வள்ளுவர் தந்த புதுக்கவிதை (அதி:111)– இன்பத்தின் இன்பம்(3)

This entry is part of 54 in the series 20040722_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


இவள்….
ஐம்புலன் அடையும்
இன்பங்கள் அனைத்தும்
அடங்கிய மடந்தை
அனைத்தும் ஒருங்கே
வழங்கும் மங்கை
அணைத்தாள்!
வளையல் கரங்களால்
வளைத்தாள்!

அழகும்
அணிகலனும்
அணிந்த இவளோ
எனக்குப் பிணியானாள்
இவளே
பிணிக்கும் மருந்தானாள்

கூந்தல்
கனக்கும்
மணக்கும்
பூவால்….

பூ வைக்கும்
பூவையின் தோள்களோ

விரும்பும் இன்பத்தை
வழங்கும் பொருள்களே
விரும்பிவந்து
விரும்பித்தரும் இன்பத்தோள்கள்!

அவ்வளவுதானா ?

உடலோடு
உடல்பொருந்தித் தழுவி
உயிருக்கு உயிரூட்டும்
அமுதத்தால்
ஆனத் தோள்கள்

அந்தத் தோள்களில் துயிலும்
இன்பத்திற்கு
இணையான இன்பம்
இவ்வுலகில் இல்லை
எவ்வுலகிலும் இல்லை

விலகினால் அவளோ
கொதிக்கும் வெப்பம்
விரும்பி
நெருங்கினால் அவளோ
குளிரும் நுட்பம்
நெருக்கத்தை நெருக்கும்
இந்த
அதிசய நெருப்பை
எங்கிருந்து பெற்றாள் ?

இந்த
மாந்தளிர் மேனியாளை
மயங்கத் தழுவி
தழுவி மயங்கிப்
பெறுகின்ற இன்பம்
எத்தகைய இன்பம்!

உழைத்துச் சேர்த்ததைப்
பிறருக்குப்
பகுத்துக் கொடுத்து
உண்டு மகிழும்
இன்பத்திற்கு இணையான இன்பம்!

உள்ளத்தால் விரும்பி
உடல் பொருந்தி
காற்றுப்புகாது
கட்டித்தழுவும் இன்பம்
காணவைத்தவள்

ஆனாலும்
கொஞ்சம் ஊடல்…
கொஞ்சம் கெஞ்சல்…
உணர்தல்
பின்
கொஞ்சிப்புணர்தல்
இன்பத்தின் இன்பம்
அல்லவா!

இவளோடு கூடுதல்
எனக்குக்
கூடுதல் இன்பம் ஆகும்

இவள்
தனமும் உடலும்
தினம்தரும் இன்பமோ
கணம்தொறும் நான்
காணாத இன்பம்

கணம்தொறும் நான்
கண்டது
காணாத இன்ப
அறியாமையாகும்

—-
ilango@stamford.com.sg

Series Navigation