ஓவிய ரசனை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

ஸ்ரீமங்கை


ஓவியங்களை நான் ரசிப்பதில்லை,
தனது ஓவியங்களை அழித்து,
ஓவியத்திரையினைக் கிழித்துக்கொண்டிருந்த
அந்த முதியவனைச்
சந்தித்ததிலிருந்து.

‘குருர ஓவியனே!
நீ வரைந்த ஓவியங்கள்
ரசிகர்களைப் பார்க்குமுன்னே,
ஏன் இப்படி அழிக்கிறாய் ?. ‘

‘அனைத்த்தையும் வரைந்திட ஆசைகொண்டேன்.
இருந்தது, இல்லாதது,
இருப்பது, செத்தது, உயிரற்றது
எல்லாம் என் தூரிகைத் தூண்டில்களில்
மாட்டிக்கொண்டு, சீலையில் ஒருங்கின.

ஆயின்….

இச்சீலையில் வண்ணங்களைக்
குழைத்துக் கோடுகளைச் சமைத்தபோது
அடர்செறிவாய் உயிர்தந்த ஈரிப்பைக் காணவில்லை.

காற்று என்றும் போல் இன்றும் அதனைக்
களவாடிச் சென்றதாக நான் புலம்புவது
புரியாமல்,
இவ்வறண்ட கோடுகளில் ,
சிறிது சிறிதாய்ச் சிதையும் இச்சீலையில்,
என்ன அழகைக் கண்டதாய்
இம்மூடர்கள் பாராட்டிச் செல்கின்றனர் ?

என் தூரிகைகளை விற்று
வண்ணங்கள் வாங்குகிறேன் என்பது
தெரியாமல்…
வண்ணங்களை விற்று
சீலையைச் செப்பனிடுகிறேன் என்பது
புரியாமல்…
தூரிகை பிடித்துப் புண்ணான
என் விரல்களைப் பரிகசித்து,
படங்களைப் புகழ்ந்து போனார்கள்.

சில ரசிகர்களோ, சீலையில்
விரும்பிய வடிவப் பகுதிகளைக்
கிழித்தெடுத்துச் செல்கின்றனர்.

இம்மூட ரசிகர்களிடமிருந்து
என் ஓவியங்களை எப்படிக் காப்பது என்பதே
என் கவலை.

சீலையின் மூலையை முகர்ந்து
சிறுநீர்கழித்துச் செல்லும்
நாய்களை நான் நம்புகிறேன்.

படைப்பதை அழிப்பது
கடவுளின் கடமையெனில்
நானும் கடவுளே. ‘

சீலையைக் கிழித்து எறிந்து இருளில்.
தனக்குள் புலம்பிப் போன அந்த
ஓவியனை என்றோ
கண்ணாடியில் கண்டதாய் ஒர் நினைவு.

அன்றிலிருந்து …
ஓவியங்களை நான் ரசிப்பதில்லை.
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை