பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


யார்க்ஷயரில் பட்ஸி பகுதியில் நடைபெற்ற ஒரு ராத்திரி இசை விழாவில் டி.வி பிரபலங்கள் – ஆண்கள் முழுக்க முழுக்க – பெண் உடைகளில் வந்து ஆடிப் பாடியது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீரியசான டிவி அரசியல் விமர்சகர்கள், விளையாட்டு வர்ணனையாளர்கள், தேங்காய்த் துருவிக் கேள்வி போடும் பேட்டியாளர்கள் எல்லாம் குட்டைப் பாவடையோடு மேடையில் ஆடியதை மணிக்கணக்காகத் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பினார்கள்.

இங்கிலாந்தில் வசதி குறைந்த குடும்பங்களில் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வித்தரத்தையும் மேம்படுத்த நாடு முழுக்க நிதி வசூலித்ததின் பகுதியாக நடந்த இந்த விழா முடிவில், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பவுண்ட் இந்தக் குழந்தைகள் நிதிக்கு நன்கொடையாகச் சேர்ந்து விட்டது
ஏதாவது காட்சியில் கதாநாயகன் புடவை கட்டி வருவது தமிழ் சினிமாவில் சர்வசாதாரண நிகழ்ச்சியாக இருந்தாலும் மேற்கில் கிராஸ் டிரஸ்ஸிங் நடைமுறைக்கு மாறுபட்ட, இயல்பான மன, பாலின உணர்ச்சிகளோடு வேறுபட்ட செயலாகத்தான் காணப்பட்டுக் கொண்டிருந்தது இதுவரை. இந்தத் தயிர்வடை சமாசாரத்தை விட சீரியசான ஓரினப் புணர்ச்சி வெகு அண்மையான காலம் வரை சபையில் பேசக்கூடாத விஷயமாக இருந்தது.

ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடும் தம்பதிகளுக்குக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை உண்டா என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், கட்டுப்பெட்டிக் கட்சியாக எல்லோரும் கருதும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தான் ஓரினப் புணர்ச்சியாளர் என்று அறிவித்துப் புருவங்களை உயர வைத்தார். மத குருமார்களில் இப்படிப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் தொடங்கி இருக்கிறது. எல்லாம் எங்கே போய் முடியுமோ ?

லண்டன் ஏர்ள்ஸ் கோர்ட் பாதாள ரயில் நிலையத்தில் ஒரு ராத்திரி பார்த்தது இது.

பாதாள ஸ்டேசனில் பத்துமணி ராத்திரிக்கு
ஏதானும் வண்டிவரக் காத்திருந்தேன் – மோதாமல்
தள்ளாடி வந்து தடுக்கி விழுந்தவள்
உள்ளாடை இல்லாத ஆண்.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்