98413-11286

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

வேதா


அதெப்படி ?
அவசரம் அவசரமாக நினைக்க நினைக்க,
அழுத்தி அழுத்தி பேசலாமோ ?

உன்
நினைவு தோன்றும்போதெல்லாம்
தொட்டுத் தொட்டுப் பார்க்கலாமோ ?

பேசும் குரல் இல்லையென்றால்,
பதிவாக்கி வைக்கலாமோ ?

நிற்க, நடக்க,
ஓட, உட்கார,
உண்ண, உறங்க,
துணை ஏதும் தேவையில்லை!
தனி மனித மனசுக்கு
ஒரு தானியங்கி இயந்திரம்!

ஒரு காதில்ி பிடித்தபடி
ஒருக்களித்துப் படுக்கலாம்தான்…
ஒரு கையில் ஏந்தியபடி
ஒற்றையாய் நடக்கலாம்தான்…
சட்டையில் மாட்டியபடி
சாவகாசமாக ஓட்டலாம்தான்….
தனியே பேசியபடி
காலத்தைக் கழிக்கலாம்தான்….

ஹும்! இதிலென்ன உற்சாகம் ?

ஆசைகள், ஆச்சரியங்கள்,
அங்கங்கே தோன்றினாலும்,
‘எப்போது பேசலாம் ? ‘
– எண்ணியபடியே இரு நாட்கள்!

‘சாப்பிட்டிருப்பாயோ ? ‘
– சிந்தனையில் ஒரு காலை…
‘சோர்ந்துபோயிருப்பாயோ ? ‘
– ஒன்றும் செய்ய முடியாத ஏக்கத்தில் ஒரு மாலை….

‘கண்டிப்பாகச் சொல்லவேண்டும்! ‘
– கண்டகண்ட சம்பவமும்
கல்கண்டாய் இனிக்கும் பின்னிரவுப்பொழுதுகள்!

‘நிறையப் பேசணும்! ‘
– நினைத்து நினைத்தே
நித்திரையில் விழும் நீங்காத இரவுகள்!

‘எழுதி எழுதி வைக்கவேண்டும்! ‘
– மறக்காமல் சொல்வதற்காக
மனசையே குறிப்பெடுக்கும்
பயண நேர நிமிடங்கள்!

வாரக்கடைசி வந்தால்
வாசித்து யோசிக்க கவிதையெழுதி,
‘வர்ணனை சரியோ ? ‘
‘வார்த்தைகள் முறையோ ? ‘
‘வாசித்துக் கேட்கவேண்டும்! ‘
– விதம் விதமாய் யோசித்து
விருப்பமாய் வார்த்தை கோர்த்து,
விமர்சனத்தை எதிர்பார்த்து
விடுகதையாய் முடித்துவைக்கும்
வெளிளி மாலையும்,

‘விடியட்டும், பேசலாம் ‘
மறுநாள் காலையும்,
(தொலை)பேசினாலும், பேசாவிட்டாலும்,
அடுத்த தவணைக்காய்
அடக்கிவைத்த ஆர்வங்கள்
அதிசயமாய் பூத்துநிற்க,
ஒரு இன்ப அதிர்ச்சியாய்,
அடுத்த கவிதை கருவாக…..
அதை,
காத்திருந்து கரைசேர்க்க…

காற்றில், கனவுகளில்,
வரம் ஒன்றைப் பெறவேண்டி
விடிய விடிய விழித்திருக்க,
உன்
நினைவுகளில் வாழ்ந்திருக்க,

முடிந்திடுமோ ‘செல்ஃபோனால் ‘ ? ? ?

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா