தமிழவன் கவிதைகள்-ஒன்று

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

தமிழவன்


சிவப்பாய் பூத்து உதிரும் மர
நிழலில் நடந்து செல்கையில் நினைவுவர
பக்கத்தில் வசிக்கும் பழங்கால ஆசிரியரைப்
பார்த்து விடலாமே என்று போனேன்.

ஸ்ரோக்கில் அவஸ்தைபட்டபடி
மெலிந்து வயதாகிப்போய் புரண்டபடி கிடந்தார்
அதட்டும் முரட்டு ஆசாமி.

எப்படி இருக்கிறே நீ சமீபத்தில் எழுதிய
புஸ்தகத்தை ஏன் அனுப்பவில்லை
அதட்டியே கேட்டாலும், தற்கொலை செய்யும்
அளவு உபாதை தாங்கமுடியவில்லை என்றார்.

வலிந்து சாப்பிட வைத்தார்
கைசெத்துப் போச்சென மீண்டும் படுத்தார்

சுவரில் நின்ற கடிகாரமும்
வீடெங்கும் மெளனமும்

போகும்போது சொல்லிவிட்டுப் போ
என்றார்.தூங்கினார் என நினைத்தேன்.
நிறைந்த புஸ்தக அலமாரி காலியாய்.

புறப்பட்டு கேட் தாண்டி பஸ்ஸுக்கு
வந்தேன்
மறந்து ஆழ்ந்திருப்பார் என நினைத்து.
சிவப்பாய் பூத்துக் குலுங்கும் மரநிழல்

—-
carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்