என் பிரிய தோழி

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

பாஷா


என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி
இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது
என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை அலைகள்
இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய்
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
அதோ நம்சுவடுகள்
நடுக்கடலில் இறந்துகொண்டிருக்கிறது….

வேறு வழியின்றி பிரிவதாய் நீயும்
உன் சொல்கேட்பதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்
நட்பு….கொலைசெய்யபட்டதா ?
நட்பு….விபத்துக்குள்ளானதா ?
இல்லை….இல்லை அது
மனசாட்சி துறந்த மனங்களிலும் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்….

முகங்கள் முன் புன்னகைபோர்த்தி
இயல்புற்றிருப்பதாய் சுயம்மறைத்து,
நம் உரையாடல் நேரங்களில்
தொலைபேசி மறைத்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த,ஆறுதல்சொல்ல,ஆனந்தபட
அருகில் நீயிருப்பதாய் அவ்வப்போது சூன்யத்தில்
நானுன்னை விளிக்கவும் கூடும்….

எதுவெனினும் இன்றே இறுதி நாளென்பதால்,
சொற்கள் தீர்ந்துபோய்
உன் அழுகைகலந்த சம்மதம்கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மெளனத்தில் சொல்கிறேன்
போய் வருவோம்….என்
பிரிய தோழி!

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா