கவிக்கட்டு 34-தீராத வலி

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

சத்தி சக்திதாசன்


தீபங்கள் ஏற்றிக் காண்பரோ
வழி ?
என்று தீருமோ என் சோதரங்கள்
வலி ?

ஆண்டுகள் புரண்டன
அடுக்கடுக்காய் ஆயின தீபாவளிகள்
ஆயினும் ஏனொ ஈழத்தில் இன்னும்
அழுகுரல் ஓயவில்லை

சோகங்களின் பிறப்பிடங்கள்
சோதரங்கள் வேற்றிடம் அலையும் நிலை
நரகாசுரன் அழிந்த தினம்
நாளை திறக்குமா விடுதலைக் கதவுகள்

தாய்மண்ணிலே
தம் விலாசம் இழந்தனரே
தம்பி தங்கையர் அகதியாய் அலைகின்றனரே
தாய்க்குலமின்று கதறும் ஒரு நிலமை
தனயர் தம்மை விதைக்கும் படலம்

புண்ணிய தினமாம் இந்தத் தீபாவளி
புதுவழி ஒன்றைத் தோற்றாதோ
புதியதோர் தமிழ்ப்பூ மலராதோ அது
பூக்காதோ கார்த்திகைப் பூவாய்

தீபங்கள் ஏற்றுங்கள் அத்தோடு
தீர்வொன்றை வேண்டுங்கள்
புதுத் துணிகளை சாத்துங்கள் அத்தோடு
புது வாழ்வு எம்மீழ மக்கள் பெற்றிட வேண்டுங்கள்

இத்தீபவளியே ஈழத்து தமிழ்மக்கள்
இன்னல்களோடு கொண்டாடும்
இறுதித் தீபாவளியாகட்டும் என
இறைவனை வேண்டுங்கள்

0000

மேகங்கள் திரண்டால் !

சத்தி சக்திதாசன்

மேகங்கள் திரண்டு வந்தால் கொண்டாட்டம் செடிகளுக்கு
மெத்தென விழும் மழைத்துளிகளின் ஒலி சருகுகளில்

மோகம் திரண்டு வந்தால் திண்டாட்டம் பெண்களுக்கே
மூர்க்கத்தனம் கொண்ட காளையர் முன்னே கசங்கிய மலர்களே

வேகம் திரண்டு வந்தால் துண்டாட்டம் விபத்துக்களின் வடிவிலே
வேதனைகளின் விளைச்சல் அறுவடையும் அங்கேதான்

தாகங்கள் திரண்டு வந்தால் லட்சியங்கள் நிச்சயம் பந்தாட்டம்
தவறாமல் வழியுடைத்து ஊரடையும் துணிவங்கே

காகங்கள் திரண்டு வந்தால் ஒற்றுமைக்கு அது ஒரு திருவிழா
கண்டிருக்கும் இரையங்கு பகிர்ந்துண்னும் குணமதற்கு

போகங்கள் திரண்டு வந்தால் நிறையும் உழவாளி இல்லமதே
பொழுது விடியும் தோழனவன் வாழ்வினிலே அந்தநாளே

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்