கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இங்கே உள்ளது நீ
பாதங்களை ஓய்வாக வைக்கும்
உந்தன்
பஞ்சணைப் பீடம்!
ஏழை, எளியவர்,
எல்லாம் இழந்தவர்,
கீழே உள்ளவர் அனைவரும்
வாழும் குடித்தளம் அது!
குனிந்து
வணங்கி உன்னைக்
கும்பிட வரும் போது,
எனது
பணிவுக் கரங்கள் பற்றித்
தொட முடியாத
ஆழத்தில்,
ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,
கீழே
தள்ளப்பட்டவர் அனைவரும்
வாழும் பாதாள
பள்ளத்தில் நின்றன்
பாதங்கள்
இளைப்பாறு கின்றன!

செருக்குடையோன் எவனும்
ஒருபோதும்
அருகில் நெருங்க முடியாது,
ஏழை, எளியவர்,
எல்லாம் இழந்தவர்,
தாழ்த்தப்பட்ட,
இனத்திடையே நீ,
எளிய ஆடை அணிந்து
உலவி வரும்
தளங்களை!
என்னிதயம் என்றைக்கும்
பாதை காண முடியாத
பகுதிகளில்
ஒதுங்கிவரும்
துணையற்ற எளியோரிடம்,
கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்,
ஏழை மாந்தரிடம்
என்றென்றும்
தோழமை
கொண்டுள்ளாய் நீ!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 27, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா