யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

இரா.முருகன்


—-

ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ?
எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும்.
பெயர் யஷ்வந்த் ராவ்.

அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர்.
அடுத்த முறை ஜெஜூரி போகும்போது
அவசியம் பார்த்துவிட்டு வாருங்கள்.

ரெண்டாம் தரக் கடவுள்தான் அவர்.
இருப்பது கோவிலுக்கு,
கோவில் மதிலுக்குக் கூட வெளியே.
என்னவோ அங்கே இருக்கப்பட்ட
குஷ்டரோகிகளுக்கும்
கடைக்காரர்களுக்கும் மட்டும்
சொந்தமானவர் போல.

அழகான முகம் கொண்ட கடவுள்களை,
விரைப்பான கவசமணிந்த கடவுள்களை
எனக்குத் தெரியும்தான்.
உங்கள் பொன்னுக்காக
உங்களை முழுக்காட்டுகிறவர்கள்.
உங்கள் ஆத்மாவுக்காக
உங்களை நனைக்கிறவர்கள்.
கனன்று எரியும் தீக்கங்குள் மேல்
உங்களை நடக்கச் செய்கிறவர்கள்.
உங்கள் மனைவி வயிற்றில்
குழந்தை வைக்கிறவர்கள்.
உங்கள் எதிரி உடலில்
கத்தியைப் பாய்ச்சுகிறவர்கள்.
உங்கள் வாழ்க்கையை
எப்படி வாழவேண்டுமென்று கூறும் கடவுள்கள்.
எப்படி உங்கள் பணத்தை
இரட்டிப்பாக்குவது என்று வழிசொல்கிற கடவுள்கள்.
உங்கள் நிலம் நீச்சை எவ்விதம்
மும்மடங்காக்குவது என்று
சொல்லித் தருகிறவர்கள்.
அவர்களைத் தேடி நீங்கள் ஒரு காதம்
தவழ்ந்து வந்ததை
ஒரு கள்ளச் சிரிப்போடு
பார்த்திருக்கும் கடவுள்கள்.
நீங்கள் ஒரு கிரீடம் காணிக்கை தராவிட்டால்
உங்களை முழுகடிக்கும் கடவுள்கள்.

என் ரசனைப்படி
கொஞ்சம் கூடுதல் ஒழுங்கமைப்போடு
அல்லது கொஞ்சம் கூடுதல் நாடகத்தன்மையோடு
இருக்கப்பட்டவர்கள் என்றாலும்
அவர்கள் எல்லாருக்கும்
பல்லாண்டு பல்லாண்டு.

யஷ்வந்த்ராவ் ஒரு கருப்புக் களிமண் பொதி. தபால்பெட்டி போல் பிரகாசம்.
உயிர்ச்சத்தின் உருவம்.
எரிமலைக் குழம்பை உருட்டிச்
சுவரில் எரிந்த மாதிரி
கையில்லை. கால் கிடையாது.
தலையும்தான்.

யஷ்வந்த்ராவ்.
அவர்தான் நீங்கள் சந்திக்க வேண்டிய கடவுள்.
உங்களுக்குக் கையோ காலோ
குறைச்சல் என்றால்
நேராகத் துணைசெய்வார்.
அதியற்புதமாக ஒன்றும் இல்லை.
உலகத்தையே உங்களுக்குத் தருவதாக
உறுதிமொழி எல்லாம் அளிக்கமாட்டார் அவர்.
சொர்க்கத்துக்குக் கிளம்பும் அடுத்த ராக்கெட்டில்
உங்களுக்கு ஒரு இடம் பிடித்துக் கொடுக்க மாட்டார்.
ஆனாலும், உங்களுக்கு ஏதாவது
எலும்பு முறிந்துபோனதென்றால்
கட்டாயம் சரி செய்து விடுவார்.

உங்கள் உடலை முழுசாக்குவார்,
உங்கள் ஆத்மா
தன்னைத்தானே கவனித்துக் கொள்ளட்டும் என்று.

அப்புறம் ஒன்று.
தனக்கே தலையோ கையோ காலோ
இல்லை என்பதால்
உங்களைக் கொஞ்சம் கூடுதலாகப்
புரிந்துகொள்ள
யஷ்வந்த்ராவுக்கு வாய்க்கிறது.

(அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்பு இரா.முருகன்)

அண்மையில் காலமான மராத்தி – ஆங்கிலக் கவிஞர் கொலட்கரை சற்று விரிவாக, முழுமையாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்