பருந்துகள்

This entry is part of 35 in the series 20050304_Issue

ஸ்ரீமங்கை


பருந்துகளை
விரும்பியிருந்தேன்,
உயரப்பறத்தலுக்காக.

பிற பறவைகள்
அண்ணாந்து பார்க்கும்
உயரங்களைக் கூரிய நகங்களால்
கிழித்துப் பறக்கும்
பருந்துகளின் உயரப் பறத்தல்
கழுத்து வலிக்கப் பார்க்கவைக்கும்

சிறகடிப்புகூட கிளம்பும்வரைதான்.
உயரங்களிலோ
சிலைபோல உறைந்த
தவப் பறப்பு..

நிழல்கள் புவியில் படியாது
விண்ணையும் மண்ணையும்
பறந்தே ஆளும் பருந்தின்
பிடியில் கற்களிலும்
துளைவிழும்.

வசந்தத்தில் பாடாது,
வால் வண்ணம் மாற்றாது.
துணை மறைந்தால் சோகமாய்க்
கிளைகளில் கூவாது,
பறத்தல் மட்டுமே
தவமாய்க் கொண்ட
பருந்தை நான்
வியந்திருந்தேன்..

உயரப்பறத்தலிலும்
பார்வை புவியில் நாறும்
பிணங்களிலும்,
எலி,முயல்களிலும்
மட்டுமேயென
அறியும் வரை.

அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com

Series Navigation