பேரூந்து இலக்கம் 86

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

இளங்கோ


மதியமும் இல்லாத
மாலையுஞ் சேராத
அந்தகாரப் பொழுதில்
மனதிற்கு ஒப்பாகாததோர் வேலை

கடைசிநேரத்தில்
பஸ்சிற்கான ஒட்டம்
சன்னலோர இருக்கைதேடி
கழுகாகும் கண்கள்

ஒரவிருக்கையில் அமர்வதில்
ஓர் ஆத்மதிருப்தி
உள்ளே சந்தடியாகிப்போகும்
மொழிகளின் கடைவிாிப்பில்
தனிமையைத் தேக்கிவைக்க
சன்னலோர இருக்கைதான் வசதி

வெளியே விாியும் பார்வையில்
அன்றொருநாள் சிக்கியதோர் விடுதி
வழமைக்கு மாறாய்
முன்வாசல் நாற்காலியில்
நெற்றிநிறைந்த திருநீற்றுடன்
வயதுமுதிர்ந்ததோர் தமிழ்ப்பெண்

தொலைதுாரத்திலிருந்து
ரொரண்டோவைச் சுற்றிப்பார்க்க
இங்கே கூடாரமடிப்பாக்குமென
தொலைபேசிகளில் வானலைகளில்
வைரசாகும் வதந்திபோல்
எனக்குள்ளும் ஒன்றைத்தேக்கினேன்

ஒரு நாள், இருநாள்
இவ்வாறு நீண்டிரு மாதங்கள்
வாரநாட்களில் அதிகங்காணும்
அந்த மூதாட்டியின் அமர்வு
கடைசிக்காலத்தில் எதையும்பேசாது
நோயிற்றிறந்த அம்மம்மாவை
நினைவுபடுத்தியதெனக்கு

என்னைப்பார்த்து
ஆரம்பத்தில் தமிழனாயென
உறுதிப்படுத்தும் ஆழ்பார்வைகள்
தீர்வுக்கு வந்தவுடன்
கடைவாயில் சட்டென
மின்னலாகி மறையும் புன்னகைகள்

எதற்காய் இவருக்கு
இந்த தனிமையின்வாசம்
குறுகுறுப்பதுண்டு நெஞ்சு
பதில்களின் ஆழம் காணமுடியாமல்

என்விடுமுறை கழிந்து
படிப்பிற்காய்
துாரநகர்நோக்கி
இடம்பெயரும்  இலையுதிர்காலமினி

இப்போதெல்லாம்
நீளும் அவாின் பார்வைகள்
பஸ்சை விட்டிறங்கிவந்து
ஏதாவது பேசேன்
என்கின்றதான பாவனைகள்
பேசியென்ன கிழிக்கப்போகிறேனென
உள்மனவிருத்தலின் தேடல்கள் எனக்கு

எங்கள் சொந்தமண்ணில்
எப்படியொரு வாழ்வு இருந்திருக்கக்கூடும்
இந்த வயதுபோனதுகளுக்கு.

***
2000.08.25

Series Navigation

இளங்கோ

இளங்கோ