நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்

This entry is part of 51 in the series 20041118_Issue

ஈழநாதன்


அடுக்குமாடி குடியிருப்பின்
ஜன்னலோரம்
அலைந்து திரிகிறது
மேகம்.

கைக்கெட்டும் தூரத்தில்
கருவானம்
உண்டு களைத்து
உறக்கத்தில்.

தெருவிளக்கின் ஒளியும்,
அலங்கார வளைவுகளின்
பட்டுத் தெறிப்பும்…
பகலாக்கி விடும் முயற்சியில்
பாதி
வென்ற களிப்புடன்
பளிச்சிட்டபடி.

சந்திப்புகள் தோறும்
சிவப்பும்,
பச்சையும்,
இடையிடை
மஞ்சளுமாய்
வீதிக் கட்டுப்பாட்டு விளக்கின்
வர்ணக்கலவை,
வாகனத்துக்கு எஞ்சியது
வானிலும் தெறிக்கிறது.

நியோன்களின் ஆதிக்கத்தில்
கடை முகப்புகளும்,
கடைப்பெயரும்
கூடவே
தெறிபரப்பில்,
வானமும்.

எங்கு தேடியும்
தென்படாத போக்கில்
நட்சத்திரங்கள்.
நிர்மலமாய் வானம்;

நகரமயமாக்கலில்,
நட்சத்திரங்கள் கூட
காணமற் போய்விட்டன.

ஈழநாதன்
—-
eelanathan@hotmail.com

Series Navigation