எண்ணங்களின் வண்ணங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

ராபின்


வண்ணங்கள் – பார்வையின் கோளாறு,
ஒளியின் முழுமை முன்
சிதறிய புலன்களின் பிளவுகள்
இந்த நிறப்பிரிகைகள்

ஒளி அலைகளின் முழுவிரிவை
உள்வாங்க வியலாத பொருட்களில்
முழுமை விட்டுச்சென்ற எச்சங்களின்
குறையலைகள் நிறங்கள்

உடலின் கனம் மறந்துறங்குகையில்
மனதின் அலைகளாய் எழும்
கனவுகளின் வடிவங்கள் சொல்லும்,
‘நிறங்கள் நிஜங்களல்ல ‘

கண்கள் காண்பதும் ஒளியல்ல,
காண்பவை யவற்றின் ஒளியூட்டங்கள்,
அமிழ்ந்து தெறித்துப் பரவும்
அலைகளின் கோலங்கள்

ஒளியும் இருளும் முரண்களல்ல,
முற்றும் பழகித் தெளிந்த
இருளின் கருமையில் தெரியும்
அகத்தின் வெளிச்சம்

குருதியில் பரவும் கருஞ்சிவப்பு
தோல் நிறமிகளின் கருப்புவெளுப்பு
தோற்றங்களின் நிறங்கள் கரைந்தன,
கண்ணீரின் தூய்மையில்

கண்களைச் சிறிது மூடி
மனதின் நினைவுகள் அறுத்து
புலன்களின் ஒருங்கில் காணக்கூடும்
அகவெளியில் பரவும்ஒளி

உள்ளத்தின் ஊற்றாய் நிறைவது
புன்னகை முகத்தில் தெரிவது
வார்த்தைகளின் சாரமாய் அமைவது
யாவுமெங்கும் ஒளியே!

ஒளியின் முழுமை யுணராமல்
மாறும் நிறங்களில் மயங்கும்
மனிதன் காண்பதில்லை – ஒருபோதும்,
உண்மையின் தரிசனம்.

amvrobin@yahoo.com

Series Navigation

ராபின்

ராபின்