காற்றுக்கிளி

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


சாளர ஒரம் அமர்ந்தேன்.

சட்டத்துக்குள் ஓவியம்
இருகண்ணில் ஒருவானம்.

கிளைமறை சூரியன்.
இலைமறை காய்.
சலிக்கும் மாமரச்சல்லடை
தரைமீது
ஒளியும் நிழலும் உதிரக்
குலுங்கும் கிளைகளில்
கொத்துக்காய்கள்.

ஓவியமாய் இருந்தமரம்
ஒருகற்றில் சிலிர்க்க
காகிதமாய்ச் சருகு மட்டும்
கைமீறிப் பறக்க….

காற்றின் வருகையாய்
எங்கிருந்தோ கிளி
இறகடித்து வந்தது.

அதனிடம் மரம்
காம்பு விரல் நீட்டி
காயா…. பழமா…. கேட்டது.

கனிந்த மெளனத்தில்
கண்சிமிட்டும் கிள்ளை….

அவன்….யார்…. ?
அதட்டலில்….

அவனும் ஒடினான்
அழகுக் கிளியும் ஓடியது.

இல்லை
இன்னொருக் கிளியும் ஓடியது.

ஒத்தையில் ஒரு கிளிதான்
என்றிருந்தால்
ஓடும்போதுதான் தெரிகிறது
துணையிருந்த மறுகிளி.

அவன்
கல்லெடுத்துக் குறிவைத்தது
மங்காய்களுக்கா கிளிகளுக்கா ?

கல் ஒன்று
இலக்கு இரண்டா ?

எதற்கும்
கனியும்முன் காய்கவரும்
கள்ளம் ?

மரத்தடி போனேன்….

கிளி
இருந்தகிளை
உலுக்கிப் பறக்கையில்
விழுந்த கனிகள்
இரண்டு…. மூன்று….

இது
இன்னா செய்தார்க்கு
நன்னயம் செய்திடலா ?

எறியவந்தவனைக் கூப்பிட்டு
எறியாமலே பழங்களை
எடுத்துக் கொள்ளச் சொல்லுதலா ?

அவன்
மீண்டும் வருவானோ என்னவோ
கிளிகள் மீண்டும் வரும்தான்.

பயந்தோடுவதும்
பயம்மறந்து
பழக வருவதும் தான்
கிளிமனதா ?

இதற்குள் விழுந்தது
இன்னொரு கனி….

இங்கே
இப்பவும் இருக்குமோ
இன்னுமொரு கிளி….
எனக்குத் துணையாக!
—-
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி