வீடு திரும்புதல்

This entry is part of 52 in the series 20040617_Issue

ஈழநாதன்


இராணுவ வீரனே..!
உன் தோளின் சுடுகலம்
ஒரு புறம் சாற்றி வா
கொஞ்சம் பேசலாம்.

என்னைப் போலவே
வீட்டின் ஏக்கங்கள்
திரும்பிப் போகும் ஏக்கம்
உனக்கும் இருக்கும்!

என் வீட்டைவிட
அழகான சூழல்
செழுமையின் வனப்புகள்
உன் வீட்டில் இருக்கும்!

எனக்கிருப்பது போல்
அன்பான பெற்றோர்
அழகான தங்கை
உனக்கும் இருக்கும்!

விளையாட்டு வயதில்
வீடு விட்டு வந்த ஏக்கம்
நட்பைப் பிரிந்த ஏக்கம்
உனக்கும் இருக்கும்!

எல்லாவற்றுக்கும் மேலாய்
பிறந்த இடத்தையும்
வளர்ந்த மண்ணையும்
பார்க்க ஆசையிருக்கும்!

எனக்கும் அப்படித்தான்
நீங்கள் வைத்திருக்கும்
என்னூரில் போயிருந்து
என் வீடு பார்க்க ஆசை!

வீட்டின் முற்றத்தில்
புழுதி விளையாட ஆசை!
ஊரின் முடுக்கெல்லாம்
ஓடி விளையாட ஆசை!

ஒவ்வொரு பிறந்தநாளும்
நட்ட மரம் பார்க்க ஆசை!
ஒன்றிரண்டு எழுதிப் படித்த
பள்ளிக்கூடம் பார்க்க ஆசை!

நாங்கள்..
எங்கடை வீட்டை போகவேணும்!
நீங்கள்..
உங்கடை வீட்டை போங்கோ!!
—-
eelanathan@hotmail.com

Series Navigation