற்றச்
சிலரும் கட்சிகளும்

மக்களைக் காப்பாற்ற ?

ஆசைக்குள்
தொலையவிட்டு
உங்களை
மக்களை மட்டும்
நிராசைக்குள் விட்டுவிட்டு.

இல்லாதததை
இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள்
கொன்று புதைத்த
தோழர்களின் கிடங்குகளுக்கு
அருகே
இதயம் முன்னர்
இருந்த இடத்தை.

ஒரு தேசத்துக்கானதல்ல
முழு உலகத்திற்குமான
உரத்துப் பாட முடியா
மெளனமான
ஒரு ஒப்பாாிக் கவிதை இது!.

எம்.எச்.ஏ. காீம், இலங்கை
—-

Series Navigation