யார் இந்த பாரதிதாசன் ?

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

புகாரி கனடா


சோலையின் நடுவில்
சொக்கிடும் அழகில்
பூக்களைக் கண்டு
பூரித்து நின்றால் – அவன்
இயற்கை நேசன்!

அந்தச்
சோலையின் வேர்களில்
உழைத்தவன் இரத்தம்
ஓடுதல் கண்டு
உள்ளம் நெகிழ்ந்தால் – அவன்
பாரதிதாசன் !

O

தமிழெனும் மொழியில்
கவிதையின் வனப்பில்
நயங்களைக் கண்டு
நெஞ்சம் குளிர்ந்தால் – அவன்
தமிழின் பிரியன் !

அந்தத்
தமிழெனும் அமுதில்
அசைகின்ற தேரில்
துடிக்கின்ற உயிரை
தனதெனக் கண்டால் – அவன்
பாரதிதாசன் !

O

விதவைச் சிறையில்
வாடும் நிலவின்
வேதனை கண்டு
இதயம் கனத்தால் – அவன்
சமூக நண்பன் !

அந்த
விதவை என்பவள்
முடிந்தவள் அல்ல
வேர்ப்பலா கனிக்கு
நிகரெனக் கண்டால் – அவன்
பாரதிதாசன் !

O

சொல்லும் சொல்லில்
பொருளை வைத்து
சுவைபடச் சொல்லி
அறிவினைத் தந்தால் – அவன்
பாட ஆசிரியன் !

அந்தச்
சொல்லின் உள்ளே
நெருப்பை உமிழும்
புரட்சிக் கருத்தை
பொதித்து வைத்தால் – அவன்
பாரதிதாசன் !

O

மனிதன் முகத்தில்
சாதியைத் தேடி
சாலை ஓரம்
சண்டைபிடித்தால் – அவன்
சாதிக்காரன் !

அந்தச்
சாதியின் நரம்பை
வேரொடு அறுத்து
தூர எறிந்திட
கூர்வாள் தந்தால் – அவன்
பாரதிதாசன் !

O

பிறந்தது முதலாய்ப்
பழகிய பழக்கம்
புகுத்திய வழியில்
வாழ்வினைக் கண்டால் – அவன்
குடும்பக்காரன் !

அந்த
வாழ்க்கை வழியில்
மூடப் பழக்கம்
முற்றாய்க் கொல்லும்
முரசினை ஒலித்தால் – அவன்
பாரதிதாசன் !

O

பெண்மையின் மென்மையில்
பேரெழில் வனப்பில்
அதிசயம் கண்டு
ஆனந்தம் கொண்டால் – அவன்
காதலின் ரசிகன் !

அந்தப்
பெண்களின் உரிமையே
பெரிதெனக் கண்டு
பாரினில் அவளை
போற்றிட எழுந்தால் – அவன்
பாரதிதாசன் !

O

நாட்டை ஆள
நல்லவன் தேடி
ஓட்டுச் சாவடியில்
மைமச்சம் பெற்றால் – அவன்
தேசக் குடிமகன்!

அந்தக்
கோட்டை ஆள்பவன்
ஓட்டை அரசியலை
ஊருக்குச் சொல்லி
உயர்வுக்கு நின்றால் – அவன்
பாரதிதாசன் !

O

நாளும் பொழுதும்
மேற்கே பார்த்து
வாழும் வாழ்வை
மாற்றிச் சென்றால் – அவன்
பட்டணக்காரன் !

அந்த
நாணம் கெட்ட
வாழ்வைப் புதைத்து
தமிழர் வழியை
உரக்கச் சொன்னால் – அவன்
பாரதிதாசன் !

O

இறக்கும் முன்னே
சாதனை ஒன்றை
படைத்தே இறப்பேன்
என்றே நின்றால் – அவன்
நல்லதோர் மனிதன் !

அந்தச்
சாதனை என்பது
பொழுதும் என்னைச்
சார்ந்தே இருப்பது
என்றே வாழ்ந்தால் – அவன்
பாரதிதாசன் !

*

***
பாரதிதாசன் பிறந்தநாள் கவிதை
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி