கடற்கோள்

This entry is part of 44 in the series 20041230_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


எவரிடம் சொல்லி அழ தெய்வமே
ஏதிலி உறவுகள் ஈழக் கரையிலே
வேருடன் சாய்ந்தனரே

போருக்குத் தப்பியவர் – அங்கு
பொல்லாத வெள்ளப் பெருக்கில் பிழைத்தவர்
ஊருடன் போயினரே
உன்மத்தம் கொண்ட பேய் அலை வாயினில்

மீனவத் தோழர்களே – கிழக்கின்
மீன்பாடும் தேனக சகோதரரே
ஊனை உருக்குதையா நீங்கள்
உதவிக்கு எம்மை அழைத்த பெருங்குரல்
காற்றில் அலைகிறதோ – எங்கள்
கரங்களைத் தேடித் தேடித் தவித்தீரோ.

துன்பங்கள் யாதினிலும் – எங்கள்
துணையென வந்த தமிழகமே
என்ன கொடுமையடி – தாயே
இனிய குழந்தைகள் நீண்ட கரைதொறும்
சிந்திக் கிடந்தனரே
ப:.றுளி ஆற்றுடனே எங்கள்
பண்டைக் குமரியும் தின்ற கொடுங்கடலே
இன்னும் பிரளயமோ – விதியே
எங்களை என் செய்ய நினைத்தாயோ

====
visjayapalan@yahoo.com

Series Navigation