இந்தமுறை

This entry is part of 51 in the series 20041118_Issue

அருண்பிரசாத்


திறந்து திறந்து
மூடுகின்றன உன் அறை
ஜன்னல் கதவுகள்.

வலிமை கூடிய காற்றில்
உள்ளேயும் வெளியேயுமாய்
அறைபடும் திரைத்துணி ஓரங்கள்.

மெளனங்களின் பூச்சுக்களில்
பவித்திரமானதொரு வெறுமை
அமர்ந்து பளபளக்கிறது
தூசு துடைக்கப்பட்ட
அலமாரிகளின் மீது.

உன் குற்றவுணர்வுகளை
முற்றிலும் களைந்துவிட்ட
ஒரு பெருங்களைப்புடனும்

இனியெப்போதும் தேவையிருக்கப்
போவதில்லை
நம் சந்திப்புகள்
என்ற உறுதியுடனும்

நீங்குகிறேன்
உன் அறையைவிட்டு.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation