நிதான விதைகள்..

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

சேவியர்


0

அழுத்தங்களின்
வயல் வெளிகளில்
நீ
முளைப்பிப்பவற்றை வைத்தே
உன்
உண்மை முகம்
எழுதப்படும்.

அத்தனை தேடல்களும்
சந்திக்கப் பட்டபின்
உதடுகள் விரிவதில்
பெருமை என்ன இருக்கிறது.

பாம்புகளே இல்லா தேசத்தில்
புற்றுகளைப்
பற்றிக் கொள்வதில்
வீரம் என்ன இருக்கிறது.

திறமை என்பது
தவறும் சூழல்
தவறாமல் தொடரும்போது
தவறாமல் இருப்பது,

ஈரக் கூந்தலை
முடிந்து நடக்கும்
மேகப் பெண்கள்
வானில் இருந்தால்,

வற்றிய வயிறுகளோடும்
குழி விழுந்த
கிணற்றுக் கண்களோடும்,
வெடித்த தோல் வயல்கள்
அழுகை நடத்துவதில்லையே.

மழையே விழாத
மலைகளின் இடுக்கிலும்
முளைக்க முடியுமானால்
உன் விழிகளில்
பெருமை வடியலாம்.

வாரிசாய் வந்ததால் மட்டுமே
கிரீடம் சூட்டிக் கொள்ளும்
இளவரசனுக்கு
என்ன பெருமை இருக்க இயலும் ?

நீ யார் என்பதற்கு
உன் அடையாள அட்டை
காட்டுவதே
உனக்குப் பெருமை !

முடியும் என்னும்
நம்பிக்கை முனைகளை
உள்ளுக்குள்
முடிந்து வை.

நிதானமே பிரதானம்.
நிதானி.

அத்தனை அம்புகள்
சீறி வந்தாலும்,
சிரித்தே அவற்றை
சேகரித்து வை.

0

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்