பூக்கள் பேசுவதில்லையா ?

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

சேவியர்.


நான் தான்
பூ பேசுகிறேன்.

மொட்டுக்குள் இருந்தபோதே
முட்டி முட்டிப்
பேசியவைகள் தான்
எல்லாமே.
ஆனாலும்
உங்கள் திறவாச் செவிகளுக்குள்
விழுந்திருக்க வாய்ப்பில்லை.

என்
விலா எலும்புவரை
வண்டுகள் வந்து
கடப்பாரை இறக்கிச் செல்லும்.

வருட வரும்
வண்ணத்துப் பூச்சியும்
மகரந்தம்
திருடித் திரும்பும்.

என்னை
உச்சி மோந்துச் சிரிப்பாள்
இல்லத்தரசி,
ஆனாலும்
அவள் இப்போது
மிதித்து நிற்பது
நேற்றைய ஒரு மலரைத்தான்.

எனக்குப் பிடிக்கவில்லை
இந்த வாழ்க்கை.

தீய்க்குள் புதைக்கப்பட்ட
மெழுகு போலதான்
ஒரு பகலால்
இருட்டிப் போகும்
எனது வாழ்க்கையும்.

மென் கர வருடலும்,
சிறுமியரின் திருடலும்
வாடல் வரையே நீடிக்கும்.

மரணத்தின் போது
மண்டியிட்டழாத சொந்தமெதற்கு
எனக்கு ?

மொட்டாய் முடங்கியபோதே
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருந்தேன்.
முடியவில்லை.

விரிந்தபின்
வாடக் கூடாதென்று
வீம்பாய் இருந்தேன்
இயலவில்லை.

எதுவும் என்னால்
நிர்ணயிக்கப் படாத வாழ்க்கை
எனக்கெதுக்கு.

ஓரமாய்
நீ அமர்ந்து
கவிதை எழுதிப் போகவா ?

***

xavier@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்