இராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

இராம.கி.


1. உப்புத் தாலாட்டு
————————–
வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று
வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ?
ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது
காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு!

அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி அலக்கொடுக்க,
சின்னவர்கள் மாமன்மார் சேர்ந்துன்னை எதிர்பார்க்க,
உன்பிறப்பை உப்பளத்து நீர்க்கடவில் வார்த்தெடுக்க
என்னைக் குழைவித்த என்னழகே! கண்ணுறங்கு!

உப்பே கதியென்பார், உன்னய்யன் நாள்முழுதும்!
உப்பே இனிவாழ்வு! உண்டபினர் என்னசொல ?
உப்பே உன் தாலாட்டு! உப்பாய் வருநாளில்!
உப்பின் கதையறிவாய்! உந்தன் விதியிதுவோ ?

வெட்டவெளி பார்த்து, வியல்நிலத்தைக் கூன்பார்த்து,
கட்டிக் களிமண்ணைக் கூழாக்கி, நிரவியிட்டு,
சிட்டாள் குலவையிட, செந்தூரான் பேருசொல்லி,
எட்டாளு சேர்ந்து, இணையிணையாத் தாள்மிதிச்சு,

பாத்தி வயலாக்கி, பாய்ச்சுதற்கு நீரிறைவை
போர்த்திப் புகலாக்கி, பொந்தாக மின்னிணைச்சு,
வாய்த்த புரைநீரின் வாகாய் அளச்செறிவை
ஆய்த்துக் கணிச்சு, அறுவடைக்கு நாள்குறிச்சு,

முந்நீர் ஒதுக்கி, முதநிலத்து நீர்பாய்ச்சி,
அந்நீரைத் தேக்கி, அணையணையா வரப்புகட்டி,
தந்நேரில் கதிரும் தகதன்னு காய்ச்சியதால்,
வெந்நீராய் மாற, வெதுவெதுப்புக் கூடிவர,

நீர்த்து நிறைகூட, நெடுக நுரையொழுக,
சேர்த்துச் செறிகூட, சீராய் விதையெழும்ப,
பார்த்துப் படிவமெனப் பலனாய் அளம்வாரப்
பாத்திதனில் நீர்வடிச்சு, பல்வாயிற் கட்டமைச்சு,

செங்கச் செறிவரவே சேராய் அளம் விளைஞ்சு,
வெங்கதிரில் உப்புகையில், வெள்ளென்று மாலவச்சு,
கண்கூசி, இமையிடுங்க, கட்புலனைத் தொலையவச்சு,
தங்கூடை கொள்ளத் தலைநிறைய உப்பேற்றி,

அம்பாரம் சேர்த்து, அதற்குவொரு கூரைகட்டி,
தம்பாரம் கீழிறக்கி தன்னை உருக்கியதால்
சம்பாவும் காசும் தான்பெற்றார் உன்னய்யன்
செம்பாதிச் சூரியனே! செந்தூரா! கண்ணுறங்கு!

நாளும் அளம்பார்த்து நாவும் கரிப்பேற,
கூழும் குறுமீனும் கொண்டவளும் கூடவர
போழும் மணற்காற்றில் போழ்ந்துவிடா உப்பளத்தான்
வாழும் குலவிளக்கே! வடிவழகே! கண்ணுறங்கு!
—————————————————————————————————

மேலே உள்ள பாட்டு தூத்துக்குடிப் பக்கம் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும்
கூலிப் பெண்ணொருத்தியின் உப்புத் தாலாட்டு

உழத்தல் = to labour
ஆலுதல் = அசைதல்
காலுதல் = கத்துதல்
ஆச்சி = பாட்டி
அலக்கொடுத்தல் = துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்
நீர்க்கடவு = pump room with well.
முந்நீர் = கடல் நீர்
முதநிலத்து நீர் = தூத்துக்குடியில் நிலத்தடி நீரையே உப்பு விளைக்கப் பயன்படுத்துவார்கள். அதில் உப்புச்
செறிவு (salt concentration) கடல் நீரில் உள்ள செறிவைக் காட்டிலும் கூட. இதைப் பயனாக்குவதால்
தான் அங்கு உப்பு விளைப்பு ஓரளவாவது ஊதியம் உள்ளதாக இருக்கிறது.
புரைநீர் = borewell water
அளம் = உப்பு
செங்கச் செறி = right concentration
மாலுதல் = மயங்குதல்; உப்பளத்தில் கண்கூசி கண்பார்வை குறையப் பெற்றவர்கள் உண்டு.

***
2. அரபு நுழைவு

ஓடு களத்தில் வானெழு பறனை(1)
ஒத்திடும் போதே, எனக்குள் கற்பனை!
‘கூடொரு கைப்பை மடிக்கணி தானே;
கூறரை மணியில் வெளியே றிடலாம் ‘
——————————————-
பாலத் தோடு பறனை அணைய,
பரபரப் பேறி, பைகளை இடுக்கி,
வேலைக் கெனவே விரைகிற கூட்டம்
விலகும் கதவில் முந்துறத் துடிக்கும்.

வான்புகற்(2) கட்டிடம் கீழ்த்தலம் வந்தால்
வரிசை மூன்று குடிப்புகல்(3) நாடி;
மூம்பைக் கூட்டமே முடியா நிலையில்
சென்னைப் பெருக்கம் நானூற் றைம்பது;

வரிசை; குழப்பம்; வாய்மொழி ஏவல்;
வந்தவர் குழறும் இந்திய மொழிகள்;
புரிசைக் காவலன் மிரட்டும் தோரணை;
பொத்தகம், படிவம் புரியா மொழியில்;

ஒட்டகம் ஓட்டிய சட்டாம் பிள்ளையன்
முட்டாமல் பின்னே முறுவலா செய்வான் ?
அவனுக்கு எல்லாமே மந்தைகள் தானே ?
அதட்டலும் கத்தலும் சரளமாய் வந்தன!

‘ஆங்கே ஈங்கே ஃகூனாக்(4) ஃகேனா(5)
ஆய்! ஓய்! ‘ என்றே அதியிடும் காரம்;
‘நாங்களா உங்களை எம்மூர் அழைத்தோம் ? ‘
நமுட்டுச் சிரிப்பு; முகத்தினில் ஏளனம்;

வீரமும், தீரமும், வியலகப் பேச்சும்,
ஆடி, ஒடுங்கி, அடுத்தவன் புகலில்,
பாரதப் புதல்வர் பைய நகர்ந்தார்;
பட்டயர்(6) ஏளனம் பார்த்தால் முடியுமோ ?

முணுக்கெனக் கோவம் மூள்பவர் கூட,
முப்ப தாயிரம் முகவர்(7)க் களித்து,
தனக்கு நுழைமதி(8) கொண்டதை நிலைக்க,
முணக லோடு முன்நகர் காட்சி

பாம்பணை ஏணிப் பரம்பத வரிசை;
பதட்டம்; கையில் கடப்புகற்(9) பொத்தகம்;
நோன்பும் வேண்டலும் அமைதியும் பார்த்து,
நுழைமதி ஒப்பி, பொளியிட(10)ச் செய்மோ ?

பொளியைப் பெற்றபின், சுங்கம்(11) நுழைந்தால்,
பொட்டலம் பிய்த்து, பொருட்கள் சிதைத்து,
வெளியே எடுத்து, விரவிப் போட்டு,
மருந்தை(12)த் தேடும், மற்றொரு அரபி

ஓரா யிரத்தில் ஒருவனைத் தேடி
ஓய்ந்ததால், வந்தவர் உடமையைக் குலைத்து,
வாரா தீரெனச் சொல்வதும் கலைதான்!
வருகெனச் சொல்ல, முறுவலா வேண்டும் ?

வெந்து கொதித்துச் சுண்ணாம் பாகி,
வெளியே உடைமைத் தரதர விழுத்தும்,
நெஞ்சம் பொறுமை நிறைந்த தமிழன்!!
நினைவெல் லாமே வெள்ளி(13)க் கணக்கு!!!

பின்னே,

வந்த இடத்தில் வாய்தடு மாறி
வையப் போனால், வீட்டில் உறவோர்
சொந்த நிலைமை தொங்கி விடாதோ ?
கொள்க பொறுமை! இன்னும் பொறுமை!

இத்தகைக் காட்சி என்முனே எழுந்தும்,
‘எனக்குமா சோதனை ? ‘ என்ற மதர்ப்பில்
சிற்றதி காரி அனுமதி பெற்று
செல்கிறேன் பின்னே கூக்குரல் எழுந்தது!

‘யாரது அங்கே ? எப்படிச் சென்றான் ?
சுங்கம் கடக்க அத்தனை விரசோ ?
இளையவன் அனுமதித் தூக்கிக் கடாசு
பின்னே போய்நில்! அப்புறம் பார்ப்போம் ‘

என்றொரு பேரதி காரியின் வன்மம்;
இனியொரு இரண்டு அரைமணி நேரம்
ஆண்டவா! என்றேன் வரிசையில் நின்றேன்
‘அத்தனை சோதனை இனிக் கொளல் ஆமோ ?

படுத்தும் அரபியில் இனி நுழை வேனோ ?
பாழும் வேலைக்கு நான்பணி வேனோ ? ‘
பிடித்தொரு உறுதி கொண்டது எப்படி ?
பிள்ளைப் பிறப்பில் தாய்கொளும் உறுதி!
——————————-
வெளியே வந்தால் முகமது நிற்கிறான்
வேகமாய்த் துரவும்(14) சோமாலித் தொண்டன்
‘கெய்ஃப் ஃகாலக், சாதீக் ‘(15)- முகமது கேள்வி
அல்ஃகம்துலில்லா(16), முஃக்முத் – மறுமொழி நான்தான்
——————————————————————————————
புதியதும், அரபியும்:

1. பறனை = plane
2. வான்புகல் = airport
3. குடிப்புகல் = immigration
4. ஃகூனாக் = hunak ( ‘there ‘ in arabic)
5. ஃகேனா = hena ( ‘here ‘ in arabic)
6. பட்டயர் = uniformed men
7. முகவர் = agent
8. நுழைமதி = visa
9. கடப் புகல் = புகற் கடவு என்பதை மாற்றிப் போட்டது; கடவுதல் = to pass; புகல் = port; புகற்
கடவு = pass port
10.பொளியிடுதல் = to stamp
11.சுங்கம் = customs
12.மருந்து = drug; Saudi Arabia is scared about drugs
13.வெள்ளி = American Dollar
14.துரவுதல் = to drive
15.கெய்ஃப் ஃகாலக், சாதீக் = நிலைமை எப்படி இருக்கு ? நண்ப!
16.அல்ஃகம்துலில்லா= கடவுளுக்கு நன்றி (அவரால் நன்றாக இருக்கிறேன் என்பது உட்பொருள்)

***

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.