துயர்நிலம்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

பாலைநிலவன்


1. இந்த வெறுமையின்
துயர் பரப்பிலிருந்துதான்
என் மனுஷ சரீரம்
பழுப்படைந்து நாறிக் கொண்டுவந்தது
துவேஷங்களின் வன்மம் அருந்தி
ஒளியற்றவனாய் நடந்துவந்து
நான் அடைந்த இடமோ
அலிகளும் தற்கொலையாளர்களும்
மற்றும் அகதிகளும் நிற்கும்
பாழிடம்

கைவிடப்பட்டவர்களும்
துரத்தியடிக்கப்பட்டவர்களும்
ஒழுக்கக் கேடானவர்களும்
சேர்ந்துறங்குகிற கண்ணீர் முற்றத்தில்
கொலைகாரன் போல்
விகாரமடைந்து வந்து நிற்கும் எனக்கு
ஒரு பாய் தந்தால்
ஆசீர்வதிக்கப்பட்ட நித்திரை பனிபோல பெய்யும்

2. எப்படியாயிற்று பாருங்கள்
பொம்மையின் கண்கள் போன்று
செத்த இரண்டு ஒளி அவிந்த
சிறு குழிகளாய்
பார்க்கும்போதே தேம்பி அழவில்லையா
என் விழிகள்.

Series Navigation

பாலைநிலவன்

பாலைநிலவன்