விடுமுறை

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

அபுல் கலாம் ஆசாத்


விமானம் விட்டிறங்கி
சென்னைக் காற்று முகத்தில் பட்டதும்
சக பயணி முகத்தைச் சுளித்துக்கொண்டார்.

‘சுமோ சொல்லியிருந்தேன்,
ஆனா அம்பாசிடர்தான் வந்திருக்கு’
வாப்பா சொன்னது பிடிக்கவில்லை.

எப்பொழுதும் போல இந்த முறையும்
பெரிய பெட்டி இல்லாததில் லாத்தாவுக்கு வருத்தம்.

என் வருகைக்காக
தற்காலிகமாக
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருக்கும்
மனைவி, உம்மா.

காலாண்டு தேர்வுக்காய்
புத்தகங்களுடன் உறங்கி விழித்து,
‘லீவு சமயத்துல வரக்கூடாதா வாப்பா’
விழி ஓரத்தில் கண்ணீருடன்
பெரிய மகள்.

வாங்கிய; வாங்கப்போகிற
வீட்டுப் பத்திரங்கள்
மேசையின் மேல் என் பார்வைக்காய். . .

பத்து சதவீதம் வருமானமில்லாத
எந்த முதலீடும் வேண்டாமென
மாமனார் சொல்வார்.

‘அறுபது நாட்களில் துபாய் செல்வது எப்படி’
என்று என்னை வகுப்பெடுக்க வேண்டுகிற
தெரு இளைஞர்கள்.

‘எப்படி இருக்கு நம்ம ஊரு’
எண்பதாவது முறையாகக் கேட்கும் சிலர்.

எல்லாவற்றுக்கும் புன்னகைத்துக்கொண்டு
சவரம் செய்யாத முகத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும்
என் பழைய நண்பனைத் தேடினேன்

வேலைதேடி அலைந்த நாட்களை
நினைத்துப்பார்க்க. . .

***
azad_ak@yahoo.com

Series Navigation

அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்