என்று கற்பேனோ ?

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

பசுபதி


நண்பர் குழுநடுவே ‘நானொருநற் சர்வர்போல்
பண்ணுவேன் ‘, என்றசவால் பார்வையுடன் — விண்நோக்கிக்
கோப்பை சுழற்றிக் குஷியாய் முழநீளம்
காப்பியை ஆற்றும் கலை.

கற்றால் கவர்ந்திடலாம் கன்னியரைக் காந்தமென;
மற்றோரும் மொய்த்திடுவர் வண்டுகளாய் — சுற்றத்தில்
கைராசிப் பேர்பெற்றால் காசுமழை கூரைபிய்க்கும்.
கைரேகை பார்க்கும் கலை.

வள்ளென்று பல்காட்டி வந்தவர்தோள் ஏறிச்செய்
ஜொள்ளபி ஷேகத்தைத் துய்த்தபின் — உள்ளத்தில்
பாய்பய வெள்ளத்தைப் பார்வையிலே சொட்டாமல்
நாய்ச்சனியைக் கொஞ்சும் நடிப்பு.

கண்ணாடி முன்நின்று கஷ்டப்பட்(டு) ஒவ்வொன்றாய்ப்
பின்னே வளர்முடியை முன்பரப்பி — மின்னும்
முழுமதியைக் கார்மேகம் மூடுவது போன்று
வழுக்கை மறைத்திடும் வாகு.

Series Navigation

பசுபதி

பசுபதி