ஒன்று நமது சிந்தனை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

— பா.சத்தியமோகன்


இறைவனின் வீட்டுக்குப் போயிருந்தேன்
நவம்பர் மாதம் கனத்த மழை நல்ல ஈரம்
நனை கூரை, கனைக்கும் பல்லி, மெலிய காற்று
தீபப் பிரகாசம் சிறிது கூட சிறிது உயர
தன்னந்தனியே இறைவன் இருந்தார்
ஐயா….வணக்கம் …அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும்
மணிமொழி மாணிக்க வாசகமும் வள்ளலாரும் பாரதியும்
கொணர்ந்த தமிழைக் கொணரும் நீ யார் என்றே
இறைவன் கேட்க தமிழ்நாட்டுக் கவியென்றேன் என்னை.
‘பார்த்தாயா ! பிரிவினை பேசுகிறாய் …தேசம் ஒருமைப்பட
எழுத வந்தவனே …ஏன் இப்படிப் பேசுகிறாய் ‘ என்றார்.
திகைத்துவிட்டேன்.மிரண்டு விட்டேன். வாயடைத்து விட்டேன்.
தமிழ்நாடு எனச் சொன்னதா துரோகம் ! என்றேன்.
அதுவோ பிரிவினை ! என்றேன்.
‘இறைவன் யான் இருப்பது இந்தியாவில்
என்னை நீ காண வந்தது அந்தியில்
கேள்வி கேள் இந்தியில்
சொல்லிக் கொள்ளாதே உன் மாநிலத்தை
அப்படிச் சொன்னால் இடுவேன் உனை சிறைக்கம்பியில்
மறுபடி திகைத்தேன்.
மறுபடி மிரண்டேன்.
மறுபடி வாயடைத்தேன்.
‘கடவுளே கடவுளே நீயா இப்படி பேசுவது !
நீயுமா இப்படிப் பேசுவது ? ‘
கேட்டேன் கேள்விகள் காதில் விழுந்தது
ஆம் மனைவியின் காதில் விழுந்தது.
ஆம் . நீங்கள் பார்ப்பது ‘கடவுள் ‘ டி.வி சீரியல் என்றாள்.
ஆம் !
உண்மையான கடவுள் ஒரு போதும்
அன்னை தமிழ்நாடு என்றால் தாக்க மாட்டார்
ஒன்று நமது சிந்தனை என்பது அவருக்குத் தெரியும்
கண்களுக்கான நரம்பு வேறு; இதயப்பாதை தமனி வேறு
செவிகளுக்கான நிணநீர் வேறு என்றாலும்
உடம்பு என்பது ஒன்றேதான்!
உண்மைக் கடவுள் இதனை அறிவார்
தொலைக்காட்சியில் வரும் கடவுள் இதனை அறியார்
கல்பனா சாவ்லாவை சாகக் கொடுத்தாலும்
பெண்களுக்கான சாதனை உலகை அறியக் கொடுத்தார் கடவுள்
ஈராக் மீது பாய்ந்து வெறியாட்டம் ஆடி
பேச்சு வார்த்தையால் தீர்க்காமல் ஆளைத் தீர்த்த அமெரிக்கா
நமக்கு ஆணையிட்ட போதும்
இந்திய படைகள் அமெரிக்கா செல்லாமல் முடிவெடுக்கும்
அறிவையும் தெளிவையும் தைரியத்தையும்
நமக்கு கொடுத்தார் கடவுள்.
உணவு பஞ்சம் வந்த போது
பசுமை புரட்சி செய்து இந்திய தானிய அளவை
ஏற்றுமதி செய்யுமளவு உயர்த்திக் காட்டி உதவிட
சி.சுப்பிரமணியத்தை அமைச்சராக்கினார் கடவுள்
எம்.எஸ். சுவாமிநாதனை அளித்தார் கடவுள்
நிஜக் கடவுளைப் பற்றி இப்படி நினைக்கையிலே
அவரே நேரில் வந்தார் ! கை கூப்பினேன். கண்ணீர் மல்கினேன்.
கடவுள் கடவுள் என்றே எழுதுகிறாய்
நான் இருக்கும் கோவில், மலை எதுவும் குறிப்பிடமாட்டாயோ என்றார்
கடவுள் .
கடவுளே நூற்றியிரண்டு கோடி ஜனத் தொகையில்
நல்ல விதமாய் நல்ல நினைப்புடன் நல்லதை எழுதி
நல்ல எண்ணமுடன் இறக்க நினைக்கும் என்னை நீயும்
சோதிக்காதே ! ஓர் நாமமில்லான் நீ ! ஓர் உருவம் உமக்கேது.
இன்னும் சொல்லட்டுமா –
ஒருமைப்பாடே ஒற்றுமையே நீதானே கடவுள் என்றேன்
கடவுள் பாராட்டினார். என்னை எழுதச் சொன்னார்:-
‘ஒன்று பட்டஇந்தியாவைப் பாடு அதுதான் கீதம்
ஒன்று பட்ட ஒற்றுமை எழுது அதுதான் பக்தி
ஒன்று நமது சிந்தனை அதுதான் நான் ‘
ஆயிரம் நாமம் ஆயிரம் பேதம் ஆயினும் முடிவு ஒன்றே.
ஆயிரம் எண்ணங்கள் வலிகள் ஆனாலும் அமைதி ஒன்றே.
சிக்கலைப் பேச சிக்கல் வளரும்
பேதம் பேச பேதம் வளரும்
நன்று பாராட்ட நன்றி வளரும்
ஒன்று பட்டு வாழ ஒற்றுமை வளரும்
அன்பைப் பேச அன்பு வளரும்
நதீ நீர் இணைய நமக்குள் இல்லாமை தீரும்
‘ஒன்று நமது சிந்தனை என்பதை
ஒற்றுமையில் காட்டினர் இந்திய மக்கள் ! ‘ என்று
நாளைய உலக வரலாறு நம்மை எழுதும்,
‘நிச்சயம் நிச்சயம் ஆம் இந்தியா உல்கிற்கு அளிக்கும் ‘ என்று
பாரதியும் என்னோடு சேர்ந்தே சொன்னான்.
———
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்