தியானத்தைத் தேடி…

This entry is part of 31 in the series 20030525_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உலகின் பிடியினை உதறிச் செல்வது
தியானமென்று தேர்ந்திட வேண்டாம்!
இயற்கை ஏட்டின் எல்லாப்பக்கமும்
உள்ளம் வருடும் உருத்திராட்சமே!

ஈரக்காற்று இதயம் சீண்ட
கடற்கரை மணலில்
கால்களைப் புதையுங்கள்!

ஆடைகட்டிய பாலென ஒளிரும்
அழகு நிலாவை
மேகக் கரைசலில் மெதுவாய்த் தேடுங்கள்!

புல்லின் நுனிகளிற் தபசுகள் செய்யும்
மெல்லிய பனியின்
எல்ைலையைத் தொடுங்கள்!

மழைக்குப் பின்னே மரத்தடி ஒதுங்கி
வீசும் காற்றில் விசிறும் துளிகளில்
உள்ளம் சிரிப்பதை உணர்ந்து பாருங்கள்!

நீரின் பரப்பினை நெருங்கிய கிளைகளின்
இருக்கையில் அமர்ந்து
நீரைக் கால்களால் நீவிப்பாருங்கள்!

உலகின் பிடியினை உதறிச்செல்வது
தியானமென்று தெளிந்திட வேண்டாம்
மானிட வாழ்வின் மகத்துவ மெல்லாம்
வேதமோதிடும் போதி மரங்களே!

கனவும் நனவும், விடிவும் முடிவும்
விழிப்பும் உறக்கமும், சிரிப்பும் அழுகையும்
பார்க்கும் பார்வையும், வேர்க்கும் உறவும்
ஆர்த்திடும் சுகமும் நீர்த்திடும் சோகமும்
தியானப் பாதையின் தெளிந்த சுவடுகள்!
Na.Krishna@wanadoo.fr

Series Navigation