கூட்டம்…

This entry is part of 20 in the series 20011202_Issue

கு.முனியசாமி


வயிற்றை நிரப்ப
வழியொன்று தேடி
வருமையில் நடக்கும்
ஒரு கூட்டம்…

வயிற்றைக் குறைக்க
பார்க்கினில் நடக்க
காரினில் போகும்
ஒரு கூட்டம்…

காய்ந்த வயிறுடன்
தூக்கம் துறந்து
பாதையில் உருளும்
ஒரு கூட்டம்…

உண்ட உணவு
செரிக்க வேண்டி
மருந்துகள் தேடும்
ஒரு கூட்டம்…

உடலை மறைக்க
ஆடை யின்றி
இருளைத் தேடும்
ஒரு கூட்டம்…

அரைகுறை ஆடையில்
அழகைக் காட்ட
வெளிச்சம் போடும்
ஒரு கூட்டம்…

நடிகனின் உருவைப்
பச்சை குத்தி
இளமையைத் தொலைக்கும்
ஒரு கூட்டம்…

மரத்தைச் சுத்தி
ஆட்டம் போட்டு
காதல் என்கும்
ஒரு கூட்டம்…

அரைகுறைப் படிப்புடன்
அரசியலில் நுழைந்து
அராஜகம் செய்யும்
ஒரு கூட்டம்…

அறிவு ஜீவியாய்
கைகளை மடக்கி
சேவகம் செய்யும்
ஒரு கூட்டம்…

மதமென்ற பேரில்
மடமையைப் புகுத்தி
வன்முறை செய்யும்
ஒரு கூட்டம்…

ஒருவனைப் பிடிக்க
உலகினைத் திரட்டி
ஆஃகானை எரிக்கும்
ஒரு கூட்டம்…

இத்தனை பார்த்தும்
எதுவும் செய்யாது
தன்னலம் தேடும்
தனிக் கூட்டம்…
———————–

Series Navigation