நட்போடு வாழ்தல்

This entry is part of 34 in the series 20050206_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


இன்னும் தொடுவானில் கையசைக்கும்
மணக்கோலச் சூரியன்.
கீழே படுக்கையில்
பொறுமை இழந்த பூமிப் பெண்
வெண்முல்லைப்பூ தூவிய
நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.
எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.
என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை
கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.
வழித்துணையை போற்றினும் புணரினும்
எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது
விடைபெறும் நேரம்.
தோழி
உடன் இருக்கிற இன்பங்களும்
பிரிகிற துன்பங்களும் அடுக்கிய
நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா
நம் வாழ்வு.

பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து
ஆர்ப்பரித்த வானம்
இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.
என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா
நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா
அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா
இந்த மாரி இரவு.

கண்சிந்தும் பிரிவுகளில்
நிறைகிறது வாழ்வு.
ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்
காதலியர் வசைபாடி அகல்கையிலும்
நாளை விடியாதென உடைந்தேன்.
இனி முடிந்ததென்கிற போதெல்லாம்
பிழைத்துக் கொள்கிறது
வெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒரு
குட்டிவாழை பூக்கிற உலகு.

என் இன்றைய கனவுகளின் நாயகியோ
எப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.
இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்
எனக்காக அந்த
ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?

தோழி உன் யாழிசையில்
சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.
கிடங்கில் திராட்சை மதுவாய்
முதிர்கிறதென் கவி மனசு.
எச்சில் ஒழுக வழி மறித்து
முத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்
எரிகிறது என் ஆத்மா.

கண்டங்களே அசைகிற உலகில்
மனிதர்களிடையே நிலையானது எது ?
எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்
கரு கறுத்த மேகங்களின் கீழ்
பஞ்சு விதைகளாய் மிதக்கும்
மாவீரர் கனவுகள்போல
உயிர்தெழுமெம் வாழ்வு.

-2005. May
visjayapalan@yahoo.com

Series Navigation