பெரியபுராணம் – 24

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

– பா.சத்தியமோகன்


[ அமர்நீதி நாயனார் :-
சோழ நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அவர் திருநல்லூரை விரும்பி அவ்வூரில் தங்கியிருக்கலானார். அவ்வூரில் ஒரு மடத்தையும் ஏற்படுத்தினார்.
அவர் சிவனடியார்க்கு ஆடை,கீள், கோவணம் முதலியவற்றை அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய அவரிடம் ஓர் அந்தணர் வந்தார். அவர் தம்மிடம் உள்ள கோவணத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு நீராடச் சென்றார். சென்றவர் நனைந்தபடி வந்தார். அமர்நீதியாரிடம் கொடுத்து வைத்திருந்த கோவணத்தைத் திரும்பத் தரும்படி வினவினார். என்னே
வியப்பு! அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் அக்கோவணத்தைக் காணவில்லை.
செய்வது இன்னது என்று தெரியாது திகைத்தார். அவர் வேறு கோவணத்தைத் தருவதாகச் சொன்னார், அதை அந்தணர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பொன்மணி முதலியவை தர முன் வந்தபோதும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ள மற்றொரு கோவணத்துக்கு நிகரான எடையுள்ள் கோவணத்தைத் தர வேண்டும் என்றார். அவர்
விரும்பியபடியே ஒரு துலாக் கோலில் அந்தணர் கோவணத்துக்கு ஈடாக தன்னிடம் இருந்த புதிய கோவணத்தை இட்டார். அது சமமாக வில்லை. அதனால் தன்னிடம் இருந்த கோவணங்களை எல்லாம் இட்டும் சமமாகவில்லை.
மேலும் தன்னிடம் இருந்த பட்டாடை, பொன், வெள்ளி, மணி முதலியவற்றை இட்டார். அப்போதும்
நிகராகவில்லை. அதனால் வியப்படைந்த அமர்நீதியார் இறைவரை வணங்கித் தாமும் தம் மனைவியுமாகத் துலாத் தட்டில் ஏறி நின்றனர். அப்போது தட்டுகள் சமமாய் நின்றன.
இறைவர் அவர்க்குக் காட்சி தந்து பேரின்ப வீட்டை அளித்தார்.]
12.அமர்நீதி நாயனார் புராணம்
502.
சிறப்பில் நீண்ட சோழமன்னர்களின்
காவிரி பாய்கின்ற நல்ல நாட்டிலே
மேகம் போல் அமைந்த
களிப்பு கொண்ட வண்டுகள் மொய்த்த
பூஞ்சோலை சூழ்ந்த தேவர்கள் சூழ்ந்த
செழுமை மிக்க மாளிகைகளுடைய தெரு அமைத்து
நிலைத்த புகழுடையது பழையாறை எனும் பதி ஆகும்.
503.
அமர்நீதியார் நிலைத்த அந்நகரத்தில்
வணிகர் குலத்தில் தோன்றினார்
பொன்னும் முத்தும் நன்மணிகளும்
பூந்துகில் உள்ளிட்ட சகல நிலவளமும் மிகுந்து
வாணிகத்தில் மிக்கவர் அவர்.
504.
சிந்தனை செய்வது சிவன் திருவடி தவிர வேறில்லாதவர்
அந்தியின் வண்ணம் போன்ற சிவனடியார்க்கு
அமுது செய்துவித்து அவர்கள் கருத்தறிந்து கீளும் உடையும் தந்து
அதன் பயனாய் செல்வத்தின் பயனைக் கொண்டவர்.
( கீள் : தகட்டு வடிவாய் நூலால் செய்து அரைஞாணாக
இடுப்பில் கட்டிக் கொள்வது )
505.
மூன்று கண்களுடைய நக்கரான முழு முதற்கடவுள்
சிவபெருமானின் திருநல்லூரில் மிக்க சிறப்பான திருவிழா
விருப்பத்துடன் வணங்கி
தக்க அன்பர்கள் உணவு கொள்ள திருமடம் அமைத்தார்
சுற்றத்தாரும் தாமும் வந்தடைந்தனர் திருநல்லூருக்கு.
( நக்கர் – நிருவாணர் )
506.
பொருந்திய அன்போடு வணங்கியவராக
திருநீலகண்டரான சிவபெருமான் வீற்றிருக்கும்
திருநல்லூரின் திருவிழாச் சிறப்பை தரிசித்து
திருமடத்தில் மென்மேலும் அடியார்கள் இன்பத்துடன்
உணவு கொண்டிடச் செய்து உருகிய மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வந்த நாளிடை ஒரு நாள் –
507.
தளிர் போன்ற பிறை சூடிய பெருந்தகை
பெருந்திருநல்லூருக்கு
தம் கோவணத்தின் பெருமையைக் காட்டி
அதன் மூலம் அன்புத் தொண்டருக்கு அருள் செய்யும் பொருட்டு
வேதியர் குலத்துத் தோன்றிய பிரமச்சாரியின் கோலம் கொண்டு –
508.
சிவந்த சிறு சடை மறைத்த திருமுடிச்சிகையும்
சைவ உபயத்திற்குரிய திரிபுண்டரமாய் அணிந்த திருவெண்ணீறும்
அதன் ஒளித் தழைப்பும்
திருமேனியில் வெண்மையான புரிகள் கொண்ட பூநூலும்
விளங்கும் மாந்தோலும்
கைவிரலில் மரகதக்கதிர்விட்டு ஒளிரும் நீண்ட மோதிரமும்
509.
முஞ்சிப் புல்லைத் திரித்து அணிந்த இடையில்
தஞ்சமென அடைந்த மறையான கோவண ஆடையின் பிணிப்பும்
வஞ்சமுடைய தீ வினையான கறுப்பு நீங்கிய
உள்ளம் கொண்ட அடியாரின் மனதில்
நீங்காமல் நின்ற திருவடி மலர்கள் பெரிய நிலத்தில் விளங்க —
(முஞ்சிப்புல் – ஒருவகை தர்ப்பைப்புல் )
510.
கண்டவர் யாவர்க்கும் காதலால்
மனம் கரைந்து உருகுமாறு
தொண்டரின் அன்பெனும் நெறியை வெளிப்படுத்துவாராகி
தம் கைகளில் தாங்கிய தண்டில் இருகோவணமும்
திருநீற்றுப் பையும் தருப்பைப்புல்லும்
கொண்டு வந்து அமர்நீதியாரின் திருமடம் புகுந்தார்.
511.
அவர் வடிவு கண்டதுமே
மனதில் அடைந்ததைவிட முகம் மிக மலர்ந்து
கடிது வந்து எதிர் வணங்கினார்
இம்மடத்தில் காணும்படி இல்லாத தாங்கள்
இன்று அடியேன் காணும்படி வந்ததற்காக
என்ன தவம் செய்தேனோ என்றார் அமர்நீதியார்.
512.
வழிபட்டுப் பேணும் அமர்நீதியாரை நோக்கி
நெற்றிக்கண் மறைத்து வந்த இறைவன் கூறினார்:
நீவீர் அன்பால் பெருகிய அடியவர்க்கு
கந்தை, சீள், உடை இவற்றோடு
புதிய வெண்மையான உயர் கோவணமும்
கொடுப்பது கேட்டுக் காண வந்தோம்
(கந்தை: நாலைந்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து நூலிழை
ஒட்டப்பட்ட போர்வை )
513.
இங்ஙனம் தம்பிரான் அருள் செய்ததும்
இத்திருமடத்தில் நான்மறைத் தவசீலர்கள்
உண்ணத்தக்கபடி வேதியர்கள் சமைப்பதும் உண்டு
அதனை நீரும் உண்டு அருள வேண்டும் என வணங்க –
514.
வணங்கும் அமர்நீதியாரை நோக்கி
அம்மறை வேதியர் இசைந்தார் பிறகு
தெய்வத்தன்மை மிகும் காவிரியாற்றில் நீராடி
திரும்பி வரும் போது மழை வர வாய்ப்புண்டு
ஆதலின் இக்கோவணத்தை பாதுகாத்து வைத்துப்பின் தருக என
தண்டினின்று அவிழ்த்துக் கொடுத்தார்.
515.
சிறந்த இக்கோவணத்தின் பெருமையை
உள்ளவாறு நான் சொல்ல வேண்டியதில்லை
நீர் இதனை வாங்கி நான் வரும் வரையில்
உம்மிடத்தில் தவறாது காப்பாற்றி வைத்துத்
திரும்பத் தருக என்று அமர்நீதியாரின் கையில் கொடுத்தார்.
516.
குற்றமிலா அமர்நீதியார் இறைவர் தந்த
கோவணம் பெற்றுக் கொண்டு
நீவீர் நீராடி விரைவில் இங்கெழுந்தருள்க என்றதும்
கங்கை அணிந்த வளர்சடை மறைத்த வேதியர்
காவிரியின் அலைகளில் நீராடச் சென்றார்.
517.
வேதியர் தந்த கோவணம் பெற்ற தனிப்பெரும் தொண்டர்
முந்தை அந்தணரான அவரது சொல்லை ஏற்று
தாம் தருவதற்கு வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம்
இவற்றை வைத்த இடத்தில் அல்லாது
வேறு ஒரு இடம் சிந்தை செய்து மந்திரமாக ஓரிடத்தில் வைத்தார்.
518.
நீராடச் சென்ற இறைவர்
வேதியர் வைத்த கோவணத்தினை மறையச் செய்தார்
நீலோற்பலம் மலரும் அழகிய காவிரி நீரில் ஆடித் திரும்பினாரோ!
தூய மணம் வீசும் சடையில் உள்ள கங்கை நீரில் ஆடி வந்தாரோ!
நாம் அறியோம்!
வான நீர் மழை பொழிந்திட அதில் நனைந்து வந்தார்.
519.
கதிரை உடைய இளம்பிறை அணிந்த இறைவர் வந்து சேர்ந்தபோது
முதிரும் அன்புடைய தொண்டர் முறைப்படி
அதிக நன்மையில் ஆறுசுவை பொருந்த திருவமுது ஆக்கி
அவர் வந்ததும் எழுந்து எதிர் கொண்டு வணங்கி நிற்க
நிறைந்த பூணூல் அணிந்த மார்புடைய இறைவர் –
520.
தொண்டரின் அன்பு என்ற தூய நீரில் ஆடுவதற்காக
செறிவான குளிர் நீரிலே முழுகியதால்
ஈரமான கோவணம் மாற்றுவதற்கு
தண்டின் மேல் உள்ளது ஈரமாக உள்ளது
ஆதலால் நான் தந்த கோவணம் கொண்டு வாரும் ?
என்றார் கோவணக் கள்வர்.
521.
தலைவரான இறைவரின் லீலை அறியாத அமர்நீதியார்
விரைவாக உள் சென்று நோக்கினால்
தனியான இடத்தில் அவர் வைத்த கோவணம் கண்டிலர்
நான் வைத்திருந்த கோவணம் செய்தது என்ன
என்று திகைத்தார். தேடினார்.
522.
இறைவரின் வெண்மையான கிழியாத கோவணம் போய்விட்டது
இதில் சந்தேகமில்லை என முடிவு செய்து
தம் துகிலில் தம் பொருளில் தேடியும் காணவில்லை
என்ன செய்வார்! நின்றார்
அருட் கண்ணுடைய இறைவரின் மாயையில் அகப்பட்டார்.
523.
மனைவியோடு சுற்றத்தோடு தாமுமாக இருக்க
இப்படியொன்று நடந்துவிட்டதே என இடர் அடைந்தார்
எண்ணுதற்கு ஒன்றுமில்லாமல் ஆனார்
வருந்தினார்; நிற்கவும் மாட்டார் வேதியர் புனைவதற்கு
வேறு ஒரு கோவணம் கொடுக்கப் புறப்பட்டார்.
524.
இறைவனின் முன் சென்ற அமர்நீதியார்
அடிகளே நீவீர் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணோம்
மற்றோரிடத்தில் ஒளிப்பவர் யாரும் இல்லை
அது எப்படி போயிற்றோ அறியேன்
இது போன்ற அதிசயம் கண்டதில்லை என்றார்.
525.
வேறு நல்ல கோவணம் தாங்கள் அணிய
விரும்பிக் கொணர்ந்தேன் கிழிந்தது அல்ல
கோவணமாகவே நெய்தது
விளங்கும் திருநீறு அணிந்த நெற்றியுடையவரே
மாற்றாக இதை உடுத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க —
526.
அங்கு நின்ற வேதியர் வெகுண்டார்
அமர்நீதியாரே! நீர் சொல்வது மிக நன்று!
இடையில் அதிக நாள் செல்லவும்-
நன்று !! இன்று நான் கொடுத்த கோவணத்தைக் கவர்ந்து கொண்டு
நீவீர் வேறு பெறுக எனக் கூறுவதா ? என்று கூறி –
527.
என் கோவணம் கொள்வதற்குத்தானே
நல் கோவணம் தருகிறேன் என உலகில் பலநாளும் கூறுகிறீர் ?
விரைவாக நீவீர் செய்த வணிகம் அழகாயுள்ளது உமக்கு! என
எல்லையிலா இறைவர் நெருப்புத் துள்ளியது போல் சினந்தார்.
528.
மானை ஒளித்து அதற்கு பதிலாக
தண்டு ஏந்தி வந்த மறையவர் கோபித்ததும்
ஐம்பொறிகளும் கலங்கிய உணர்வுடன் முகம் வாடி
சிறியனேன் பெரும்பிழை பொறுத்தருள் செய்வீர்அடியேன்
அறிந்து இப்பிழை நிகழவில்லை என அடிவணங்கித் தளர்ந்தார்.
529.
தாங்கள் எது செய்யச் சொல்லினும் செய்வேன்
இக்கோவணம் தவிர விருப்பந்தக்க
நல் பட்டாடை மணிகள் என உயர்ந்தவை
கோடி வேணுமாயினும் கொள்ளுங்கள்
என உடலில் அடங்கா அச்சத்துடன்
காலடியில் பலமுறை விழுந்து பணிந்தார் அமர்நீதியார்.
530.
பணியும் அன்பரை நோக்கி அப்பரம் பொருளனார்
கோபம் தணிந்த உள்ளத்தவர் போல
நீவீர் தந்த மணியும் பொன்னும் நல் ஆடையும்
எனக்கு என்ன பயன் தரும்
அணியும் கோவணம் தருவதே ஈடு என அருள் செய்ய —
531 .
மலர்ந்த உள்ளத்தவராகிய
வணிகருள் ஏறு போன்ற அமர்நீதியார்
வெண்நிறக் கோவணத்திற்குப் பிரதியாகப்
பூந்துகில் கொள்வதற்கு தாங்கள் இசையவில்லை எனில்
நலம் கொள் கோவணம் தருகின்ற வகை யாது ? என்று கேட்க–
532.
இறைவர் சொன்னதாவது:-
உடுத்திய கோவணம் தவிர உம் கையில் நாம் தந்து
நீர் கெட்டுப் போக்கியதாய் முன் சொன்ன
அக்கோவணத்திற்கு நிகர் இக்கோவணம் ஆகும் எனக்கூறி
தண்டினில் கட்டியதை அவிழ எடுத்து
இதற்கு சம எடை கொண்ட கோவணம் தருக
533.
மிகவும் நன்று என அமர்நீதியாரும் ஒரு தராசினை நாட்டினார்.
மலையை வில்லாகக் கொண்ட இறைவர்
தராசின் ஒரு தட்டில் தம் கோவணம் வைக்க அமர்நீதியார்
மறுதட்டில் நெய்த கோவணத்தை இட்டார்
அக்கோவணத்திற்கு நேரான எடை வரவேயில்லை.
534.
பெருகிய அன்புடன் தாம்
அடியார்க்கு அளிக்க
முன்பு வைத்திருந்த நீண்ட கோவணங்களை
ஒவ்வொன்றாக எடுத்து உயர்ந்து நிற்கும் தட்டில் வைக்க வைக்க
அப்படியே நின்றது மாற்றமில்லாமல்!
அம்பலத்தாடும் இறைவரது அடியாரும் அதிசயம் அடைந்தார்.
535.
உலகில் இல்லாத மாயை ஆக இருக்கிறதே!
இக்கோவணம் ஒன்றுக்கு
அளவிலாத கோவணங்கள் நிகராகவில்லையே
என அதிசயித்தார்; பிறகு –
மென் ஆடைகள், பட்டுகள் முதலிய பலவும் இட்டார்
அதன்பின்னும்
அந்தத்தட்டு உயர்ந்தே நின்றது
அதனால் மேலும் பூந்துகில் மூட்டைகள் எடுத்து அவற்றில் வைத்தார்.
536.
முட்டு இலாத அன்பர்
அன்பை இடுகின்ற தட்டினை நோக்கினார்
எதிராக நின்ற இறைவரின் தட்டு
அருளால் மட்டுமே தாழும் என்ற வழக்கால்
பட்டுடன் துகில் அநேக அநேக கோடிகள் இட்டபோதும்
கோவணத் தட்டு மட்டும் தாழ்ந்தே நின்றது.
537.
இவ்வாறு நிகழ்வதுகண்டு அடியவர் அஞ்சி
அந்தணர் முன் கூறினார்:
இத்தட்டில் தூய நல்ல ஆடை வர்க்கத்தையே வைத்தேன்
இவை முதலான அளவிலாதவற்றை மென்மேலும் குவித்தாலும்
தட்டு அப்படியே நிற்பதால் இனி என்
மற்ற செல்வங்களையும் இடுவதற்கு
இசைய வேண்டும் என இறைஞ்ச –
538.
உமையை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர்
அவருக்கு இசைந்து –
இனி நாம் இங்கு கூற என்ன உள்ளது ?
அங்கு மற்றுள்ள செல்வங்களேனும் இடுக
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவதுதான்
யாம் வேண்டும் ஒன்று என்று மொழிந்தார்.
539.
நல்ல பொன்னோடும் வெள்ளியோடும் நவமணித் திரளும்
பல்வகை உலோகக் கலவையால் ஆன அளவற்ற பொருளும்
சுமந்து வந்து அத்தட்டில் இட்டும் கூட
அத்தட்டு அவையெல்லாம் தன்னுள் கொண்டு
அசைவின்றி நிற்கக்கண்டு
மேலேயே நின்றது உலகர் வியந்தனர்
540.
தவத்தால் ஆன நான்மறைப் பொருள் நூல்களால் அமைந்து
இறைவர் விரும்பிய
செழும் தட்டில் இட்ட கோவணத்திற்கு
இப்பூமியில் அமர்நீதியாரின் செல்வங்கள் மட்டுமல்ல–
எல்லா உலகங்களும் நேர் நிற்க மாட்டா என்று
கூறுவதும் அதற்கு ஒரு புகழோ ? கிடையாது.
541.
அந்நிலையை கண்ட நிகரிலாத நாயனார்
இறைவன் முன் நின்று
அழியாமல் என்னிடமிருந்த செல்வங்கள் யாவும்
ஒன்று விடாமல் வைத்தேன்! தலைவரே
நானும் என் மனைவியும் மகனும் தராசில்
ஏறிடப் பெறுவதற்கு உன் அருள் வேண்டும் எனத் தொழுதார்.
542.
குற்றமிலா அடிமைத்திறம் புரியும் நாயனார்
எதிரில் நின்று தம் முன்பு அச்சம் உற
இவ்வாறு உரைத்ததும் அவரது நிலையை நிச்சயித்து
தராசு என்கிற ஒரு காரணம் வைத்துக் கொண்டு
உலகத் துன்பம் விட்டு கரையேற்ற எண்ணி
அவர்கள் யாவரும் தராசுத் தட்டில் ஏறிடச் சம்மதித்தார்.
543.
மனம் மகிழ்ந்தார் அவரது மலர்த்திருவடியைத்
சென்னியால் வணங்கினார்
கட்டப்பட்ட மலர் சூடிய மனைவியாருடன் புதல்வருடன்
தானும் தன்னை ஈந்திடும் செங்கையில்
ஈடுபடும் அடியார் கூறுவார் :-
544.
மேற்கொண்ட அன்பினில்
இறைவரின் திருநீற்றில் கொண்ட அடிமைத் திறத்தில்
இதுவரை நாங்கள் தவறவில்லை என்பது உண்மையானால்
இத்தராசு நேர் நிற்பதாகுக என்று கூறி
மழையால் நிறைந்த நீர்நிலைகளும் சோலைகளும் கொண்ட
திருநல்லூர் இறைவரைத் துதித்து
திரு ஐந்தெழுத்தை ஓதினார்
ஏறினார் தராசுத் தட்டில்.
545.
மிக்க அன்புடன் மற்றவர்கள் மகிழ்ந்து உடன் ஏறினர்
அனைத்து அண்டத்திற்கும் தலைவரான இறைவரின்
திரு இடுப்பில் அணியும் கோவணமும்
தொண்டர் அவரிடம் கொண்ட அன்பும், தொண்டும் சமமானதால்
தராசின் தலைக்கோடு நேர் நின்றது.
546.
அறிவால் விளக்கம் பெற்ற அடியாரின் பெருமையை
இவ்வுலகினர் யாவரும் துதித்தார்
எங்கும் உணர்ச்சி உண்டாகத் தொழுதனர்
(ஒளிக்கதிர் வான்வெளி மறையும்படி)
தேவர்கள் புதிய இனிய கற்பக மலர்மழை பொழிந்தனர்.
547.
தேவர் பூமழை வானம் மறையப் பொழிய
அதனிடை ஒரு வழியால் ஒளிந்தவரான
திருபுண்டரம் தரித்த இறைவர்
முதன்மையான திருநல்லூரிலே
உமையும் தாமுமாக அநாதியாய்
தாம் கொள்ளும் கோலத்தைக் காட்சி அளித்தார்.
548.
தொழுது போற்றி அத்தராசின் மீது நின்று துதிக்கும்
குற்றமிலாத அடியாரும் மகனும் மனைவியாரும்
முற்றும் இனிய அருள் பெற்றுத் தம் முன்பு
எக்காலமும் தொழுதிருக்கும் அழிவிலாத
சிவபதம் தந்து எழுந்தருளினார் இறைவர்.
549.
சிவபெருமானின் திருவருளால்
நல்ல பெரிய அந்தத் துலாக்கோலே
அவர்களைக் கொண்டு செல்லும் விமானமாகி மேலே செல்ல
குற்றமற்ற அமர்நீதியாரும் அவர் குடும்பமும்
குறைவற்ற அழிவற்ற வான்பதம் எய்தி
எய்தினர் சிவலோகம் சிவமூர்த்தியுடன்.
அமர்நீதிநாயனார் புராணம் முற்றிற்று.
( திருவருளால் தொடரும் )

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்