கவிக்கட்டு 39-கனவுதானடி

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சத்தி சக்திதாசன்


ஏக்கத்தில் பெருமூச்சு
என்னையே நானிழந்து
ஏந்திழை உனை எண்ணி
ஏமாற்றத்தில் தோய்ந்தது
ஏய் பெண்ணே கனவுதானடி

நாளையை மதிக்காது
நினவுகளைப் பூஜித்து
நங்கையுனின் வரவு பார்த்து
நாளும் நான் வாழ்ந்திருந்தது
நிச்சயமாய்க் கனவுதானடி

நெஞ்சத்திரையில் உன்னோவியம்
கண்களில் காண்பது உன் வடிவம்
காதினில் கேட்பது உன் கீதம்
கருத்தினில் சுவைப்பது உன் கவிதை
கண்மணியே அது கனவுதானடி

வெண்ணிலவில் உனக்கண்டு
வான்முகிலில் உனை மகிழ்ந்து
வாசமல்லிகையில் உன்னை சுவாசித்து
மழைத்துளியில் உனை நனைந்து
மாயக்காரி, என் வாழ்வு கனவுதானடி

இனியென்னைக் கொல்லாதே
இன்றெனக்குச் சொல்லாதே
இதயத்தில் இனி நில்லாதே
இனியவள் உன் நினவு பொல்லாதே
காதலே உலகிலே கனவுதானடி

0000

உன்னடியின் பின்னாலே

சத்தி சக்திதாசன்

எந்தை மறைந்து இப்புவியிலின்று ஆண்டுகள் ஆறாகினவே
எந்தனறிவு ஏற்றிய தீபம் அணைந்ததும் அன்றாம்

முந்தை அவர் சொன்ன கருத்துக்கள் நிற்குது எந்தன் சிந்தை
முடியா சொந்தம் அவர்தம் வாழ்வு மறைந்தாலுமே

விந்தை இல்லை அவர் வகுத்த பாதை வெற்றி ஈந்தது என்றுமே
விடிவு என் வாழ்வில் விதைத்தது அவர்தம் நினைவுகளே

சிந்தை சிறக்க கூறுவர் அறிவுரை என்றும் அழியா உண்மைகள் அவையே
சிறப்புடன் வாழ கற்றுத்தந்தாய் வாழ்க்கைத் தத்துவம் ஜயனே

மந்தைக் கூட்டம் மாந்தர்க் கூட்டம் அறியார் பெற்றவன் பெருமை
மந்திரம் என்றே கொள்வேன் உந்தன் தத்துவ பாடங்கள்

தந்தை உந்தன் நினைவுத் தினமது ஏற்றி வைத்தேன் தீபமொன்று
தவறாமல் அருள்வாய் வாழ்க்கை வெற்றிக்கு உன் வாழ்த்துக்கள்

—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்