அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா

This entry is part of 48 in the series 20040506_Issue

புகாரி


ஐயா இது அமெரிக்கா

கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை

வீதி அழுக்கும்
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை

அட்டைகளோ அட்டைகள்
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள்
இங்கே

எந்த அட்டை
இருந்தால் என்ன
கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்

O

இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்

கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது

O

ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர் அசிங்கமும் கிடைக்காது
‘ஐலவ்யூ ‘ சொல்ல

கடன் அட்டை மட்டும்
கொஞ்சம் கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்

O

கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை
கிடைத்துவிட்டாலோ

அலாவுதீன் பூதம்
தன் முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு

O

வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த
நாகரிகத் திருடர்கள்

வாசல்வழியை
அடைத்தால்
தொலைபேசி வழி

தொலைபேசி வழியை
அடைத்தால்
மின்னஞ்சல் வழி

மின்னஞ்சல் வழியை
அடைத்தால்
கனவுவழி என்று

வந்து வந்து வழிவர்

O

நொந்த மனமுடன்
ஓர் இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்

‘இங்கு மட்டும்
என்ன வாழுதாம்
அந்தச்
சனியன்தான் ‘

என்கிறாயே
நிசமா தோழா
—-
கடன் அட்டை – Credit Card, கழுத்துப் பட்டை – Neck Tie

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation