அவன் அவனாக!

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

புகாரி


அவன் அவனாக வாழ்ந்த
நாட்கள் குறைவு

அவன்மட்டுமல்ல
இங்கே எவனும்
அவனாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதான்!

O

நேற்றைய இருட்டு
இன்றைய வெளிச்சம்

இன்றைய வெளிச்சம்
நாளைய இருட்டு

எதிலும் எவனுக்கும்
தெளிவு என்பது
நிரந்தரமல்ல

சந்தேகம் என்பதும்
சாசுவதமல்ல

ஒரு சந்தேகம் தெளிவாகி
மறுபொழுதில்
அந்தத் தெளிவே
ஒரு சந்தேகமாகி
அவனைத் ‘தேடு ‘ என்று
கட்டளையிட்டுவிடுகிறது

O

இதுதான் நான் என்று
திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம்
அது அன்று தோன்றியது
இன்றல்ல என்பதைத்
தாங்களே அறிந்தபின்
சிலர்
அறிக்கையாய் வெளியிட்டும்
சிலர்
அடிமனதில் பூட்டிக் கொண்டும்
நடக்கிறார்கள்

O

மனதின்
ஏதோ ஓர் ஓரத்தில்
மச்சங்களின்
மிச்சங்களாய் இருந்த
எத்தனையோ

சந்தர்ப்பம்
கைகுலுக்கியபோது
தீப்பொட்டுக்களாய் எழுந்து
கொள்ளியிடும் நெருப்பாய்
விசுவரூபம் எடுத்திருக்கின்றன

O

சிலருக்கு
இது
எங்கிருந்து வந்தது
என்பதே அறியாமல்
திடாரென்று எழுந்துத்தாக்கி
அவர்களின் அவர்களை
குழிதோண்டிப் புதைத்திருக்கிறது

O

ஆக
அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்

கேட்டால்
அறியாமையின்
வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்

எப்படியோ
அவன் அவனாக இல்லை
அவன்
அவனாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதான்

அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே
வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே ?

*

அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி