சகாதேவன் பிரலாபம்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

ஜடாயு


நான் ஐந்தாமவன்.
பஞ்சவர்களின் கூட்டத்தில் பஞ்சமன்.
சகுனியின் சூதாட்டத்தில் பகடையாய்
இறக்கி இழக்கப் பட்ட
முதல் மனித சொத்து.

‘கர்ணனுக்கு அரசுரிமை தந்து
காண்டாபனையும் கொன்றுவிட்டு
சபதச் சிடுக்குகள் பிடித்த பாஞ்சாலியின்
சடையைக் களைந்து எறிந்து
கண்ணா, உன்
கையையும் காலையும் பிடித்துக்
கட்டிப் போட்டால்
வாராமல் காக்கலாம் மாபாரதம் ‘
என்று சொன்னேன்.

கண்ணன், காரணன், என்
கருத்தில் இருந்த காரணத்தைக்
கண்டுகொள்ளவில்லை.
‘மற்றதையெல்லாம் நீ செய்து விட்டாய் என்றாலும்
என்னை எப்படிக் கட்டிப் போடுவாய் ? ‘ என்று
சவால் விட்டான்.
‘யாருக்குத் தெரியும் உன் முழு உருவம் ?
அதை உணர்த்தினால், முயற்சி செய்வேன் ‘ என்றேன்.

கண்ணன் தன் விசுவரூபத்தை எனக்குக்
காட்டும்படியாயிற்று.
கெளரவர் சபையும், காண்டாபனும் பின்னால்
கண்டு மிரளப் போகும்
காலதேவனின் கோர ரூபத்தைக்
கண்டேன்.
கண்கள் கூசின, இதயம் விம்மிற்று
கருத்தழிந்தேன்.
கண்ணனின் கால்களைக்
கட்டிக் கொண்டேன்.
வேறு என்ன செய்வேன் ?
காலம் கண்ணனின் கைகளில் என்று தெரிந்து விட்டது.

அமைதியானவன், அறிஞன் என்று
வரலாறு சில வரிகள்
என்னைப் பற்றி ஏதோ எழுதியது,
அவ்வளவே.
இதிகாச நாயகர்களின்
இடிமுழக்கங்களுக்கிடையில்
என் போன்றோரது குரல்
எப்போதாவது எடுபடுகிறது.
அப்போதும் உடனே
அது அடிபடுகிறது.

சரித்திரம் என்றைக்காவது
சகாதேவர்களைக் கண்டுகொள்ளுமா ?
***
பி.கு : வில்லிப்புத்தூரார் பாரதத்தின் கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில் சகாதேவன், கண்ணன் தொடர்பான இந்த நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

(c) ஜடாயு jataayu@hotmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு