மருமகள்

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

அலர்மேல் மங்கை


உண்ணும் நேரம் வேறு
இங்கு உறங்கும் நேரம் வேறு
நடைமுறைகள் வேறு
மனிதர்களும் வேறு
தோழமை இல்லை இங்கே
வேற்றுமை பல உண்டு
பசிக்கும் நேரம் உண்ண முடியாது
சில நேரம் காய்கறிகள் கூட மிஞ்சாது
வெல்வெட் மெத்தை இருந்தாலும்
அது தாய் வீட்டுச் சீதனமாக இருந்தாலும்
அதில் உறங்குவது, அவளைத் தவிர
மற்ற எல்லோரும்.
வீட்டைச் சுற்றித் தென்னை
தேங்காய் பறிப்பவனும் வருகிறான்
அவளுக்கும் இளனீரும் பிடிக்கும்,
வழுக்கைத் தேங்காயும் பிடிக்கும்
ஆனால் தருவாரில்லை இங்கே…

நினைப்பதைப் பேச முடியாது
பேசும் முன் ஆயிரம் கவனம்
இதைத்தான் பேச வேண்டும்
என்ற மறைமுக நினைவுறுத்தல்கள்
சில நேரம் மூச்சு முட்டும்
பல நேரம் மனிதர்கள் முட்டுகிறார்கள்.
ஆணும், பெண்ணும் சமம் என்று எழுதிய
கல்லூரிக் கட்டுரை நினைவில் வந்து சிரிப்பும் வருகிறது
முதல் தோசை அண்ணன் தட்டில் விழுந்ததே
என்று அம்மாவிடம் போட்ட சண்டைகள்
ஞாபகத்தில் வந்து கண்ணீர் திரளுகிறது
உண்ணும் நேரம் பழகி விடும்
உறங்கும் நேரமும் மாறி விடும்
இளனீரும் வெறுத்து விடும்
மெத்தை சுகம் மறந்து விடும்
ஆண், பெண் சமம் என்ற பேச்செல்லாம் ஓய்ந்து விடும்
பேசவே வேண்டாம் என்பது போன்ற
மெளனம் நித்திய பாஷையாகி விடும்
அவள் இப்போது பெண்ணில்லை
ஒரு உயிரும் இல்லை
வெறும் மருமகள்………

***

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை