நன்றி, சங்கரா! நன்றி!!

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

நா.முத்து நிலவன்


*சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு!
சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!!
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!!
நன்றாகப் புரியவைத்த உனக்கு,
நன்றி சங்கரா நன்றி!
நா.முத்து நிலவன்

*பெரியார் சொல்லை
எகத்தாளம் செய்தவர்கள்-
உன் செயல்களால்
தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்-
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லையென்று!
நன்றி சங்கரா நன்றி!

*காவியைக் கழற்றி, தண்டத்தை உதறி,
ஏற்கெனவே நீ இருமுறை ஓடிப் போனாய்!
‘அது தண்டம் தான் ‘ என்று
அப்போதே புரிந்துகொள்ளாதவர்களும்
இப்போது புரிந்துகொண்டார்கள்!
காவியை வெளுத்துக் க(ா)ட்டிய உனக்கு
நன்றி சங்கரா நன்றி!

*உன்காலைத் தொட்டுவணங்க
அப்பாவி மக்களையும் நீ
அப்போது அனுமதிக்கவில்லை!
இப்போது புரிந்துவிட்டது-
உழைக்கும் மக்களைத் தொடக்கூட
உனக்குத்தான் தகுதியில்லை என்று,
அவர்களுக்கும் புரியவைத்த உனக்கு
நன்றி சங்கரா நன்றி!

*உன்காலில் விழுந்ததைப்
பெருமையோடு சொன்னவர்கள்,
இப்போது-
சிறுமையோடு
தலைகுனிந்திருக்கிறார்கள்!

*குளித்துவிட்டுக்
கோவிலுக்குள் வரச்சொன்னாய்!
எந்தக் குளத்தில் விழுந்தாலும்
இந்த அழுக்கைக் கழுவ முடியாது
என்பதைப் புரியவைத்த உனக்கு
நன்றி சங்கரா நன்றி!

*விவேகானந்தரும், திரு.வி.க.வும்,
அடிகளாரும் போன்றோர்
அணிந்தால் தவிர
காவியை நாங்கள்
‘கபட வேடம் ‘என்றே கருதுகிறோம்.
எங்கள் கருத்து சரிதான் என்று
மீண்டும் புரியவைத்த உனக்கு
நன்றி, சங்கரா நன்றி!

*சங்கராச்சாரி முன்
சனாதிபதியும் நிற்கிறாரே என
சாமானியர்கள் பயந்தார்கள்!
அதுதானே உன் சாம்ராச்சியம்!
இப்போது –
நீ நின்று விளக்கம்தர,
நீதிபதி உட்கார்ந்து தீர்ப்பளிக்க
ஜன சட்ட நீதி புரிந்தது!
நன்றி சங்கரா நன்றி!

*காலையில் ஆசி வழங்கி
மாலையில் கைதான
லோக குருவே!
உன்னால் எது நடந்ததோ
அது நன்றாக நடக்கவில்லை என்பதால்
உனக்கு இப்போது
எது நடக்கின்றதோ
அது நன்றாகவே நடக்கின்றது!
‘மடச்சாமிகள் ‘ பற்றி
மக்கள் புரிந்துகொள்ள,
இனி நடக்கப் போவதாவது
நன்றாகவே நடக்கட்டும்!

நன்றி சங்கரா நன்றி!
– நா.முத்து நிலவன்
muthunilavan@yahoo.com

====

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்